1 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
2 | நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது; நீங்கள் கானான்தேசத்தில் சேரும்போது, |
3 | உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம் தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும். |
4 | உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம் வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் ஆதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய், |
5 | அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும். |
6 | மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும். |
7 | உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து, |
8 | ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய், |
9 | அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப் போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும். |
10 | உங்களுக்குக் கீழ்த்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து, |
11 | சேப்பாமிலிருந்து எல்லையானது ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாபரியந்தமும், அங்கேயிருந்து கின்னரேத் கடல் பரியந்தமும் அதின் கீழ்க்கரையோரமாய், |
12 | அங்கேயிருந்து யோர்தான் பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார். |
13 | அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே. |
14 | ரூபன் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், காத் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். |
15 | இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுகந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்றான். |
16 | மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
17 | உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே. |
18 | அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள். |
19 | அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், |
20 | சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய சாமுவேலும், |
21 | பென்யமீன் கோத்திரத்துக்குக் கிஸ்லோனின் குமாரனாகிய எலிதாதும், |
22 | தாண் புத்திரரின் கோத்திரத்துக்கு யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும், |
23 | யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும், |
24 | எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின் குமாரனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும், |
25 | செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும் பிரபுவும், |
26 | இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும், |
27 | ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் சேலோமியின் குமாரனாகிய அகியூத் என்னும் பிரபுவும், |
28 | நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய, பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார். |
29 | கானான்தேசத்திலே இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே. |