1 | அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். |
2 | அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: |
3 | ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான். |
4 | ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது: |
5 | நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். |
6 | உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார். |
7 | பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான். |
8 | எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான். |
9 | அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப்பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ, பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான். |
10 | அதற்கு எசேக்கியா: சாயை பாத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டாம்; சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான். |
11 | அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார். |
12 | அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்துக்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். |
13 | எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை. |
14 | அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான். |
15 | அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான். |
16 | அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும். |
17 | இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். |
18 | நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். |
19 | அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான். |
20 | எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. |
21 | எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். |