புத்தகத்தின் பின்னணி, யாரால் எழுதப்பட்டது, எழுதப்பட்ட காலப்பகுதி மற்றும் அடிப்படையான செய்தி புத்தகத்தின் சுருக்கம் தொடர்ந்து வாசிக்க...

 

zechariah

தலைப்பு:

யூத மற்றும் கிறிஸ்தவ உலகளாவிய பாரம்பரியம், சகரியா தீர்க்கதரிசி தான் இந்த புத்தகத்திற்கு ஆசிரியர் என்பதனை அங்கீகரிக்கின்றன. இவரது பெயரை பழைய ஏற்பாட்டில் வேறு 29 மனிதர்களும் பெற்றிருக்கிறார்கள் – இந்த பெயரின் அர்த்தம் “கர்த்தர் நினைவில் வைத்திருக்கிறார்” என்பது. மேசியாவைக் குறித்து தீர்க்கதரிசிகள் எழுதின புத்தகங்களில் இப்புத்தகம் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திற்கு அடுத்தபடியாக வரிசையில் இரண்டாவது புத்தகமாக இருக்கிறது. 

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

எரேமியா மற்றும் எசேக்கியேல் போல சகரியாவும் ஆசாரியராக இருந்தார் (நெகேமியா 12:12-16). பாரம்பரியத்தின்படி, நெகேமியாவால் ஆரம்பிக்கப்பட்டு எஸ்றாவினால் தலைமை ஏற்று வழிநடத்தப்பட்ட 120 பேர் அடங்கிய மாபெரும் ஜெப ஆலயத்தின் பேரவையில் சகரியாவும் ஓர் அங்கத்தினர். இந்த பேரவைதான் பின்நாட்களில் தேசத்தை ஆளும் தலைவர்களைக் கொண்ட சனகெரிப்பு சங்கமாக உருமாறியது. சகரியா பிறந்தது பாபிலோனில், ஆனால் செருபாபேல் மற்றும் யோசுவாவின் தலைமையில் சொந்த தேசத்திற்கு திரும்பிய முதல் நாடு திரும்பினோர் கூட்டத்தாரோடு எருசலேம் வந்து, தன் பாட்டன் இத்தோவிடம் வந்து சேர்ந்தார் (நெகே.12:4). இவர் இத்தோவின் குமாரன் என்று அழைக்கப்பட்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது (எஸ்றா5:1; 6:14; நெகே.12:16) சகரியாவின் தகப்பன் பெரேக்கியா – அவர் தகப்பனாருக்குப் பின் ஆசாரியராக பொறுப்பேற்கும் முன்னே சிறுவயதிலேயே மரித்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

சகரியா புத்தகத்தின் ஆரம்பவரிகள், தரியு ராஜாவின் இரண்டாம் ஆண்டு கி.மு.520ல் எழுதப்பட்டது (1:1). பெர்சிய ராஜாவாகிய கோரேசு மரித்தபின் அவரைத் தொடர்ந்து எகிப்தை மேற்கொண்ட கேம்பிஸெஸ் (கி.மு.530-521) அரியணையில் அமர்ந்தார். அவருக்கு மகன் இல்லாதிருந்தது, அவர் தற்கொலை கொண்ட வேளையில் புரட்சியினை அடக்கி, தரியு அந்த பட்டத்திற்கு வந்தார். சகரியா ஆகாய் தீர்க்கதரிசியின் சமகாலத்தவர் – ஆகாய் அறிமுகத்தில் இருந்து அறிந்து கொள்வது ஆகாயின் ஊழிய நாட்களில் அவருக்கு 2 மாதங்களுக்கு பின் சகரியா தீர்க்கதரிசனம் சொல்லத் தொடங்குகிறார். 2:4 வசனத்தில் வாலிபன் என அழைக்கப்படுவதால், ஆகாயைக் காட்டிலும் சகரியா வயதில் குறைந்தவராக இருந்திருக்கக்கூடும். இவரின் ஊழிய நாட்கள் எவ்வளவு என்பது உறுதியாக தெரியவில்லை.

