1 | கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான். |
2 | கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள். |
3 | அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள். |
4 | சிலநாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணினார்கள். |
5 | அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணும்போது கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், |
6 | யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்றார்கள். |
7 | அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான். |
8 | அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள். |
9 | அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான். |
10 | கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன் வார்த்தையின்படியே செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என்றார்கள். |
11 | அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான். |
12 | பின்பு யெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான். |
13 | அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவக்கி யாபோக்மட்டும், யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். |
14 | யெப்தா மறுபடியும் அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது: |
15 | யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் மோவாபியரின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே. |
16 | இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்தரத்தில் சிவந்த சமுத்திரமட்டும் நடந்து, பின்பு காதேசுக்கு வந்து, |
17 | இஸ்ரவேலர் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்துவழியாய்க் கடந்து போகட்டும் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர் காதேசிலே தரித்திருந்து, |
18 | பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள். |
19 | அப்பொழுது இஸ்ரவேலர் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்து வழியாய் எங்கள் ஸ்தானத்திற்குக் கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள். |
20 | சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால், தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான். |
21 | அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி, |
22 | யாபோக்மட்டும், வனாந்தரம் துவக்கி யோர்தான்மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க் கட்டிக்கொண்டார்கள். |
23 | இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா? |
24 | உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் கட்டிக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் கட்டிக்கொள்ளுகிறோம். |
25 | மேலும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைப்பார்க்கிலும் உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலோடே எப்போதாகிலும் வழக்காடினானா? எப்போதாகிலும் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினானா? |
26 | இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியருகான எல்லா ஊர்களிலும், முந்நூறு வருஷம் குடியிருக்கையில், இவ்வளவு காலமாய் நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாதே போனதென்ன? |
27 | நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான். |
28 | ஆனாலும் அம்மோன் புத்திரரின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளுக்குச் செவிகொடாதே போனான். |
29 | அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான். |
30 | அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப்பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால், |
31 | நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான். |
32 | யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். |
33 | அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள்வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள். |
34 | யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை. |
35 | அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான். |
36 | அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் புத்திரராகிய உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள். |
37 | பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதம் தவணைகொடும் என்றாள். |
38 | அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி, |
39 | இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். |
40 | இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று. |