| 1 | கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. |
| 2 | அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக. |
| 3 | அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. |
| 4 | அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. |
| 5 | நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். |
| 6 | கர்த்தர் என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்? |
| 7 | எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் கர்த்தர் என்னோடு இருக்கிறார்; என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன். |
| 8 | மனிதனை நம்புவதைவிட, கர்த்தர் மேல் பற்றுதலாயிருப்பதே நலம். |
| 9 | பிரபுக்களை நம்புவதைவிட கர்த்தர் மேல் பற்றுதலாயிருப்பதே நலம். |
| 10 | எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். |
| 11 | என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். |
| 12 | தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். |
| 13 | நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார். |
| 14 | கர்த்தர் என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார். |
| 15 | நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். |
| 16 | கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். |
| 17 | நான் சாகாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன். |
| 18 | கர்த்தர் என்னைக் கடினமாகத் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. |
| 19 | நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் நுழைந்து கர்த்தரைத் துதிப்பேன். |
| 20 | கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள். |
| 21 | நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன். |
| 22 | வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது. |
| 23 | அது கர்த்தராலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. |
| 24 | இது கர்த்தர் உண்டாக்கின நாள்; இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம். |
| 25 | கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும். |
| 26 | கர்த்தருடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். |
| 27 | கர்த்தர் நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். |
| 28 | நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். |
| 29 | கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. |