1 | தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள். |
2 | ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறு பேர் அவனோடிருந்தார்கள். |
3 | தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவு செய்யும் என்று சொல்லி, |
4 | அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள். |
5 | பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான். |
6 | தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்து நிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும்போது, |
7 | சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ? |
8 | நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான். |
9 | அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன். |
10 | இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான். |
11 | அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள். |
12 | அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான். |
13 | அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான். |
14 | அகிமெலேக் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப் போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்து வருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்? |
15 | இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன் மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான். |
16 | ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன் தகப்பன் வீட்டார் அனைவரும் சாகவே சாகவேண்டும் என்றான். |
17 | பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரரோ, கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை. |
18 | அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல்விழுந்து, சணல் நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான். |
19 | ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான். |
20 | அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய், |
21 | சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான். |
22 | அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே. |
23 | நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனை வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான். |