ஆசிரியர்: பீட்டர் மாஸ்டர்ஸ்
தமிழாக்கம்: சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை சேலம்
வாசிப்பதற்கான நேரம்: 12 நிமிடங்கள்

 உண்மையான இரட்சிப்பில் வெளிப்படும் வெளிபிரகாரமான அடையாளங்கள் உண்டா என்று கேட்டால்? ஆம் உண்டு என்று தான் சொல்லவேண்டும். நமது முற்பிதாக்களால் கிருபையின் அடையாளங்கள் என்று அழைக்கப்பெற்ற இரட்சிப்பின் அடையாளங்கள் அநேகம் வேதாகமத்தில் சொல்லப் பட்டிருக்கின்றன. 1 யோவான் நிரூபத்தில் இவ்விதமான அடையாளங்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ரோமர் 8 - ம் அதிகாரத்திலும் அவ்விதமாகவே இரட்சிப்பின் அடையாளங்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் அப்போஸ்தலர் நடபடிகள் 2 - ம் அதிகாரத்திலும் கிறிஸ்தவ நடைமுறையில் காணப்படும் அடையாளங்கள் தெளிவாய் வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விதமான அடையாளங்களை இந்த நாட்களில் நாம் காண வேண்டிய அவசியத்தை முக்கியமாக உணர வேண்டும். சம காலத்தில் பிரசங்கிக்கப்படும் சுவிசேஷ செய்திகள் அநேகம் பாவத்தைக் குறித்தும் மனந்திரும்புதலைக் குறித்தும் சொல்லுவதை விட்டு ஆசீர்வாதங்களை மட்டுமே இன்றைய நவீன போதகர்கள் போதிக்கிறவைகளாக இருக்கின்றனர். அநேகர் வேதம் சொல்லும் உண்மையான மனந்திரும்புதல் இல்லாமல், கிறிஸ்தவ பணிகளிலும், சபை ஊழியங்களிலும் காணப்படுவது அதிகம். மேலும் விசுவாசிகள் என்று அழைக்கப்படுபவர்களும் கூட உண்டு. இயேசுவை மட்டுமே போதிக்கும் போதனைகள் இன்று மலிந்து கிடக்கின்றன. இயேசுவை விசுவாசித்து இரட்சிப்பை பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாக மேடைக்கு முன்வருதலும் கையை உயர்த்துதலும், கையொப்பமிடுதலும் ஆகியவை இன்று அதிகம் காணப்படுவதோடு அவ்விதமாகச் செய்தவர்கள் இரட்சிக்கப்பட்டு விட்டார்கள் என்றும், அவர்களுக்கு பொய்யான உறுதியளிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் மெய்யாகவே இரட்சிக்கப் பட்டவர்களா?

இன்று அநேக ஊழியர்கள் சத்தியத்தை மேலோட்டமாக போதிக்கிறார்கள். இவ்விதம் கூட்டங்களில் தீர்மானம் எடுப்பவர்களை மெய்யாகவே அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களா ஏன் பார்க்கப்படுவதில்லை. அவர்கள் உண்மையாக மனந்திரும்பாமல் இரகசிய பாவங்களில் சிக்குண்டவர்களாக இருக்கிறார்களா? தங்கள் சுயநீதியை விட்டு கிறிஸ்துவின் பலியையே முற்றிலும் சார்ந்து கிறிஸ்துவின் நீதியைச் சுதந்தரித்திருக்கிறார்களா? என்று இவ்விதமாக எண்ணிப் பார்ப்பதில்லை. ஆகவே, நாம் இந்த முக்கியமான இரட்சிப்பின் அடையாளங்களைக் குறித்துப் பார்க்கும் இந்த கட்டுரையில் அவைகளைக் குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய ஊழியங்களில் நாம் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் போதிக்கிறோமா? மனந்திரும்புதலின் மெய்யான சத்தியத்திற்குள் ஆத்துமாக்கள் வழிநடத்தப் படுகிறார்களா? என்பதைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஏழு அடையாளங்கள்:

