1 | ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு, |
2 | அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி. |
3 | அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது. |
4 | நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக. |
5 | நீ படைப்பது தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாயிருப்பதாக. |
6 | அதைத் துண்டுதுண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக; இது ஒரு போஜனபலி. |
7 | நீ படைப்பது பொரிக்குஞ்சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக. |
8 | இப்படிச் செய்யப்பட்ட போஜனபலியைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, |
9 | அந்தப் போஜனபலியிலிருந்து ஆசாரியன் ஞாபகக்குறியாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி. |
10 | இந்தப் போஜனபலியில் மீதியானது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது. |
11 | நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம். |
12 | முதற்கனிகளைக் காணிக்கையாகக்கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது. |
13 | நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக. |
14 | முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய். |
15 | அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு போஜனபலி. |
16 | பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபக்குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி. |