| 1 | யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: |
| 2 | என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை |
| 3 | என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று |
| 4 | என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். |
| 5 | நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன். |
| 6 | என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடமாட்டேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இருதயம் என்னை நிந்திக்காது. |
| 7 | என் பகைவன் ஆகாதவனைப்போலவும், எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக. |
| 8 | மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கை என்ன? |
| 9 | ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ? |
| 10 | அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ? |
| 11 | தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன். |
| 12 | இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? |
| 13 | பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில் |
| 14 | அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை. |
| 15 | அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை. |
| 16 | அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும் |
| 17 | அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான். |
| 18 | அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும். |
| 19 | அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும். |
| 20 | வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இரவுநேரத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும். |
| 21 | கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவனுடைய இடத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும். |
| 22 | அவர் இவைகளை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்; அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான். |
| 23 | மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள். |