| 1 | கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. |
| 2 | கர்த்தரால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு |
| 3 | கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்வார்களாக. |
| 4 | அவர்கள் வாழும் ஊரைக்காணாமல், வனாந்திரத்திலே பாலைவனவழியாக |
| 5 | பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் அலைந்து திரிந்தார்கள். |
| 6 | தங்களுடைய ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார். |
| 7 | வாழும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார். |
| 8 | தாகமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று |
| 9 | அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. |
| 10 | தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள் |
| 11 | காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள். |
| 12 | அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள். |
| 13 | தங்களுடைய ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார். |
| 14 | காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, அவர்களுடைய கட்டுகளை அறுத்தார். |
| 15 | கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று |
| 16 | அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. |
| 17 | புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும் தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். |
| 18 | அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள். |
| 19 | தங்களுடைய ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார். |
| 20 | அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். |
| 21 | அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து |
| 22 | நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக. |
| 23 | கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே |
| 24 | அவர்கள் கர்த்தருடைய செயல்களையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். |
| 25 | அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும். |
| 26 | அவர்கள் வானத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது. |
| 27 | குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. |
| 28 | அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். |
| 29 | கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. |
| 30 | அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார். |
| 31 | அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து |
| 32 | மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக. |
| 33 | அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும் |
| 34 | குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார். |
| 35 | அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி |
| 36 | பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி |
| 37 | வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும். |
| 38 | அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார். |
| 39 | பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள். |
| 40 | அவர் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து |
| 41 | எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார். |
| 42 | உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும். |
| 43 | எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள். |