தலைப்பு:

இத்தீர்க்கதரிசன புத்தகத்தின் ஆரம்ப வரிகளான “எரேமியாவினுடைய வசனங்கள்” (1:1) என்பதிலிருந்தே இப்புத்தகம் தன் தலைப்பைப் பெறுகிறது. ஏனைய தீர்க்கதரிசிகளை விட, எரேமியா இப்புத்தகத்தில் தன்னைக்குறித்து அதிகமாக விவரிக்கிறார். தனது ஊழியம், தன் பிரசங்கத்தைக் கேட்ட மக்களின் பிரதிபலிப்புகள், தனது போதனைகள் மற்றும் தனது தனிப்பட்ட உணர்வுகளைக் குறித்தும் இதில் அதிகமாய் பகிர்ந்துள்ளார். எரேமியா (Jeremiah) என்னும் பெயருக்கு “யெகோவா (கர்த்தர்) அஸ்திபாரம் போடுகிறார்” அல்லது “யெகோவா ஸ்திரப்படுத்துகிறார்”, “நியமிக்கிறார்” என்று அர்த்தமாகும்.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் காலம்: எரேமியா ஆசாரியராகவும் தீர்க்கதரிசியாகவும் ஊழியம் செய்தவர். இவர் இல்க்கியா என்னும் ஆசாரியரின் குமாரன் (2 இராஜாக்கள் 22:8-ல் நியாயப்பிரமாண புத்தகத்தைக் கண்டெடுத்த பிரதான ஆசாரியர் இவர் அல்ல). பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த இவர், எருசலேமுக்கு வடகிழக்கே ஏறக்குறைய 3 கி.மீ தூரத்தில் உள்ள ஆனதோத் (இன்றைய அனட்டா) என்னும் ஊரைச் சேர்ந்தவர் (1:1). “நீ இவ்விடத்தில் பெண் கொள்ளாமலும்... இருக்கக்கடவாய்” (16:1-2) என்று கர்த்தர் சொன்ன வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, எரேமியா திருமணம் செய்துகொள்ளவில்லை. பாருக்கு என்னும் வேதபாரகர் எரேமியாவின் ஊழியத்தில் உதவி செய்து வந்தார். கர்த்தர் எரேமியாவுடனே சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் பாருக்கு ஒரு புத்தகச் சுருளில் எழுதினான் (36:4, 32; 45:1).

எரேமியா ”அழும் தீர்க்கதரிசி” (The Weeping Prophet) என்றும் அறியப்படுகிறார் (9:1; 13:17; 14:17). பாபிலோனியரின் படையெடுப்பினால் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பை முன்னறிவித்ததால், இவர் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் அச்சுறுத்தப்பட்டார்; அவரைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்தன; காவல் கிடங்கில் அடைக்கப்பட்டார்; யோயாக்கீம் ராஜாவிற்குப் பயந்து தப்பியோட நேர்ந்தது; கள்ளத் தீர்க்கதரிசிகளால் அவமானப்படுத்தப்பட்டார்; ஒருமுறை குழியிலும் தள்ளப்பட்டார்.

எரேமியா பெரும்பாலும் யூதாவிலிருந்த தன் சொந்த ஜனங்களிடமே ஊழியம் செய்தார்; சில வேளைகளில் வேற்று தேசங்களுக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தார். பாபிலோனியப் படையெடுப்பு என்னும் தேவனின் நியாயத்தீர்ப்பு வரும் முன்னே, யூதா ஜனங்கள் மனந்திரும்ப வேண்டும் என்று மன்றாடினார் (அதிகாரங்கள் 7, 26). அவர்கள் மனந்திரும்ப மறுத்தபோதும், படையெடுப்பு உறுதியானபோதும், தேசம் முழுமையாக அழியாதபடிக்கு பாபிலோனியரை எதிர்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார் (அதிகாரம் 27). வேற்று நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து, பாபிலோனியருக்கு அடங்கிப்போகும்படி ஆலோசனை கூறினார். மேலும், மற்ற தேசங்களின் மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்புகளையும் முன்னறிவித்தார் (25:12-38; அதிகாரங்கள் 46-51).

