1 | முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். |
2 | உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; உன்னதமானவரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன். |
3 | என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள். |
4 | நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர். |
5 | தேசங்களைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கர்களை அழித்து, அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர். |
6 | எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்; அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது. |
7 | கர்த்தரோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார். |
8 | அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார். |
9 | சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். |
10 | கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள். |
11 | சீயோனில் அரசாளுகிற கர்த்தரைப் புகழ்ந்து பாடி, அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள். |
12 | ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவர்களை நினைக்கிறார்; எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார். |
13 | மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு |
14 | தேவனே நீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். |
15 | தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன. |
16 | கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.) |
17 | துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். |
18 | எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. |
19 | எழுந்தருளும் கர்த்தாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும் |
20 | தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா) |