வேதாகமத்தை வாசி

2தெசலோனிக்கேயர் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
2ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
3எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
4அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
5நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?
6அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
7அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
8நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
9அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,
10கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
11ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
12அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
13கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
14நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.
15ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.
16நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,
17உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.