வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 59

                   
புத்தகங்களைக் காட்டு
1இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது. என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
2அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும்.
3இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள்.
4என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும், ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்.
5சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா)
6அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
7இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
8ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்; அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர்.
9அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
10என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
11அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே; எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
12அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால் தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக.
13தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி, அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்; இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா)
14அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
15அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
16நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
17என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.