| 1 | தாவீதின் பாடல் கர்த்தாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி, என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும். |
| 2 | நீர் கேடகத்தையும் பெரிய கேடகத்தையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும். |
| 3 | என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து: நான் உன்னுடைய இரட்சிப்பு என்று என்னுடைய ஆத்துமாவுக்குச் சொல்லும். |
| 4 | என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் அவமானமடைவார்களாக. |
| 5 | அவர்கள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதரைப்போல ஆவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக. |
| 6 | அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக. |
| 7 | காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள். |
| 8 | அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக. |
| 9 | என்னுடைய ஆத்துமா கர்த்தரில் சந்தோஷித்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். |
| 10 | ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும், ஏழையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவர் யார் கர்த்தாவே, என்று என்னுடைய எலும்புகளெல்லாம் சொல்லும். |
| 11 | கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள். |
| 12 | நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என்னுடைய ஆத்துமா சோர்ந்து போகச்செய்யப்பார்க்கிறார்கள். |
| 13 | அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; என்னுடைய ஜெபமும் என்னுடைய மடியிலே திரும்பவந்தது. |
| 14 | நான் அவனை என்னுடைய நண்பனாகவும் சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல் துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன். |
| 15 | ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள். |
| 16 | அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள். |
| 17 | ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும். |
| 18 | மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான மக்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன். |
| 19 | வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும், காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக. |
| 20 | அவர்கள் சமாதானமாகப் பேசாமல், தேசத்திலே அமைதலாக இருக்கிறவர்களுக்கு விரோதமாக வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள். |
| 21 | எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள். |
| 22 | கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாமலிரும். |
| 23 | என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என்னுடைய வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும். |
| 24 | என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவிடாமலிரும். |
| 25 | அவர்கள் தங்களுடைய இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும். |
| 26 | எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு, எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் அவமானத்தாலும் மூடப்படவேண்டும். |
| 27 | என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லட்டும். |
| 28 | என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும். |