பெந்தேகொஸ்தே நாளில் இரட்சிக்கப் பட்டவர்களின் மனப்பான்மையிலும், வாழ்க்கையிலும் காணப்பட்ட மாற்றத்தை அப்போஸ்தலர் 2:37,38,41,47 ஆகிய வசனங்களில் நாம் காண்கிறோம். பெந்தேகோஸ்தே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். தேவ வசனத்தை அவர்கள் கேட்ட பொழுது, தங்கள் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாக பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அவனுடைய வார்த்தையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள் அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

இந்த வசனப் பகுதியில் இரட்சிப்பின் அல்லது கிருபையின் அடையாளங்களில் ஏழு அடையாளங்களைக் காண்கிறோம். இரட்சிக்கப்பட்ட இவர்களில் ஆழமான தனிப்பட்ட இரட்சிப்பின் கிரியை காணப்பட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவர்கள் இருதயத்திலும், மனதிலும் முற்றிலும் மாற்றப்பட்டவர்களாய் இருந்தார்கள். இது கர்த்தருடைய உன்னத செயலேயன்றி வேறல்ல. தேவன், அவர்களை ஆச்சரியமாக மாற்றியிருந்தார். மேலும் இந்த பகுதி ஒரு மனிதனில் கர்த்தருடைய கிருபையின் கிரியை கண்டு கொள்ள முடியும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. நம்முடைய இரட்சிப்பைக் குறித்து நாம் அக்கறையுள்ளவர்களாக இருப்போமானால், நாம் இந்த கேள்விகளை நமக்குள்ளாக கேட்டுக் கொள்ள வேண்யடிவர்களாக இருக்கிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையில் இந்த விதமான கர்த்தரின் கிரியையான கிருபையின் அடையாளங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோமா? ஒருவேளை இந்த அடையாளங்களை நம்மில் காண்பது நம்மை கர்த்தருக்குள் உற்சாகப் படுத்துகிறவைகளாக இருக்கும். மற்றவர்களிலும், இவ்விதமான மெய்யான அடையாளங்கள் காணப்படுவதைப் பார்க்கும்போது எந்த சந்தேகமுமின்றி அவர்களின் இரட்சிப்பை இனங்கண்டு கொள்ள முடியும். அந்த அடையாளங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்?

  1. பாவத்தைக் குறித்த உணர்வு:

மேலே பார்த்த வசனப்பகுதியில் நாம் பார்க்கும் முதலாவது அடையாளம் உண்மையான மனந்திரும்புதலுக்கேற்ற பாவத்தைக் குறித்த உணர்வு (அப்போஸ்தலர் 2:37 - 38). ஞானஸ்நானம் உண்மையாக மனந்திரும்பினவர்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் இருயத்திலே குத்தப்பட்டார்கள். அந்த வார்த்தையை கிரேக்க மொழியில் பார்க்கும்போது இருதயத்தில் வெட்டுப்பட்டார்கள். பாவ வாழ்க்கையைக் குறித்து மெய்யாகவே வெட்கப்பட்டார்கள்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுங்கள் அவனுடைய வார்த்தையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள் அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அத்தியோந்தியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

இரட்சகரான இயேசுவை மாத்திரம் சார்ந்து கொள்கிறானா? அவரே தன்னுடைய இரட்சகரென்றும். ஆண்டவரென்றும் தன்னை முழுமையாக அவருக்கு ஒப்புக் கொடுக்கிறானா?

இவ்விதமான அடையாளங்கள் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டும். உண்மையாகவே தங்களைத் தேவனுக்கு முன்பாக தாழ்த்தியிருக்கிறார்களா? உலகத்துக்கும் அவர்களுக்கும் உண்டான தொடர்பில் மெய்யான மாற்றமுண்டா? தேவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற வாஞ்சை அவர்களில் உண்டா? பரிசுத்தத்தில் முன்னேற வேண்டும் என்ற மெய்யான வாஞ்சை அவர்களில் உண்டா? என்பவைகள் காணப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

சில சமயங்களில் தங்களின் இரட்சிப்பைக் குறித்து நிச்சயமற்றவர்களாக இருப்பவர்கள் உண்டு. அதைக் குறித்து கலங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், இவ்விதமான அடையாளங்கள் அவர்களில் காணப்படும். நீதியைக் குறித்த பசிதாகம் அவர்களில் காணப்படும். இவ்விதமான மக்களிடம் நாம் தேவன் அவர்களில் செய்துள்ள மகத்துவமான கிருபைகளை நினைப்படுத்தி. மனந்திரும்புதலின் பள்ளத்தாக்கின் வழியாய் தேவ ராஜ்யத்தின் மலையின் மேல் உயர சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுறுத்தி உற்சாகப்படுத்த வேண்டும்.