இவரின் கடைசி தீர்க்கதரிசனத்தின் காலம் (7:1) இவரின் முதல் தீர்க்கதரிசனத்தில் இருந்து 2 வருடங்கள் கழித்து, குறிப்பிட்டுள்ளது, இவருடைய தீர்க்கதரிசன ஊழிய நாட்களும் ஆகாய் தீர்க்கதரிசியின் ஊழிய நாட்களும் ஒன்று போல் காணப்படுகிறது (கி.மு. 520-518). அதிகாரங்கள் 9-14 இவருடைய ஊழியத்தின் கடைசி நாட்களில் வெளிப்பட்டவை எனக் காணப்படுகிறது. எழுத்துநடையில் வித்தியாசம் மற்றும் கிரீஸ் தேசத்தை குறித்த குறிப்பு காணப்படுகின்றபடியால், தரியு ராஜாவின் காலம் கி.மு. 521-486க்கு பிறகு, கி.மு.480-470 காலத்தில், அதாவது எஸ்தரை பெரிசிய தேசத்து ராஜாத்தியாக மாற்றின அகாஸ்வேரு நாட்களில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம். மத்தேயு 23:35-ன்படி தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் ஏற்கெனவே நாம் அறிந்திருக்கும் சகரியா கல்லெறிந்து கொலைசெய்யப்பட்டது போல (2நாளா.24:20,21) - இவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பின்னணி மற்றும் அமைப்பு

சகரியாவின் வரலாற்று பின்னணி மற்றும் அமைப்பு அவருடைய சமகாலத்து தீர்க்கதரிசி ஆகாயின் அமைப்பைப் போன்றதே. கி.மு.538ல் பெர்சிய ராஜா கோரேசு இஸ்ரவேலில் இருந்து சிறைபிடித்து வந்தவர்களை அவர்களது சொந்த தேசத்திற்குச் செல்ல விடுவித்தார் (எஸ்றா 1:1-4). அதில் ஏறக்குறைய 50,000 பேர் பாபிலோனில் இருந்து தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பினர். அவர்கள் உடனடியாக தேவாலயத்தை திரும்ப எடுத்துக் கட்ட ஆரம்பித்தனர் (எஸ்றா 3:1 – 4:5), ஆனால் அண்டை நாட்டவரின் எதிர்ப்பினைத் தொடந்து உள்நாட்டவரின் அலட்சியத்தால் ஆலயம் கட்டும் வேலை கைவிடப்பட்டது (எஸ்றா 4:24). பதினாறு வருடங்கள் கழித்து (எஸ்றா 5:1,2) ஆகாய் மற்றும் சகரியா தீர்க்கதரிசிகள் ஜனங்கள் தேவாலயத்தை திரும்பக் கட்டத் தூண்டும்படி,  தேவனால் எழுப்பபட்டனர். இதினால், தேவாலயம் கி.மு. 516-ல் நான்கு வருடங்கள் கழித்து கட்டி முடிக்கப்பட்டது (எஸ்றா 6:15).

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

ஜனங்களை அலட்சியப்போக்கில் இருந்து வெளியேற்றி, தேவனுடைய ஆலயத்தை திரும்ப எடுத்துக்கட்ட அறைகூவல் விட்ட ஆகாய் தீர்க்கதரிசியுடன் சகரியாவும் சேர்ந்து கொண்டார். ஜனங்களின் அலட்சியப்போக்கை கண்டிப்பதாகவும், அவர்களின் பாவத்தை, தேவனிடத்தில் நம்பிக்கை இல்லாதிருந்ததை உணர்த்துவதாக ஆகாய் தீர்க்கத்ரிசியின் வார்த்தைகள் இருந்தன. ஆகாய் எழுப்புதலை ஏற்படுத்தியபொது,  ஜனங்களின் விசுவாசத்தை பலப்படுத்துவதிலும், ஜனங்களை மனம்திரும்பசெய்வதிலும், அவர்களுக்குரிய எதிர்கால ஆசீர்வாதம் காத்திருக்கிறது என்ற நிச்சயத்தை அளிப்பதிலும் சகரியா பின் தொடர் பணிசெய்தார். ஒருநாளில் மேசியா வந்து அந்த ஆலயத்தில் வாசம் செய்வார் என்று வாக்குத்தத்தம் இருக்கிறபடியால், ஆலயத்தை திரும்ப எடுத்து கட்டவேண்டும் எனக் கூறி சகரியா ஜனங்களை உற்சாகப்படுத்தினார். ஜனங்கள் ஆலயத்தைக் கட்டுவது தற்காலத்திற்காக மட்டும் அல்ல, எதிர்காலத்து நம்பிக்கையாகிய மேசியாவிற்காக கட்ட வேண்டும் என உற்சாகப்படுத்தினார். புறஜாதியாரினால் ஒடுக்கப்பட்ட (1:8-12) ஜனங்களிடம் சகரியா – கர்த்தர் ஜனங்களுக்கு அளித்த அவருடைய உடன்படிக்கையின் வாக்குதத்தங்களை நினைவில் கொண்டிருக்கிறார் எனவும் அவர்களை மீட்டெடுத்து, ஆசீர்வதிப்பார் என்ற உண்மையினைக் கூறி உற்சாகப்படுத்தினார். இந்த தீர்க்கதரிசன புத்தகத்தின் கருப்பொருளை ஒரு விதைபோன்று இப்புத்தகத்தின் தலைப்பின் “கர்த்தர் நினைவில் வைத்திருக்கிறார்” என்ற அர்த்தத்தில் அடங்கியிருக்கிறது.

