1 | கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
2 | மனுபுத்திரனே, மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய மாகோகுதேசத்தானான கோகுக்கு எதிராக நீ உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, |
3 | சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன். |
4 | நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும் குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரை வீரர்களையும், பரிசையும் கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்; அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள். |
5 | அவர்களோடுகூட பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந்தரித்திருப்பவர்கள். |
6 | கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள். |
7 | நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு. |
8 | அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்களிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது, |
9 | பெருங்காற்றைப்போல் எழும்பி வருவாய்; நீயும் உன்னுடைய எல்லா இராணுவங்களும் உன்னோடேகூட இருக்கும் திரளான ஜனங்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள். |
10 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும், மாடுகளையும், ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு, |
11 | உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து, |
12 | நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப்போவேன்; நிர்விசாரமாய்ச் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய். |
13 | சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள். |
14 | ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; என் ஜனமாகிய இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ? |
15 | அப்பொழுது நீயும் உன்னுடனேகூடத் திரளான ஜனங்களும் வடதிசையிலுள்ள உன் ஸ்தானத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து, எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாயிருப்பார்கள். |
16 | நீ தேசத்தைக் கார்மேகம்போல்மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசி நாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை என் தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன். |
17 | உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வ நாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். |
18 | இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என் உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். |
19 | அந்நாளிலே இஸ்ரவேல் தேசத்திலே பெரிய அதிர்ச்சி உண்டாகி, |
20 | என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப்பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும்; பர்வதங்கள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோகும் என்று என் எரிச்சலினாலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். |
21 | என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவனவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும். |
22 | கொள்ளைநோயினாலும் இரத்தம்சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன். |
23 | இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். |