| 1 | தாவீதின் பாடல் எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும். |
| 2 | அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்? |
| 3 | நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார். |
| 4 | அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. |
| 5 | அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. |
| 6 | அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. |
| 7 | அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. |
| 8 | அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். |
| 9 | இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். |
| 10 | ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். |
| 11 | கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். |
| 12 | கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார். |
| 13 | கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார். |
| 14 | கர்த்தர் உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். |
| 15 | வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். |
| 16 | வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார். |
| 17 | இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதிக்கமாட்டார்கள். |
| 18 | நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருக்கு நன்றிசொல்லுவோம். அல்லேலூயா. |