1 | அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். |
2 | வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. |
3 | ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும். |
4 | என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். |
5 | நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். |
6 | இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை. |
7 | உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும், நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். |
8 | அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார். |
9 | மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான். |
10 | எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. |
11 | அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய்விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். |
12 | நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். |
13 | அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத்தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். |
14 | அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். |
15 | பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். |
16 | அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. |
17 | அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்துவைக்கிறதற்கு இடமில்லையே; |
18 | நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, |
19 | பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். |
20 | தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். |
21 | தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். |
22 | பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். |
23 | ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது. |
24 | காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். |
25 | கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். |
26 | மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? |
27 | காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். |
28 | இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? |
29 | ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். |
30 | இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். |
31 | தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். |
32 | பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். |
33 | உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. |
34 | உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். |
35 | உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், |
36 | தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள். |
37 | எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். |
38 | அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள். |
39 | திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். |
40 | அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார். |
41 | அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான். |
42 | அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்? |
43 | எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். |
44 | தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். |
45 | அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், |
46 | அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான். |
47 | தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். |
48 | அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள். |
49 | பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன். |
50 | ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். |
51 | நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். |
52 | எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். |
53 | தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். |
54 | பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும். |
55 | தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப் படியுமாகும். |
56 | மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன? |
57 | நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன? |
58 | உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைசாலையில் போடுவான். |
59 | நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். |