தலைப்பு:

தெயோப்பிலுவே – என அழைத்து லூக்கா எழுதும் இரண்டாவது புத்தகம் (லூக்கா 1:3), அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் எழுதும் போது பெயர் கொடுக்கப்படவில்லை. கிரேக்க கையெழுத்துபிரதிகளில் ’நடபடிகள்’ என்ற தலைப்பைக் காணமுடிகிறது. பின்னர் அப்போஸ்தலருடைய என்ற வார்த்தையைச் சேர்த்தனர். பெரிய மனிதர்களின் சாதனைகளை விவரிக்க ‘நடபடிகள்’ (praxeis) என்ற கிரேக்கபதம் பயன்பட்டது. அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் ஆதி திருச்சபையில் இருந்த குறிப்பிடத்தக்க நபர்களின் வாழ்க்கையில் நடந்தனவற்றை, விசேஷமாக பேதுருவினுடையவற்றைக் குறித்துப் பேசுகிறது (அதிகாரங்கள் 1-12). இந்த புத்தகத்தை “அப்போஸ்தலர்கள் மூலமாக நிறைவேற்றின பரிசுத்த ஆவியானவரின் நடபடிகள்” என அழைப்பதே பொருத்தமானது. ஏனென்றால், அவரது சர்வவல்ல ஆளுகை கண்காணிப்புடன் நிறைவேற்றின செயல்கள் எந்தவொரு மனுஷன் செய்தத்தைக் காட்டிலும் அதிகம். ஆவியானவரின் வழிநடத்துதல், கட்டுப்பாடு, அவர் அளித்த அதிகாரம்தான் - திருச்சபை பலமான ஊழியத்தை நிறைவேற்றி – எண்ணிக்கையிலும், ஆவிக்குரியவல்லமையிலும் மற்றும் செல்வாக்கிலும் வளரும்படிச் செய்தது. 

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

லூக்கா என்ற பெயர் இரண்டுபுத்தகங்களிலும் இல்லாதிருந்தும், தெயோப்பிலுவே, என அழைத்து எழுதின (லூக்கா 1:3) சுவிசேஷம், லூக்கா சுவிசேஷம் என்பதால் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தின் ஆசிரியர் லூக்கா என்ற வாதம் பொருத்தமானதாக இருக்கிறது. ஆதிதிருச்சபை தந்தைகள் இரேனேயஸ், அலெக்சந்திரியாவின் கிளமெண்ட், டெர்ட்டூளியன், ஆரிஜென், ஃப்யூஸிபஸ் மற்றும் யெரோம், லூக்கா தான் இதன் ஆசிரியர் என்பதை உறுதி செய்கின்றனர். அதைப்போல, முரட்டோரியன் (Muratorian Canon) என்னும் வேதாகம புத்தக வரிசையும் (கி.பி.170) உறுதியாக லூக்காதான் இதன் ஆசிரியர் எனச் சொல்கிறது. மற்றவர்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது புதிய ஏற்பாட்டில் இவரது பெயர் பிரபலமற்றதாக இருக்கிறது; அதாவது 3 இடங்களில் மட்டுமே காண்கிறோம் (கொலோ.4:14; 2தீமோ.4:11; பிலமோன்24); இதன் ஆசிரியர் போலியானவர் என்றால் மிகபிரபலமாக இருந்தவரின் பெயரை இதற்கு ஆசிரியர் என கொடுத்திருப்பார். இதனால் லூக்காதான் இதன் ஆசிரியர் என்று நிச்சயமாக சொல்லமுடியும். லூக்கா பவுலுக்கு மிக நெருக்கமான நண்பர், பிரயாணத்தில் அவருடன் பிரயாணம் செய்தவர் மற்றும் அவருக்கு வைத்தியனாகவும் இருந்தவர் (கொலோ.4:14). லூக்கா மிக கவனமாக ஆராய்ச்சி செய்பவர் மற்றும் துல்லியமாக வரலாற்றை கணிக்கக் கூடியவர் (லூக்கா 1:1-4), இஸ்ரவேல், ஆசியா கண்டம் மற்றும் இத்தாலியின் பூகோள அமைப்பையும் ரோமர்களின் சட்ட நுணுக்கங்கள் மற்றும் மக்களின் பழக்கவழக்கங்களையும் நன்கு அறிந்திருந்தவர். அப்போஸ்தலர் நடபடிகள் எழுதுவதற்கு லூக்கா எழுத்துப்பூர்வமாக ஆதாரங்களை கருத்தில் எடுத்துக்கொண்டார்,  பிரபலமான பேதுரு, யோவான் மற்றும் எருசலேமில் இருந்த மற்றவர்களை நேர்காணல் செய்தார் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை (15:23-29; 23:26-30).  சிசெரியாவில் பவுல் சிறைப்பட்டு இருந்த நாட்கள் லூக்காவிற்கு பிலிப்புவையும் அவருடைய குமாரத்திகளையும் நேர்காண போதுமான கால அவகாசம் கொடுத்தது (திருச்சபையில் ஆரம்பநாட்களின் சம்பவங்களை லூக்காவிற்கு எடுத்துச்சொன்னவர்கள் இவர்கள் என்கின்றனர்). இறுதியாக, பவுல் தனது எழுத்துக்களில் முன்னிலைபன்மை நிலைப்பாட்டில், நாங்கள், எங்களுக்கு என்று பல இடங்களில் எழுதியிருப்பதில் இருந்து அப்போஸ்தலர் நடபடிகள் புத்த்கத்தின் அனேக சம்பவங்களின் கண்கண்ட சாட்சி லூக்கா என்பது தெளிவாகிறது. 

