வேதாகமத்தை வாசி

Click to Subscribe

2இராஜாக்கள் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆகாப் மரணமடைந்தபின்பு, மோவாபியர்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கலகம்செய்து பிரிந்துபோனார்கள்.
2அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டின் மர தளத்திலிருந்து விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.
3கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களைச் சந்தித்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்?
4இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், நிச்சயமாக மரணமடைவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.
5அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் ஏன் திரும்பிவந்தீர்கள் என்று அவன் அவர்களிடம் கேட்டான்.
6அதற்கு அவர்கள்: ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.
7அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களைச் சந்தித்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனிதனின் தோற்றம் எப்படி இருந்தது என்று கேட்டான்.
8அதற்கு அவர்கள்: அவன் கம்பளி உடையை அணிந்து, தோல் கச்சையைத் தன் இடுப்பிலே கட்டியிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;
9அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.
10அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.
11மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னைச் சீக்கிரமாக வரச்சொல்லுகிறார் என்றான்.
12எலியா அவர்களுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன்னுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரித்தது.
13மறுபடியும் மூன்றாவது முறை ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; இந்த மூன்றாவது தலைவன் ஏறிவந்து, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனிதனே, என்னுடைய உயிரும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் உயிரும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.
14இதோ, வானத்திலிருந்து அக்கினி இறங்கி, முந்தின இரண்டு தலைவர்களையும், அவரவர்களுடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்தது; இப்போதும் என்னுடைய உயிர் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.
15அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய்
16அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
17எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான்; அவனுக்கு மகன் இல்லாததால், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய மகனான யோராமின் இரண்டாம் வருடத்தில் யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
18அகசியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.