எரேமியாவின் ஊழியம், யூதாவின் ராஜாவாகிய யோசியாவின் 13-ஆம் வருடம் (கி.மு. 627) முதல், எருசலேம் வீழ்ச்சியடைந்த கி.மு. 586 வரையிலும் (எரேமியா 39, 40, 52), அதற்கும் மேலாக ஐந்து ராஜாக்களின் காலங்கள் வரை நீண்டது. கி.மு. 586-க்குப் பிறகு, எகிப்திற்குத் தப்பியோடிய யூத மீதியாருடன் எரேமியாவும் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார் (எரேமியா 43, 44). பாபிலோனியர் எகிப்தை முற்றுகையிட்டபோது, எரேமியா பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்டார் என்று ஒரு யூத ரபி பாரம்பரியம் கூறுகிறது. எரேமியா இப்புத்தகத்தின் கடைசி அதிகாரங்களை, பாபிலோனில் சிறையிருந்த யோயாக்கீம் ராஜாவிற்குச் சில சலுகைகள் அளிக்கப்பட்ட காலத்திற்குப் (கி.மு. 561) பின்பு எழுதியிருக்கலாம் (52:31-34). அக்காலத்தில் எரேமியா உயிரோடிருந்தால், அவருக்கு 85 முதல் 90 வயது இருந்திருக்கும்.

பின்னணி மற்றும் அமைப்பு: எரேமியாவின் காலத்து வரலாற்றுப் பின்னணியை 2 இராஜாக்கள் 22-25 மற்றும் 2 நாளாகமம் 34-36 அதிகாரங்களில் வாசிக்கலாம். எரேமியாவின் செய்திகள் 1) ஜனங்களின் பாவம், 2) படையெடுப்பாளரைத் தேவன் அனுப்புதல், 3) முற்றுகையின் கொடுமை, 4) அழிவினால் உண்டாகும் சேதங்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கின்றன. விக்கிரக ஆராதனை மற்றும் பாவத்தினால் வரும் நியாயத்தீர்ப்பைக் குறித்த எரேமியாவின் செய்தி 40 வருடங்களாகப் பிரசங்கிக்கப்பட்டது (கி.மு. 627-586). யோசியா, யோவாகாஸ், யோயாக்கீம், யோயாக்கீன் மற்றும் சிதேக்கியா ஆகிய யூதாவின் கடைசி ஐந்து ராஜாக்களின் காலங்களில் எரேமியாவின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின.

யூதா தேசம் கொடிய விக்கிரக ஆராதனையால் நிறைந்திருந்தது. எசேக்கியா ராஜாவின் தகப்பனாகிய ஆகாஸ், எருசலேமுக்கு வெளியிலுள்ள இன்னோம் பள்ளத்தாக்கில் மோளேகுக்குப் பிள்ளைகளைப் பலியிடும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தான். எசேக்கியா சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து பலிபீடங்களை அகற்றினாலும் (ஏசாயா 36:7), அவன் குமாரன் மனாசே மீண்டும் அத்தீய பழக்கங்களைத் தொடர்ந்தான். இது எரேமியாவின் காலத்திலும் நடந்தது (7:31; 19:5; 32:35). அநேகர் ”வானராக்கினி” என்னும் அந்நிய தேவதையை வழிபட்டார்கள் (7:18; 44:19). யோசியாவின் சீர்திருத்தங்கள் (கி.மு. 622) சில மாற்றங்களைக் கொண்டுவந்தாலும், பாவம் ஜனங்களிடத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. உண்மை இன்மை, நேர்மையின்மை, விபச்சாரம், அநீதி மற்றும் ஏழைகளுக்கு எதிரான கொடுமைகள் தேசத்தில் மலிந்து காணப்பட்டன.

அரசியல் ரீதியாக, அசீரியப் பேரரசு வலுவிழந்து, நினிவே மாநகரம் வீழ்ந்தது (நாகூம் புத்தகம் இதை உறுதிசெய்கிறது). புதிய பாபிலோனியப் பேரரசு எழுச்சி பெற்றது. நேபுகாத்நேச்சார் (தானியேல் 1:1; 2 இராஜாக்கள் 24:10-16; எரேமியா 39, 40, 52) யூதாவின் மீது மூன்று முறை படையெடுத்து வெற்றிகண்டு ஆதிக்கம் செலுத்தினார். யோவேல், மீகா, ஆபகூக், செப்பனியா, எசேக்கியேல் மற்றும் தானியேல் ஆகியோர் எரேமியாவின் காலத்திற்கு முன்பும் பின்பும் வாழ்ந்த சமகாலத் தீர்க்கதரிசிகள் ஆவர்.

இறையியல் மற்றும் வரலாற்றுக் கருப்பொருட்கள்: இப்புத்தகத்தின் முக்கிய கருப்பொருள்: யூதாவின் மேலன தேவனுடைய நியாயத்தீர்ப்பு (அதிகாரங்கள் 1-29) மற்றும் மேசியாவின் ராஜ்யத்தில் அதன் மறுசீரமைப்பு (23:3-8; 30-33). ஏசாயா எதிர்கால மகிமையை அதிகம் பேசினார்; ஆனால், எரேமியா உடனடி நியாயத்தீர்ப்பையும், நிகழ்காலப் பிரச்சினைகளையும் குறித்து அதிகம் பேசினார்.

