1 | புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. |
2 | ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்? |
3 | ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? |
4 | இத்தனை பாடுகளையும் வீணாய்ப்பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே. |
5 | அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்? |
6 | அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. |
7 | ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. |
8 | மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. |
9 | அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். |
10 | நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. |
11 | நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. |
12 | நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான். |
13 | மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். |
14 | ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. |
15 | சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை. |
16 | ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே. |
17 | ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது. |
18 | அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே. |
19 | அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது. |
20 | மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர். |
21 | அப்படியானால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே. |
22 | அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. |
23 | ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம். |
24 | இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. |
25 | விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே. |
26 | நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. |
27 | ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. |
28 | யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். |
29 | நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள். |