எருசலேமின் வீழ்ச்சிக்குப்பின் (கி.பி.70) லூக்கா அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதினார். லூக்கா கி.பி.80களின் மைய்ய நாட்களில் மரணித்தார் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால், பவுலின் முதல் சிறையிருப்பு முடிவதற்கு முன் (கி.பி.60-62) எழுதப்பட்டது. இந்த நாட்கள் தான் பவுல் இராயனுக்கு முன்பாக விசாரிக்கும்படி காத்திருந்த நாட்கள். மேலும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் திடீரென்று முடிவுதறதற்கான காரணம் என்ன என்பது இதில் இருந்து தெளிவாகிறது. அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தின் பாதிக்கும் மேல் பவுலின் ஊழியத்தினை குறித்து எழுத அர்ப்பணித்த லூக்கா, தான் இராயனால் விசாரிக்கப்படதன் விளைவு, பவுலின் தொடர்ச்சியான ஊழியம், பவுல் இரண்டாவது முறை சிறையிலடைக்கபட்டது (2தீமோ.4:11), பவுலின் மரணம் குறித்தும் அவர் அப்போஸ்தலர்நடபடிகள் புத்தகம் எழுதுவதற்கு முன் சம்பவித்திருந்தால் நிச்சயம்  இச்சம்பவங்களை குறித்தும் எழுதியிருப்பார். யாக்கோபு இரத்தசாட்சியாக மரித்த சம்பவம் – கி.பி.62ல் நிகழ்ந்தது (என யூத வரலாற்று நிபுணர் யோசபஸ் குறிப்பிடுகிறார்) நீரோ மன்னனின் (கி.பி.64) துன்புறுத்தல், எருசலேமின் வீழ்ச்சி (கி.பி.70) போன்ற முக்கிய சம்பவங்களை குறித்து நடபடிகள் புத்தகம் அமைதிகாப்பது இந்த சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் லூக்கா அப்போஸ்தலர்நடபடிகள் புத்தகத்தை எழுதியிருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. 