  1. வேதத்தை விளங்கிக் கொள்ளுதல்:

கிருபையின், அதாவது இரட்சிப்பின் அடையாளங்களில் இரண்டாவதாக காணப்படும் அடையாளம் அப்போஸ்தலர் 2:42 -ல் பார்க்கிறோம். அப்போஸ்தலருடைய உபதேசத்தில் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். கிரேக்க மொழி பெயர்ப்பில் பார்க்கும்போது அப்போஸ்தலருடைய உபதேசத்தோடு தங்களை அதிகமாய் இணைத்துக் கொண்டார்கள். ஒட்டிக்கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் உறுதியாய், தொடர்ச்சியாய் அதில் நிலைத்திருந்தார்கள். மக்கள் தேவனுடைய வார்த்தையை விளங்கிக் கொள்ளும்படியாக நேசித்து அதின் அதிகாரத்திற்கும், ஆளுகைக்கும் தங்கள் இருதயத்தை ஒப்புக் கொடுப்பது ஒரு திட்டமான அடையாளமாயிருக்கிறது. மெய்யாகவே இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதோடு அதிகமாக தன்னை இழுத்துக் கொள்ளுவான். அதுவே அவனுக்கு மையமாகவும் அதற்கு அவன் உண்மையுள்ளவனாகவும் இருப்பான்.

இது மெய்யாகவே இரட்சிப்பின் அடையாளங்களில் ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கிறது. ஏனென்றால் 1கொரிந்தியர் 2:14 –ம் வசனம் திட்டமாக இதைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. “ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான். அவைகள் அவனுக்கு பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்”. இரட்சிக்கப் படாதவர்களுக்கு வேதம் புரியாத புதிராகவும் மறைபொருளாகவும், விளங்கிக் கொள்வதற்கு கடினமானதாகவும் காணப்படும். ஆனால், அவர்கள் இரட்சிக்கப்பட்ட பிறகு தேவ சத்தியம் அவர்களுக்கு வெளிச்சம் தருகிறதாய், இருதயத்தை அசைக்கிறதாய். ஆறுதல்படுத்துகிறதாய். வாழ்க்கையின் நம்பிக்கையாய்க் காணப்படுகிறது.

தேவ ஆவியானவர் மாத்திரமே சத்தியத்தை நமக்கு விளங்கப் பண்ணக்கூடும். உண்மைதான். எசேக்கியேல் வெளிப்படுத்தின விசேஷம் போன்ற புத்தகங்களை உடனடியாக விளங்கிக் கொள்ள முடியாததாய்க் காணப்பட்டாலும் பொதுவாக தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு முற்றிலும் புரியாததாக இருக்காது. தேவன் வேதத்தை அறிந்து கொள்கிற புதிய மனதையும், புதிய கண்களையும் கொடுக்கிறார்.

இரட்சிக்கப் பட்டிருக்கிறோம் என்று சொல்லுகிறவர்களுக்கு தேவனுடைய வார்த்தை எவ்விதம் இருக்கிறது என்பதைக் குறித்து கேட்க வேண்டும். மெய்யாகவே அது அவர்களுக்கு ஆச்சரியமான புதிய வெளிச்சத்தைக் கொடுத்து வழிநடத்துகிறதா? ஒரு சமயத்தில் படிப்பதற்கு மிகவும் சலிப்பாக இருந்த வேதம் தற்போது படிப்பதற்கு உற்சாகமுள்ளதாக, இன்னும் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொடுக்கிறதாக இருக்கிறதா? அவர்களை வழி நடத்திச் செல்லும் அதிகாரம் அதில் உள்ளதாக உணர முடிகிறதா? மெய்யாகவே இரட்சிக்கப்பட்டவர்கள் வேதம் சொல்லுவதைச் செய்ய வேண்டும் என்று அதற்குக் கீழ்ப்படிய மனதுள்ளவர்களாக இருப்பார்கள். இவ்விதமாக தேவ வார்த்தையினால் பாதிக்கப்படாதவர்கள் இரட்சிக்கப்பட்டார்களா என்பது சந்தேகம் தான்.

