1 | இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள். |
2 | அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து, அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள். |
3 | மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால், |
4 | நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். |
5 | இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைகொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. |
6 | நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார். |
7 | மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான். |
8 | அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான். |
9 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான். |
10 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, |
11 | மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய் மலையின்மேல் இறங்குவார். |
12 | ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான். |
13 | ஒரு கையும் அதைத்தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார். |
14 | மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள். |
15 | அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான். |
16 | மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள். |
17 | அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். |
18 | கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. |
19 | எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார். |
20 | கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான். |
21 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி. |
22 | கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார். |
23 | அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான். |
24 | கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார். |
25 | அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான். |