| 1 | தாவீதின் பாடல் கர்த்தாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். |
| 2 | என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும். |
| 3 | உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. |
| 4 | கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். |
| 5 | உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். |
| 6 | கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது. |
| 7 | என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். |
| 8 | கர்த்தர் நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். |
| 9 | சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். |
| 10 | கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை. |
| 11 | கர்த்தாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும். |
| 12 | கர்த்தருக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். |
| 13 | அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும். |
| 14 | கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். |
| 15 | என்னுடைய கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். |
| 16 | என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். |
| 17 | என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும். |
| 18 | என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். |
| 19 | என்னுடைய எதிரிகளைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள். |
| 20 | என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன். |
| 21 | உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன். |
| 22 | தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும். |