மேலும் தேவனுடைய வார்த்தையில் அவர்கள் உறுதியாய்த் தரித்திருப்பார்கள். ஏனோதானோ என்று இருக்கமாட்டார்கள். அநேக வாரங்களாக தேவனுடைய ஆலயத்துக்கு வராமலும் தேவனுடைய வார்த்தையைக் கேட்க விருப்பம் இல்லாமலும் இருக்கிறார்களா? அப்படியானால் இவர்களின் இரட்சிப்பு கேள்விக்குறியே. அவர்களில் ஏற்பட்டிருக்கிற புதிய இரட்சிப்பின் மாற்றம் கொஞ்சம் வெளிப்பட்டு மறைவதல்ல. அதில் தொடர்ச்சியும், முன்னேற்றமும் உறுதியும் காணப்படும். தேவனுடைய வார்த்தையை வாசிப்பதில், அதை சிந்திப்பதில், கேட்பதில் ஆர்வம் காணப்படும். இவ்விதமாக தேவனுடைய வார்த்தையில் அதிகம் ஆர்வம் உள்ளவர்களாக தொடர்ந்து நிலைத்திருப்பது இரட்சிப்பின் அடையாளங்களில் முக்கியமான ஒன்று.

  1. கிறிஸ்துவ ஐக்கியம்:

அப்போஸ்தலர் 2 : 42 -ல் மற்றுமொரு அடையாளத்தை மூன்றவதாக பார்போம். அந்நியோந்நியத்தில் (ஐக்கியத்தில்) உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அந்த பெந்தேகோஸ்தே நாளில் இரட்சிக்கப்பட்டவர்கள் தேவனுடைய பிள்ளைகளோடு ஒருவருக்கொருவர் தேவ அன்பினால் இணைக்கப்பட்டார்கள். இவ்விதமான கிறிஸ்தவ ஐக்கியத்தைத் தேடும்படியான புதிய வாஞ்சை, விருப்பம். இரட்சிப்பின் அடையாளங்களில் மற்றொன்று, கிறிஸ்தவ அன்பின் பிணைப்பு, கட்டு இவர்களில் காணப்படும். ஆகவேதான் 1யோவான் 3: 14-ல் இவ்விதம் வாசிக்கிறோம். நாம் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறபடியால், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். இந்த பிணைப்பை அழகாக ரூத் 1:16 – ல் பார்க்கிறோம். "அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மை விட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து என்னோடே பேச வேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன், நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடை ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்". அவர்கள் ஆலயக்கூடங்களில் கலந்து கொள்வதையும், விசுவாசிகளோடு ஐக்கியப்படுவதையும் அதிகம் வாஞ்சிப்பார்கள். கூட்டங்கள் முடிந்தவுடன் கிறிஸ்துவுக்குள்ளான அன்பைப் பகிர்ந்து கொள்ளுகிறவர்களாய்க் காணப்படுவார்கள். ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து மற்றவர்களிடம் பேசுகிறவர்களாகவும், தேவன் தங்களுடைய வாழ்க்கையில் செய்திருக்கிறவைகளைப் பகிர்ந்து கொள்ளுகிறவர்களாகவும் காணப்படுவார்கள். ஜெபக் கூட்டங்களில் திருச்சபைக் கூட்டங்களில் பங்கு பெற விருப்ப படுவார்கள். அவர்கள் தேவ குடும்பத்தின் அங்கத்தினர் என்ற உணர்வும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை வாஞ்சிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்.

இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லியும் இன்னும் உலக மக்களின் ஐக்கியத்தையும், உலக சகவாசத்தையும் அதிகம் விரும்புகிறவர்கனால் அது ஒரு சரியான அடையாளமல்ல. எவர்களில் கிறிஸ்தவ பிணைப்பும், உண்மையான ஐக்கியத்தின் வாஞ்சையும் தேவனுடைய காரியங்களைக் குறித்து வாஞ்சையோடு பேசவும் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் இல்லையோ அவர்களின் இரட்சிப்பு சந்தேகத்திற்குரியதே.

  1. ஜெபத்தில் ஆர்வம்:

நாம் பார்க்கும் மற்றுமொரு அடையாளம் அப்போஸ்தலர் 4:42 -ல் காணப்படும் "ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருத்தல்" அந்த யூத விசுவாசிகள் தனிப்பட்ட, ஊக்கமான, உண்மையான ஜெபத்தை அறியாதவர்களாய் இருந்திருப்பார்கள். ஒருவேளை ஜெப ஆலயங்களில் செய்யப்படும் வழக்கமான ஆசாரிய ஜெபங்களை மட்டும் அறிந்தவர்களாய் இருந்திருப்பார்கள் தனிப்பட்ட ஜெபம் குளிரான சில வாசகங்களை மறுபடியும் மறுபடியுமான உச்சரிக்கின்றவைகளாகவே அவர்களுக்கு இருந்திருக்கக்கூடும்.

அவர்கள் இரட்சிக்கப்பட்ட பின்பாக இந்த விசுவாசிகள் ஜெப ஐக்கியத்தை நாடுகிறவர்களாக இருப்பார்கள். ஜெபத்தில் உள்ள ஜீவ துடிப்பைக் கொண்டிருந்தார்கள். ஊக்கமான ஜெபத்தையும், அதின் சிலாக்கியத்தையும் உணர்ந்திருப்பார்கள். தாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்பதையும் தங்களின் பிரதான ஆசாரியர் பரலோகத்தில் தங்களின் கதறுதலுக்கு செவி கொடுக்கிறார் என்பதையும் அறிந்திருந்தார்கள். ஜெபிக்கும்போது அவர்கள் உள்ளம் உற்சாகமடைவதையும், ஆர்வம் கொள்ளுவதையும் அறிந்திருந்தார்கள். மேலும், தங்கள் ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்கிறார் என்பதையும் மெய்யாகவே அறிந்திருந்தார்கள்.

ஜெபத்தைக் குறித்த ஒரு புதிய ஆர்வம் இரட்சிப்பின் அடையாளங்களில் முக்கியமான ஒன்று. தேவனுக்குள்ளான தங்களின் புத்திர சுவிகாரத்தை உணர்ந்தவர்களாக, தேவனுடைய பிரசன்னத்தை வாஞ்சையோடு தேடிச் செல்லுபவர்களாகக் காணப்படுவார்கள். தேவ ஆவியானவர்தாமே இவ்விதமான சித்தையை இருதயத்தில் வைக்கிறவர். “மேலும், நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.” (கலாத்தியர். 4:6), இவ்விதமான தனிப்பட்ட ஜெப ஆர்வம் இல்லாதவர்களின் இரட்சிப்பு சந்தேகத்திற்குரியதே. நாம் இவ்விதமானவர்களை நோக்கி, ஜெபம் அவர்களுக்கு எப்படி இருக்கிறது? என்பதைக் கேட்க வேண்டும். தேவன் அவர்கள் ஜெபங்களுக்கு எவ்விதம் பதில் கொடுத்து வருகிறார் என்பதை அவர்களால் பகிர்ந்து கொள்ள முடிகிறதா? எவ்விதமான காரியங்களுக்காக, அவர்கள் ஜெபிக்கிறார்கள்? பழைய இரட்சிக்கப் படாத அநேக மக்களைப் போல வெறும் சுயநல ஜெபமும், வெறும் உலக ஆசீர்வாத ஜெபங்களை மாத்திரமே செய்து கொண்டிருக்கிறார்களா? அல்லது தேவனுடைய வார்த்தையை நன்கு விளங்கிக் கொள்ளவும். பாவத்தின்மேல் வெற்றியையும், மற்றவர்களிடத்தில் சாட்சி பகர ஞானம் மற்றும் வல்லமைக்காக ஜெபிக்கிறார்களா? உண்மையாக இரட்சிக்கப் பட்டவர்கள் ஆவிக்குரிய ஜெபத்தைச் செய்கிறவர்களாகக் காணப்படுவார்கள். இரட்சிக்கப்படாத குடும்ப நபர்களை, உறவினர்களை, நண்பர்களை நினைவு கூர்ந்து அவர்களின் இரட்சிப்பிற்காக, உண்மையான பாரத்தோடு ஜெபிக்கிறவர்களாக இருப்பார்கள். தேவனின் நன்மைகளுக்காக தேவனைத் துதிக்கிறவர்களாய் இருப்பார்கள். தங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் முறுமுறுக்கிறவர்களாக இல்லாமல் கிருபாசனத்தண்டையில் அவ்விதமான வேளைகளில் கிட்டிச் சேர்கிறவர்களாகக் காணப்படுவார்கள். இரட்சிப்பின் ஆரம்ப நாட்களில் ஜெபம் ஒரு முக்கியமான அடையாளத்தை அவர்களில் கொண்டிருக்கும். அது அவர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையூட்டும் ஆவிக்குரிய கருவியாகக் காணப்படும்.

