வேதாகமத்தை வாசி

Click to Subscribe

நீதிமொழிகள் 13

                   
புத்தகங்களைக் காட்டு
1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.
2மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும்.
3தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்;
5நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான்.
6நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
7ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு.
8மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான்.
9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோகும்.
10அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
12நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.
14ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
15நற்புத்தி தயையை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.
16விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
17துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஒளஷதம்.
18புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.
19வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.
20ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
21பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
22நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
23ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
24பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
25நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.