வேதாகமத்தை வாசி

யாத்திராகமம் 17

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
2அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.
3ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள்.
4மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.
5அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.
6அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
7இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.
8அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்.
9அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
10யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம்பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள்.
11மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
12மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.
13யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.
14பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.
15மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,
16அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.