1 | கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள். |
2 | ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான். |
3 | அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள். |
4 | இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாய் இணைக்கப்பட்டிருந்தது. |
5 | அந்த ஏபோத்தின்மேலிருக்கும் விசித்திரமான கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது. |
6 | இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள். |
7 | கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து ஞாபகக்குறிக் கற்களாயிருக்கும்படி ஏபோத்துத் தோள்களின்மேல் அவைகளை வைத்தான். |
8 | மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான். |
9 | அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும். ஒரு ஜாண் அகலமுமாக்கி, |
10 | அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், |
11 | இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும், |
12 | மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும், |
13 | நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது. |
14 | இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றில் முத்திரைவெட்டாய் வெட்டியிருந்தது. |
15 | மார்ப்பதக்கத்துக்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி, |
16 | இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து, |
17 | பொன்னினால் செய்த பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி, |
18 | பின்னல் வேலையான அவ்விரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள். |
19 | பின்னும் இரண்டு வளையங்களைப்பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு பக்கங்களிலும் அதின் ஓரத்தில் வைத்து, |
20 | வேறே இரண்டு பொன்வளையங்களையும் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து, |
21 | மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், ஏபோத்திலிருந்து நீங்கிப்போகாதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடே இளநீல நாடாவினாலே, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தப்படியே, கட்டினார்கள். |
22 | ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான். |
23 | அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்துக்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது. |
24 | அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதளம்பழங்களைப் பண்ணி, |
25 | பசும்பொன்னினால் மணிகளையும் பண்ணி, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதளம்பழங்களின் இடைஇடையே தொங்கவைத்தார்கள். |
26 | கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமுமாய் இருந்தது. |
27 | ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும், |
28 | மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும், |
29 | திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே செய்தார்கள். |
30 | பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் பசும்பொன்னினாலே பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாகவெட்டி, |
31 | அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள். |
32 | இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள். |
33 | பின்பு. வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், |
34 | சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், தகசுத்தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும், |
35 | சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், |
36 | மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும், |
37 | சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாய் ஒழுங்குப்படுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும், |
38 | பொற்பீடத்தையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்குதிரையையும், |
39 | வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும், |
40 | பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் முளைகளையும், ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வேலைக்கடுத்த சகல பணிமுட்டுகளையும், |
41 | பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் கொண்டுவந்தார்கள். |
42 | கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள். |
43 | மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான். |