இஸ்ரவேல் நாட்டில் உள்ள எருசலேமில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தோலைவில் பெத்தானியா என்ற ஒரு கிராமம் உண்டு. அந்த கிராமத்தில் மார்த்தாள், மரியாள் என்ற இரு சகோதரிகள் தங்கள் சகோதரன் லாசருவுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் யேசுவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். மேலும் அடிக்கடி யேசுவை தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து அவரின் போதகங்களைக் கேட்டும் வந்தார்கள்.
திடீரென்று ஒருநாள் லாசரு சுகவீனம் அடைந்தான். சுகவீனம் அடைந்தவன், சில நாட்களில் இறந்தும் போனான். அச்சமயத்தில் யேசு வெளியூரில் இருந்தார். லாசரு இறந்த செய்தியை அவனது சகோதரிகள் இயேசுவுக்கு சொல்லி அனுப்பினார்கள். இறந்த லாசருவை தான் உயிரோடு எழுப்பப்போவதை முன்னமே அறிந்திருந்த யேசு, தான் இருந்த இடத்திலேயே இன்னும் இரண்டு நாள் தங்கினார். பிறகு தன்னுடைய சீடர்களிம், “என் நண்பனாகிய லாசரு தூங்கிக் கொண்டுக்கிறான்; அவனை எழுப்பிவிட போகிறேன், வாருங்கள் நாம் பெத்தானியா செல்லலாம்” என்று அழைத்தார்.
லாசரு இறந்த செய்தியை இயேசு மட்டுமே அறிந்திருந்தார், அவருடைய சீடர்கள் இன்னும் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆகவே தூங்குகிற லாசருவை எழுப்ப போகிறேன் என்று யேசு சொன்னது அவர்களுக்கு வியப்பாக இருந்தது! அவருடைய சீடர்களோ, ஆண்டவரே, அவன் தூங்கிக்கொண்டிருந்தால் தூக்கம் தெளிந்த உடன் அவனே எழுந்து விடுவானே, நாம் ஏன் போய் எழுப்ப வேண்டும் என்று வியப்பாக கேட்டார்கள்!
லாசரு இறந்து போனான் என்று வெளிப்படையாக அவர்களிடம் சொல்லி, தனது சீடர்களுடன் லாசரு இருந்த பெத்தானியாவிற்கு வந்தார். அங்கே அழுதுகொண்டிருந்த மார்த்தாளும், மரியாளும் யேசுவைப் பார்த்த உடன் ஓடி வந்து, ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தீரானால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டானே என்று சொல்லி அழுதார்கள். அவர்களின் துன்பத்தை கண்டு மனதுருகின யேசு, லாசருவின் உடலை எங்கே அடக்கம் பண்ணினீர்கள் என்று கேட்டார். மார்த்தாளோ யேசு லாசருவை உயிரோடு எழுப்பப்போகிறார் என்பதை அறியாமல், அவர் லாசருவின் கல்லறைக்கு சென்று அழப் போகிறார் என்று நினைத்து, எல்லோரும் யேசுவுடன் லாசருவின் கல்லறைக்கு சென்றார்கள். யேசுவுடன் லாசருவின் சகோதரிகள் மட்டுமல்லாமல், யேசுவை எதிர்த்த யூத சமயத் தலைவர்கள் மற்றும் அநேக பொது மக்களும் லாசருவின் கல்லறைக்கு சென்றார்கள்.
யூதர்கள் பொதுவாக இறந்தவர்களின் உடலை ஒரு துணியில் சுற்றி வெட்டப்பட்ட குகைகளில் வைத்து அதன் வாயிலை பெரிய கல்லால் மூடிவிடுவார்கள். லாசருவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு வந்த யேசு, அங்கிருந்தவர்களிடம், கல்லறையை மூடியிருந்த கல்லை புரட்டி, கல்லறையை திறக்கச்சொன்னார்.
மார்த்தாளோ, ஆண்டவரே இறந்த் நான்கு நாட்கள் ஆயிற்றே, இப்போது நாறுமே என்றாள். யேசு மார்த்தாளிடம், நீ என்னை முழுவதும் நம்பினால், நீ ஒரு அற்புதத்தைக் காண்பாய், இறந்த உன் சகோதரன் உயிரோடு எழுந்திருப்பான் என்று சொன்னார். நான் உம்மை நம்புகிறேன் என்று மரியாள் சொன்னவுடன், யேசு தன்னுடைய விண்ணுலக தந்தையிடம் வேண்டுதல் செய்து, “லாசருவே வெளியே வா” என்று சத்தமாய் கூப்பிட்டார். அங்கே வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, கல்லறையிலிருந்து தன் உடல் முழுவதும் துணிகள் சுற்றப்பட்டவனாய் லாசரு வெளியே வந்தான்! அவனை கட்டியிருந்த துணிகளை அவிழ்த்துவிடச் சொல்லி, அவனுடைய சகோதரிகளிடம் ஒப்படைத்தார். இந்த அற்புதத்தைக்கண்ட பொதுமக்கள் மற்றும் யேசுவை எதிர்த்த மதத்தலைவர்கள் கூட இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். என் மீது நம்பிக்கை வைக்கும் எவரும் இவ்வுலக வாழ்வை முடித்து இறந்தபின்னும் விண்ணுலகில் நித்திய வாழ்வைப் பெறுவார்கள் என்று அன்று தன்னை நம்பிய மக்களிடம் யேசு கூறினார்.
இந்த கட்டுரை இந்து தமிழ் திசை, ஆனந்த ஜோதி இணைப்பிதழுக்காக எழுதப்பட்டு, ஆகஸ்ட் 24, 2023 அன்று வெளிவந்துள்ளது.