| 1 | “யோபுவே, |
| 2 | “நீ சர்வ வல்லமையுள்ள தேவனோடு விவாதித்தாய். தவறிழைத்த குற்ற முடையவனாக என்னை நீ நியாயந்தீர்த்தாய்! நீ தவறு செய்தாயென இப்போது நீ ஒப்புக்கொள்வாயா? நீ எனக்குப் பதில் கூறுவாயா?” என்றார். |
| 3 | அப்போது யோபு, தேவனுக்குப் பதிலுரைத்தான். அவன்: |
| 4 | “நான் பேசுவதற்கும் தகுதியற்றவன்! நான் உம்மிடம் என்ன கூறமுடியும்? நான் உமக்கு பதில் கூற முடியாது! நான் என் கைகளை வாயின் மீது வைப்பேன். |
| 5 | நான் ஒரு முறை பேசினேன், ஆனால் நான் மீண்டும் பேசமாட்டேன். நான் இருமுறை பேசினேன், ஆனால், இனிமேல் எதுவும் கூறமாட்டேன்” என்றான். |
| 6 | அப்போது புயலிலிருந்து கர்த்தர் மீண்டும் யோபுவிடம் பேசினார். கர்த்தர், |
| 7 | “யோபுவே, உன் இடையைக் கட்டிக்கொண்டு நான் உன்னிடம் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் கூறு, |
| 8 | “யோபுவே, நான் நியாயமற்றவனென்று நீ நினைக்கிறாயா? என்னை தவறிழைக்கும் குற்றவாளியாகக் கூறுவதால், நீ களங்கமற்றவனெனக் காட்ட நினைக்கிறாய்! |
| 9 | யோபுவே, உன் கரங்கள் தேவனுடைய கரங்களைப்போன்று வலிமையுடையனவா? இடிபோல முழங்க வல்ல தேவனுடைய குரலைப்போன்ற குரல் உனக்கு உள்ளதா? |
| 10 | நீ தேவனைப் போலிருந்தால், பெருமையடைந்து உன்னை நீயே மகிமைப்படுத்திக் கொள்ள முடியும். நீ தேவனைப் போலிருந்தால், ஆடையைப்போன்று மகிமையையும், மேன்மையையும் நீ உடுத்திக்கொள்ள முடியும். |
| 11 | நீ தேவனைப் போலிருந்தால், உன் கோபத்தை வெளிப்படுத்தி அகங்காரமுள்ள ஜனங்களைத் தண்டிக்க முடியும். அந்த அகங்காரமுள்ள ஜனங்களைத் தாழ்மையுள்ளோராக்க முடியும். |
| 12 | ஆம், யோபுவே, அந்த அகங்காரம் நிரம்பிய ஜனங்களைப் பார், அவர்களைத் தாழ்மையுள்ளோராக்கு. தீயோர் நிற்குமிடத்திலேயே அவர்களை நசுக்கிவிடு. |
| 13 | அகங்காரமுள்ள ஜனங்கள் எல்லோரையும் மண்ணுக்குள் புதைத்துவிடு. அவர்கள் உடலை துணியால் சுற்றி அவர்களின் கல்லறைக்குள் வைத்துவிடு. |
| 14 | யோபுவே, உன்னால் இக்காரியங்களையெல்லாம் செய்ய முடிந்தால், அப்போது நான் கூட உன்னை வாழ்த்துவேன். உன் சொந்த ஆற்றலால் உன்னை நீ காப்பாற்றிக்கொள்ளக்கூடும் என்பதை நான் ஒப்புக்கொள்வேன். |
| 15 | “யோபுவே, பிகெமோத்தை நீ கவனித்துப்பார். நான் (தேவன்) பிகெமோத்தை உண்டாக்கினேன், உன்னையும் உண்டாக்கினேன். பிகெமோத் பசுவைப்போல, புல்லைத் தின்கிறது. |
| 16 | பிகெமோத்தின் உடம்பு மிகுந்த வல்லமை பொருந்தியது. அதன் வயிற்றின் தசைகள் வல்லமை மிக்கவை. |
| 17 | பிகெமோத்தின் வால் கேதுரு மரத்தைப் போல் ஆற்றலோடு காணப்படுகிறது. அதன் கால் தசைகள் மிகுந்த பலமுள்ளவை. |
| 18 | பிகெமோத்தின் எலும்புகள் வெண்கலம் போன்று பலமுள்ளவை. அதன் கால்கள் இரும்புக் கம்பிகளைப் போன்றவை. |
| 19 | நான் (தேவன்) உண்டாக்கிய மிருகங்களுள் பிகெமோத் மிகவும் வியக்கத்தக்கது. ஆனால் நான் அதை வெல்ல (தோற்கடிக்க) முடியும். |
| 20 | காட்டு மிருகங்கள் விளையாடும் மலைகளில் வளரும் புல்லைப் பிகெமோத் தின்கிறது. |
| 21 | தாமரைக் கொடிகளின் கீழே பிகெமோத் படுத்திருக்கிறது. அது உளையிலுள்ள (சேற்றிலுள்ள) நாணல்களின் கீழ் மறைந்துக்கொள்ளும். |
| 22 | தாமரைக் கொடிகள் அவற்றின் நிழலில் பிகெமோத்தை மறைக்கும். நதியருகே வளரும் அலரி மரங்களின் கீழே அது வாழும். |
| 23 | நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், பிகெமோத் ஓடிப்போய்விடாது. யோர்தான் நதியின் தண்ணீர் அதன் முகத்தில் அடித்தாலும் அது அஞ்சாது. |
| 24 | பிகெமோத்தின் கண்களை ஒருவனும் குருடாக்கி அதனை வலையில் அகப்படுத்தவும் முடியாது. |