| 1 | யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல் தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது. |
| 2 | இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். |
| 3 | உயிரைவிட உமது கிருபை நல்லது; என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும். |
| 4 | என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து, உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன். |
| 5 | நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். |
| 6 | என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன். |
| 7 | நீர் எனக்குத் துணையாக இருந்ததினால், உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன். |
| 8 | என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. |
| 9 | என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். |
| 10 | அவர்கள் வாளால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள். |
| 11 | ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்; அவர்பேரில் சத்தியம்செய்கிறவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும். |