1 | எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன? |
2 | எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய், நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்றான். |
3 | யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப் போனார்கள். |
4 | யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடே அனுப்பவில்லை. |
5 | கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள். |
6 | யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள். |
7 | யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ளவந்தோம் என்றார்கள். |
8 | யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை. |
9 | யோசேப்பு அவர்களைக்குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான். |
10 | அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம். |
11 | நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள். |
12 | அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான். |
13 | அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள். |
14 | யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை வேவுகாரர் என்று நான் சொன்னது சரி. |
15 | உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன். |
16 | இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி, |
17 | அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான். |
18 | மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடே இருக்கும்படிக்கு ஒன்று செய்யுங்கள். |
19 | நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து, |
20 | உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச்செய்கிறதற்கு இசைந்து: |
21 | நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மனவியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள். |
22 | அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான். |
23 | யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள். |
24 | அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான். |
25 | பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது. |
26 | அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்கள். |
27 | தங்குகிற இடத்திலே அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம் போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கின் வாயிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு, |
28 | தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள். |
29 | அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து: |
30 | தேசத்துக்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று எண்ணி எங்களோடே கடினமாய்ப் பேசினான். |
31 | நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நிஜஸ்தர், வேவுகாரர் அல்ல. |
32 | நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம். |
33 | அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நிஜஸ்தர் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரரில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து, |
34 | உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள். |
35 | அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டுகையில், இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்தப் பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள். |
36 | அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான். |
37 | அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான். |
38 | அதற்கு அவன்: என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றான். |