| 1 | கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல் தேவனே, எங்கள் தகப்பன்மார்களுடைய நாட்களாகிய முற்காலத்தில் நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம். |
| 2 | தேவனே நீர் உம்முடைய கையினாலே தேசங்களைத் துரத்தி, இவர்களை நாட்டி; மக்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவச்செய்தீர். |
| 3 | அவர்கள் தங்களுடைய வாளினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் கைகளும் அவர்களைப் பாதுகாக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாக இருந்தபடியால், உம்முடைய வலதுகையும், உம்முடைய கையும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. |
| 4 | தேவனே, நீர் என்னுடைய ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும். |
| 5 | உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை உம்முடைய பெயரினால் மிதிப்போம். |
| 6 | என்னுடைய வில்லை நான் நம்பமாட்டேன், என்னுடைய வாள் என்னை பாதுகாப்பதில்லை. |
| 7 | நீரே எங்களுடைய எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர். |
| 8 | தேவனுக்குள் எப்போதும் மேன்மைபாராட்டுவோம்; உமது பெயரை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா) |
| 9 | நீர் எங்களைத் தள்ளிவிட்டு, வெட்கமடையச்செய்கிறீர்; எங்களுடைய படைகளுடனே செல்லாமலிருக்கிறீர். |
| 10 | எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்; எங்களுடைய பகைவர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள். |
| 11 | நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, தேசங்களுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர். |
| 12 | நீர் உம்முடைய மக்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே. |
| 13 | எங்களுடைய அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்கு ஏளனத்திற்கும், பழிப்புகளுக்கும் வைக்கிறீர். |
| 14 | நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும், மக்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர். |
| 15 | நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், எதிரிகளினிமித்தமும், பழிவாங்குகிறவர்னிமித்தமும் |
| 16 | என்னுடைய அவமானம் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது; என்னுடைய முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது. |
| 17 | இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்செய்யவும் இல்லை. |
| 18 | நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும் |
| 19 | எங்களுடைய இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்களுடைய காலடி உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை. |
| 20 | நாங்கள் எங்கள் தேவனுடைய பெயரை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால் |
| 21 | தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ? இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே. |
| 22 | உமக்காக எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம். |
| 23 | ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாமலிரும். |
| 24 | ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்களுடைய துன்பத்தையும் எங்களுடைய நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்? |
| 25 | எங்களுடைய ஆத்துமா புழுதிவரை தாழ்ந்திருக்கிறது; எங்களுடைய வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது. |
| 26 | எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும். |