அதிகமாக “பழைய ஏற்பாட்டின் தேவஅருள் வெளிப்பாடு” என அழைக்கப்படும் இந்த புத்தகம், சகரியாவின் முன் இருந்த உடனடி பார்வையாளர்களிடமும் பேசியது; அதேவேளையில் எதிர்காலத்தினரிடமும் பேசியது. இதனை நாம் இந்த தீர்க்கதரிசன புத்தகத்தின் அமைப்பிலேயே காணலாம்: இந்த புத்தகத்தை பிரிக்கும் மூன்று பிரிவுகளிலும் (1-6; 7-8; 9-14) வரலாற்றின் அடிப்படையில் தீர்க்கதரிசனத்தை எழுத தொடங்கி, பின் மேசியா அவருடைய ஆலயத்திற்கு திரும்ப வந்து, அவருடைய பூலோக ராஜ்ஜியத்தினை அமைக்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக் குறித்து எழுதி முடிக்கிறார். தீர்க்கதரிசி ஜனங்களிடத்தில் மேசியா உடனடி மற்றும் நீண்டகால ஓர் அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளார் என்பதை நினைவுபடுத்தினார். தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நல்வார்த்தைகளாகவும் ஆறுதலான வார்த்தைகளாக (1:13) சகரியாவின் நாட்களில் நாடுகடத்தப்பட்டவர்களுக்கும், எதிர்கால நாளுக்கென்று தெரிந்தெடுக்கப்பட்டு சிதறி இருந்த தேவனுடைய தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்களுக்கும்  இருந்தது.

இந்த புத்தகம்தான் பழையஏற்பாட்டுபுத்தகங்களிலேயே மிக அதிகமாக மேசியாவை குறித்தும், உலகின் இறுதி அழிவுநாட்கள் குறித்தும், மறுமை வாழ்வைக் குறித்தும் பேசும் புத்தகமாக இருக்கிறது. இஸ்ரவேலருக்கு ஆறுதல் அளிக்க வரும் இயேசுவின் வரவிருக்கும் மகிமையைக் குறித்து தீர்க்கதரிசனமாக சொல்லும் ஒரு தீர்க்கதரிசன புத்தகம் சகரியாவின் புத்தகம் (1:13,17). இந்த புத்தகம், தரிசனங்கள், தீர்க்கதரிசனங்கள், அடையாளங்கள், பரலோகத்தில் இருந்து வரும் தூதர்கள், மற்றும் தேவனுடைய சத்தம் போன்றவற்றினால் நிரம்பியிருந்தாலும் மனம் திரும்புதல், தெய்வீக பாதுகாப்பு, இரட்சிப்பு மற்றும் பரிசுத்த – வாழ்க்கை வாழ்வது போன்ற நடைமுறை விஷயங்கள் குறித்தும் பேசுகிறது. அடுத்து வரும் 400 வருடங்கள் தீர்க்கதரிசன அமைதி உண்டாகும்; பின்னர் யோவான் ஸ்நானகனின் வருகையின் போதே தீர்க்கதரிசனம் வெளிப்படும் என்பதால், எஞ்சியிருக்கும் உண்மையுள்ளவர்கள் இந்த தீர்க்கதரிசன அமைதி நாட்களில் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள ஏதுவாக, எதிர்காலத்திற்குரிய, ஆழமான, பரிபூரணமான வாக்குத்தத்தங்களை சகரியாவின் மூலமாக தேவன் வல்லமையாக வெளிகொண்டுவந்தார். 