முக்கியமான ஆவிக்குரிய பாடங்கள்:

  1. மனந்திரும்புதல்: ஜனங்கள் மனந்திரும்பினால் மட்டுமே தேவன் அவர்களைப் பாதுகாப்பார் (18:1-11 - குயவன் மற்றும் களிமண் உவமை).

  2. தேவ அழைப்பு: எரேமியாவின் அழைப்பு மற்றும் ஊழியத்தில் அவர் காட்டிய உறுதி (1:5-19; 15:19-21).

  3. தேவ அன்பு: “நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தை... நினைத்திருக்கிறேன்” (2:1-3) மற்றும் “கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல... உங்களைச் சேர்க்கையாக்கிக் கொண்டேன்” (13:11) போன்ற வார்த்தைகள் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகின்றன.

  4. ஊழியரின் வேதனை: “என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்” (9:1) என்று எரேமியா கதறுகிறார்.

  5. தேவ வார்த்தையின் மகத்துவம்: “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; அவை எனக்குச் சந்தோஷமாயிருந்தது” (15:16).

  6. விசுவாசம்: “உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை” (32:17).

  7. ஜெபம்: தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற ஜெபம் அவசியம் (33:3).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்: எரேமியா புத்தகத்தை வாசிக்கும்போது சில கேள்விகள் எழலாம்:

  1. மோசேயும் சாமுவேலும் நின்றாலும் இந்த ஜனத்துக்காகப் பரிந்து பேசாதே என்று தேவன் ஏன் தடுத்தார்? (15:1; 7:16).

  2. எரேமியா உண்மையில் ஐப்பிராத்து நதி வரை நடந்து சென்றாரா அல்லது தரிசனத்தில் கண்டாரா? (13:4-7).

  3. தன்னுடைய பிறந்த நாளை அறிவித்தவனை எரேமியா ஏன் சபித்தார்? (20:14-18).

  4. கோனியாவின் வம்சத்தின் மேல் கூறப்பட்ட சாபம் கிறிஸ்துவை எவ்வாறு பாதிக்கிறது? (22:30).

  5. இஸ்ரவேலர் தங்கள் தேசத்திற்குத் திரும்புவார்கள் என்ற வாக்குத்தத்தத்தை எப்படிப் புரிந்துகொள்வது? (அதிகாரம் 30-33).

  6. புதிய உடன்படிக்கை (31:31-34) சபைக்கும் இஸ்ரவேலுக்கும் எவ்வாறு நிறைவேறுகிறது?

இப்புத்தகம் காலவரிசைப்படி எழுதப்படாமல், கருப்பொருள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதால், தீர்க்கதரிசனங்களைச் சரியான வரலாற்றுப் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

சுருக்கமான அட்டவணை

I. எரேமியாவின் ஆயத்தம் (1:1-19)

  • அ. எரேமியாவின் சூழ்நிலை (1:1-3)

  • ஆ. எரேமியாவின் அழைப்பு (1:4-10)

  • இ. எரேமியாவின் பொறுப்பு (1:11-19)

II. யூதாவிற்கு அறிவிக்கப்பட்ட செய்திகள் (2:1 – 45:5)

  • அ. யூதாவிற்குக் கண்டனம் (2:1 – 29:32)

    1. செய்திகள் 1 முதல் 14 வரை (பல்வேறு அதிகாரங்களில்)

  • ஆ. ஆறுதலின் செய்தி – புதிய உடன்படிக்கை (30:1 – 33:26)

    1. மறுசீரமைப்பின் முன்னறிவிப்பு மற்றும் விசுவாசம் (30-33)

  • இ. யூதாவின் பேரிடர் (34:1 – 45:5)

    1. வீழ்ச்சிக்கு முன், வீழ்ச்சியின் போது, மற்றும் பின் நடந்த நிகழ்வுகள்.

III. தேசங்களின் மீதான நியாயத்தீர்ப்புகள் (46:1 – 51:64)

  • எகிப்து, பெலிஸ்தியா, மோவாப், அம்மோன், ஏதோம், தமஸ்கு, அரபியா, ஏலாம் மற்றும் பாபிலோன் தேசங்களுக்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள்.

IV. எருசலேமின் வீழ்ச்சி (52:1-34)

  • அ. எருசலேம் அழிவு மற்றும் சிறையிருப்பு (52:1-30)

  • ஆ. கோனியாவின் விடுதலை (52:31-34)

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.