1 | பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது. |
2 | அப்பொழுது ஜனங்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; உடனே அக்கினி அவிந்துபோயிற்று. |
3 | கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததினால், அவ்விடத்துக்குத் தபேரா என்று பேரிட்டான். |
4 | பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? |
5 | நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம். |
6 | இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள். |
7 | அந்த மன்னா கொத்துமல்லி விதையம்மாத்திரமும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது. |
8 | ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டு வந்து, எந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது. |
9 | இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும். |
10 | அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த ஜனங்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; கர்த்தருக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது பொல்லாப்பாயிருந்தது. |
11 | அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன? |
12 | இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன் மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ? |
13 | இந்த ஜனங்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே. |
14 | இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது. |
15 | உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான். |
16 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக்கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படிசெய். |
17 | அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன். |
18 | நீ ஜனங்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தம்பண்ணுங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாயிருந்தது என்றும், கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார். |
19 | நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபதுநாள் மாத்திரமல்ல, |
20 | ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள்; அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார். |
21 | அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே. |
22 | ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான். |
23 | அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார். |
24 | அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான். |
25 | கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள். |
26 | அப்பொழுது இரண்டு பேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். |
27 | ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான். |
28 | உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான். |
29 | அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான். |
30 | பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பரும் பாளயத்திலே வந்து சேர்ந்தார்கள். |
31 | அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பிரயாணமட்டும், அந்தப்பக்கம் ஒரு நாள் பிராயணமட்டும், தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது. |
32 | அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள். |
33 | தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார். |
34 | இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான். |
35 | பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸ்ரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸ்ரோத்திலே தங்கினார்கள். |