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

வாசிப்பவ்ர்களுக்கு அனேக சவால்கள் இருந்தாலும், தீர்க்கதரிசனத்தின் இடையில் காணப்படும் இரண்டு பத்திகளின் கருத்துக்கள், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு விளக்கம் அளிப்பதில் சவால்களாக இருக்கின்றன. 11:8-ல்  காணும் நல்ல மேய்ப்பர் “ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்;” என்ற வார்த்தைகள். வரையறுக்கும் சுட்டு இவ்வாக்கியத்தில் இருப்பது பரிச்சயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அதினால் யூதர்கள் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் மேய்ப்பர்கள் யார் என்பதை மேலும் விளக்கம் தேவைப்படாமல் புரிந்துகொண்டிருப்பார்கள். ஆனால்,  இன்றைய நாகரீக வாசகர்கள் புரிந்து கொள்வது எளிதல்ல. அவர்களின் அடையாளம் குறித்து அனேக மாற்றுகருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இருப்பதிலேயே பழமையான, மேலும் சரியானதாக கருதப்படும் கருத்து -  மூன்று தலவர்களின் வரிசை- ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபாரகர்கள் என்பதை குறிக்கிறது என்கிறது. இயேசுவின் பூலோக ஊழியத்தில், அவரும் யூத மத தலைவர்களின் மாய்மாலத்தை கடுமையான கண்டனங்களுடன் எதிர்த்தார் (மத்.23), தொடர்ச்சியாக தேசமும் கி.பி 70ல் அழிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவினுடைய வருகைக்குப் பிறகு, யூத ஜனங்கள் தீர்க்கதரிசி, ஆசாரியர் அல்லது ராஜா என ஒருவரையும் பெற்றிருக்கவில்லை. 

13:8 ஆம் வசனத்தில் இருக்கிற “உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று” என்னும் வாக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கும் நபரின் அடையாளம் குறித்தும் அனேக விவாதங்கள் சென்று கொண்டு இருக்கின்றன. சிலர் இந்த வாக்கியம் சிலுவையில் அறையப்பட்டதனால் உண்டான இயேசுவின் வடுக்களைக் குறிக்கிறது என்கின்றனர். ஆனால், இயேசு தான் தீர்க்கதரிசி இல்லை என்று மறுதலித்து இருக்க முடியாது, அவர் ஒரு விவசாயி என்றும் உரிமை பாரட்டி இருக்கவும் முடியாது, அவரின் நண்பர்கள் வீட்டில் காயப்பட்டார் என்றும் சொல்லியிருக்க முடியாது. வெளிப்படையாக, இது விக்கிரகாராதனையினால் காயப்பட்ட ஒரு கள்ள தீர்க்கதரிசியைக் குறிக்கிறது (வசனம் 4, 5) என அறிகிறோம். மேசியாவின் ராஜ்யத்தில் கர்த்தரின் வைராக்கியம் மிக அதிகமாக இருக்கும். அதினால் விக்கிரக வணக்கதார் தங்கள் மெய்யான அடையாளத்தை மறைக்க அனைத்து முயற்சிகளை மேற்கொள்வார்கள், ஆனால் அவரகளது வடுக்களோ – அவர்களின் மீறுதல்களுக்கு பேச்சுக்குரிய அடையாளமாக இருக்கும் என்பதே இதன் அர்த்தம். 

சுருக்கம்

I. மனம் திரும்பும்படிக்கு விடப்பட்ட அழைப்பு (1:1-6)
 
II. சகரியாவின் எட்டு இரவுநேர தரிசனங்கள்  (1:7 – 6:15)
அ. மிருதுச்செடிகளுக்குள் இருந்த மனிதன் (1:7-17)
ஆ. நான்கு கொம்புகள் மற்றும் நான்கு தொழிலாளிகள் (1:18 – 21)
இ.அளவுநூல் பிடித்திருந்த மனுஷன் (2:1-13)
ஈ. பிரதான ஆசாரியனின் சுத்திகரிப்பு (3:1-10)
உ. தங்க விளக்குத்தூண் மற்றும் இரண்டு ஒலிவ மரங்கள் (4:1-14)
ஊ. பறக்கும் தோல்சுருள் (5:1-14)
எ. கூடையில் இருக்கும்பெண் (5:5-11)
ஏ நான்கு இரதங்கள் )6:1-18)
ஐ. இணைப்பு : பிரதான ஆசாரியன் யோசுவாவின் முடிசூட்டுவிழா (6:9-15)
 
III. சகரியாவின் நான்கு செய்திகள் (7:1 – 8:23)
அ. உபவாசத்தை குறித்த கேள்வி (7:1-13)
ஆ. நான்கு பதில்கள் (7:4 – 8:23)
1. தவறான நோக்கங்கல் கண்டிக்கப்படுதல் (7:4-7)
2. மனம் திரும்புதல் தேவை (7:8-14)
3. தயவினை திரும்ப மீட்டமைத்தல் (8:1-17)
4. உபவாச நாட்கள் விருந்து நாட்களாக மாறுதல் (8:18-23)
 
IV சகரியாவின் இரண்டு பாரங்கள் (9:1-11:17)
அ. மேசியா வின் முதல் வருகையில் நிராகரிக்கப்படுதல் (9:1 11:17)
ஆ. மேசியா இரண்டாம் வருகையில் ஏற்றுக்கொள்ளப்படுதல் (12:1 -14:21)

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.