1 | இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம். |
2 | எங்களுக்கு இடங்கொடுங்கள்; நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை. |
3 | உங்களைக் குற்றவாளிகளாக்கும் பொருட்டாக இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களுடனேகூடச் சாகவும் கூடப் பிழைக்கவுந்தக்கதாக எங்களிருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே. |
4 | மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன். |
5 | எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன. |
6 | ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார். |
7 | அவன் வந்ததினாலேமாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் துக்கிப்பையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் கண்டு, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாய்ச் சந்தோஷப்பட்டேன். |
8 | ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுதிறதில்லை. |
9 | இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே. |
10 | தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. |
11 | பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள். |
12 | ஆதலால் நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயஞ்செய்தவனிமித்தமுமல்ல, அநியாயஞ்செய்யப்பட்டவனிமித்தமுமல்ல, தேவனுக்கு முன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற ஜாக்கிரதை உங்களுக்கு வெளிப்படும் பொருட்டே அப்படி எழுதினேன். |
13 | இதினிமித்தம் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலைடந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம். |
14 | இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாய் நான் அவனுடனே சொன்ன யாதொன்றைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் சகலத்தையும் உங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாய்ச் சொன்னதும் சத்தியமாக விளங்கிற்றே. |
15 | மேலும் நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாயிருக்கிறது. |
16 | ஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை உண்டாயிருக்கிறதென்று சந்தோஷப்படுகிறேன். |