| 1 | நீதிமான்களே, கர்த்தருக்குள் சந்தோஷமாக இருங்கள்; துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும். |
| 2 | சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள். |
| 3 | அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள். |
| 4 | கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. |
| 5 | அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய கருணையினால் நிறைந்திருக்கிறது. |
| 6 | கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது. |
| 7 | அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். |
| 8 | பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக. |
| 9 | அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். |
| 10 | கர்த்தர் தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார். |
| 11 | கர்த்தருடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும். |
| 12 | கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது. |
| 13 | கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார். |
| 14 | தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார். |
| 15 | அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். |
| 16 | எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான். |
| 17 | காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது. |
| 18 | தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; |
| 19 | பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது. |
| 20 | நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். |
| 21 | அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும். |
| 22 | கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. |