| 1 | இசைத் தலைவனுக்கு கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் கர்த்தர் அவனைத் தப்புவித்தபோது எழுதப்பட்ட பாடல். என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். |
| 2 | கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார். |
| 3 | துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன். |
| 4 | மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது. |
| 5 | பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. |
| 6 | எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார், என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் காதுகளில் விழுந்தது. |
| 7 | அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன. |
| 8 | அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது. |
| 9 | வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. |
| 10 | கேருபீன்மேல் ஏறி வேகமாகச் சென்றார்; காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார். |
| 11 | இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார். |
| 12 | அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன. |
| 13 | கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன. |
| 14 | தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார். |
| 15 | அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிப்பினாலும் உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன. |
| 16 | உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார். |
| 17 | என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். |
| 18 | என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாக இருந்தார். |
| 19 | என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். |
| 20 | கர்த்தர் என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார். |
| 21 | ஏனெனில் கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை. |
| 22 | அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை. |
| 23 | அவர் முன்பாக நான் உத்தமனாக இருந்து, என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். |
| 24 | ஆகையால் கர்த்தர் என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார். |
| 25 | தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; |
| 26 | புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். |
| 27 | தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர். |
| 28 | தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார். |
| 29 | உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். |
| 30 | தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். |
| 31 | கர்த்தரை தவிர தேவன் யார்? நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்? |
| 32 | என்னைப் பலத்தால் இடைகட்டி, என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. |
| 33 | அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார். |
| 34 | வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். |
| 35 | உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது; உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும். |
| 36 | என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். |
| 37 | என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்தேன்; அவர்களை அழிக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை. |
| 38 | அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன். |
| 39 | போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கச்செய்தீர். |
| 40 | நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி, என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். |
| 41 | அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை. |
| 42 | நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன். |
| 43 | மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள். |
| 44 | அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் என்னிடம் கூனிக்குறுகுகிறார்கள். |
| 45 | அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள். |
| 46 | கர்த்தர் உயிருள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. |
| 47 | அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர். |
| 48 | அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். |
| 49 | இதற்காக கர்த்தாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன். |
| 50 | தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்செய்த தாவீதிற்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார். |