பின்னணி மற்றும் அமைப்பு

லூக்கா தன் அப்போஸ்தலர் நடபடிகள் முன்னுரையில் (லூக்கா 1:1-4) மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை (இயேசு தமது பூலோக ஊழியத்தில் நிறைவேற்றியவற்றை), ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு, வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று என்று -தொயோப்பிலுவிற்கும் - அவருடைய எழுத்துக்களை வாசிக்கும் மற்றவர்களுக்கும்  – “ஒழுங்காய் வரிசைப்படுத்தி - லுக்கா நற்செய்தி நூலில்” எழுதுகிறார்.  அப்போஸ்தலர்நடபடிகளில் இயேசு ஆதிதிருச்சபையில் நிறைவேற்றிய சம்பவங்கள் குறித்து தொடர்ந்து எழுதுகிறார். இயேசு பரமேறிய சம்பவத்துடன் ஆரம்பித்து, பெந்தெகோஸ்தே நாளில் சபை பிறந்த சம்பவத்தின் ஊடாகச் சென்று, ரோமாபுரியில் பவுலின் பிரசங்கம், சுவிசேஷம் பரம்பினதையும் சபையின் வளர்ச்சியையும் வரிசைப்படுத்தி எழுதுகிறார் (1:15; 2:41,47; 4:4; 5:14; 5:7; 9:31; 12:24; 13:49; 16:5; 19:20). நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டதற்கு விரோதமாக எதிர்ப்புகள் எழும்பின என்பதையும் கூட குறிப்பிட்டிருக்கிறார் (2:13; 4:1-22; 5:17-42; 6:9-8:4; 12:1-5; 13:6-12, 45-50; 14:2-6,19,20; 16:19-24; 17:5-9; 19:23-41; 21:27-36; 23:12-21; 28:24).

தெயோப்பிலு என்பதற்கு ”தேவனை நேசிப்பவர்” என்று அர்த்தம் – ஆனால் வரலாற்றில் லூக்கா மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை தவிர -தெயோப்பிலுவை குறித்து வேறு எங்கும் பார்க்க முடிவதில்லை. தெயோப்பிலு - லூக்கா அறிவுரை தந்த ஒரு விசுவாசியாக இருந்திருக்கலாம் அல்லது மனம் மாற்ற லூக்கா தேடிக்கொண்டிருந்த ஒரு புறஜாதியாராக இருந்திருக்கலாம் என்கின்றனர். லூக்கா – ”மகாகனம் பொருந்திய“ என்று அழைப்பதால் முக்கிய பதவி வகித்த ரோம அதிகாரியாக இருந்திருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது (24:3; 26:25).

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

சபை வரலாற்றினை முதன்முதலில் எழுதத்தொடங்கின போது, ஆண்டவரின் பிரதானகட்டளைக்கு (மத். 28:19,20)  தரும் முதல் பதிலை அப்போஸ்தலர் நடபடிகள் குறிப்பிடுகிறது. புதிய ஏற்பாட்டின் வேறு எந்தபுத்தகத்திலும் நமக்கு கிடைக்காத சபையின் முதல் 30 ஆண்டுகள் குறித்த தகவல் இப்புத்தகத்தில் தான் கிடைக்கிறது. உபதேசங்களை பிரதானப்படுத்தி இப்புத்தகம் எழுதாது இருந்தாலும், இஸ்ரவேலர் நீண்ட காலமாக காத்திருந்த மேசியாதான் நசரேயனாகிய இயேசு என்பதை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் வலியுறுத்துகிறது; (யூத ஜனங்களுக்கு மாத்திரம் அல்ல)  அனைத்து மனுஷருக்கும் நற்செய்தியை அறிவிக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் செயல்களை வலியுறுத்துகிறது (50 தடவைகள் குறிப்பிட்டிருக்கிறார்) அப்போஸ்தலருடைய நடபடிகளில் லூக்கா பழைய ஏற்பாட்டை அடிக்கடி எடுத்து பயன்படுத்துகிறார். உதாரணமாக, 2:17-21 (யோவேல் 2:28-32); 2:25-28 (சங்.16:8-11); 2:35 (சங்.110:1); 4:11 (சங்.118:22); 4:25-26 (சங்:2:1,2); 7:49,50 (ஏசா.66:1,2); 8:32,33 (ஏசா. 53:7,8); 28:26,27 ( ஏசா.6:9,10). அப்போஸ்தலர் நடபடிகள் – இயேசுவின் ஊழியத்தில் இருந்து அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு, பழைய ஏற்பாட்டில் இருந்து புதிய ஏற்பாட்டிற்கு, இஸ்ரவேல் தேவனுக்கு சாட்சியாக இருக்கும் தேசம் என்பதில் இருந்து சபை - (யூதர்கள் மற்றும் புறஜாதியார்கள் சேர்த்து) தேவனுடைய சாட்சியாக நிற்கும் ஜனங்கள் என மாறின நிலைமாற்றங்களினால் நிறைந்திருக்கிறது. பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டிற்கு மாறினதின் இறையியலை எபிரேயர் நிருபம் முன்வைக்கிறது. அப்போஸ்தலர் நடபடிகள் சபை நடைமுறை வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என விவரிக்கிறது.

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

அப்போஸ்தலர் நடபடிகள் வரலாற்றை முக்கியப்படுத்தி எழுதிய புத்தகம் – ரோமர் அல்லது எபிரேயருக்கு எழுதின நிருபம் போன்று இறையியல் விளக்கம் நிறைந்த புத்தகமாக இல்லாது இருப்பதால் விளக்கம் அளிப்பதில் அதிக சவால்கள் இல்லை. சவால்கள் என்பது புத்தகம் ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுகின்றதான இயல்பிலும் அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் இருக்கின்றன. 

சுருக்கம்    

முன்னுரை (1:1-8)
 
I. எருசலேமுக்கு சாட்சிபகருதல் (1:9 -8:3)
அ. சபையின் எதிர்பார்ப்பு (1:9-26)
ஆ. சபை ஸ்தாபிக்கப்படுதல் (2:1-47)
இ. சபையின் வளர்ச்சி (3:!-8:3)
1. அப்பொஸ்தலர்கள்: பிரசங்கித்தல், சுகப்படுத்தல் மற்றும் வரும் துன்புறுத்தல்கலை தாங்கிக்கொள்ளுதல் (3:1-5:42)
2. மூப்பர்கள்: ஜெபித்தல், போதித்தல்மற்றும் வரும் துன்புறுத்தல்களை தாங்கிக் கொள்ளுதல் (6:1-8:3)
 
II. யூதேயா மற்றும் சமரியாவிற்கு சாட்சி (8:4-12:25)
அ. சமாரியர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுதல் (8:4-25)
ஆ. புறஜாதியார் மனம்திரும்புதல் (8:26-40)
இ. சவுல் மனம்திரும்புதல் (9:32-43)
ஈ. யூதேயாவிற்கு நற்செய்தி அறிவிக்கப்படுதல் (9:32-43)
உ. புறஜாதியாருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுதல் (10:1-11:30)
ஊ. ஏதோதினால் துன்புறுத்தப்படுதல் (12:1-25)
 
III. பூமியின் கடைசிபரியந்தம் சாட்சியாக செல்லுதல் (13:1-28:31)
அ. பவுலின் முதல் களப்பணி பிரயாணம் (13:1-14:28)
ஆ. எருசலேம் ஆலோசனை சங்கம் (15:1-35)
இ. பவுலின் இரண்டாம் களப்பணி பிரயாணம் (15:36 – 18:22)
ஈ. பவுலின் மூன்றாம் களப்பணி பிரயாணம் (18:23 – 21:16)
உ. பவுல் எருசலேமில் இராயனுக்கு முன் விசாரிக்கப்படுதல் ( 21:17 -26:32)
ஊ. பவுல் ரோமாபுரிக்கு மேற்கொண்ட பிரயாணம் (27:1 -28:31)

 

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.