  1. புதிய இருதயம்:

இன்னுமொரு இரட்சிப்பின் அடையாளத்தை அப்போஸ்தலர் 2:46,47 - ல் வாசிக்கிறோம். "Sin less of Heart" என்று ஆங்கில வேதாகமத்தில் தெளிவாகப் பார்க்கிறோம். அதாவது உண்மையான, பிரிக்கப்படாத, அர்ப்பணிக்கப்பட்ட இருதயம் என்று சொல்லப்படுகிறது. மற்றுமொரு விதத்தில் சொல்லப்போனால் ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனின் உள்ளான மனதிலும், இருதயத்திலும், உணர்வுகளிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தேவனுடைய காரியங்களுக்குத் திறந்த மனதும் நோக்கங்களில் தேவனுக்கடுத்த பரிசுத்தமும் காணப்படும். தேவனுடைய ஆசிர்வாதமும் உலக சிநேகமும் இணைத்து இருக்காது. தேவனுடைய காரியங்களும் சிற்றின்பங்களும் ஒன்றாகச் சென்று கொண்டிருக்காது.

வேதம் அவர்களைக் குறித்து இவ்விதம் சொல்லுகிறது. இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாய் இருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின (2கொரிந்தியர் 5:17). தேவனுடைய மெய்யான இரட்சிப்பில் தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறுகிறது. அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். (எசேக்கியல் 11:19).

பழைய கடினமான, குளிர்ந்துபோன இருதயம் மாறி. ஆவிக்குரிய காரியங்களை வாஞ்சித்து தேவ ஐக்கியத்தை நாடும் புதிய இருதயமாக மாற்றப்படுகிறது. தேவனுடைய சித்தத்தை தேடுகிற இருதயமுள்ளவர்கள் கிறிஸ்தவ கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுகிறவனாகக் காணப்படுவான். புதிய வாஞ்சைகளையும், புதிய நோக்கங்களையும், புதிய விருப்பங்களையும் கொண்டவர்களாக அவர்கள் காணப்படுவார்கள். உலகமும், அதின் வழிகளும் விருப்பமற்றதாகவும், இப்போது வாஞ்சிக்கிறவைகள் தேவனுடைய காரியங்களுக்கும். தேவனுடைய வார்த்தைக்கும் ஏற்றதாகவும் இருக்கும். அப்படியானால், தேவனுடைய வார்த்தை இவ்விதம் சொல்லுவது எவ்வளவு உண்மையாயிருக்கிறது. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (லூக்கா 12:34).

ஒரு மெய்யான விசுவாசி போதிக்கப்பட கூடியவனாகவும். கற்றுக்கொள்ளக் கூடியவனாகவும் இருப்பான். முன்பெல்லாம் தான் நினைத்ததே சரி என்று எண்ணுகிறவனும், பேசுகிறவனுமாக இருந்தான். ஆனால், தற்போது ஆவிக்குரிய காரியங்களை மற்றவர்களிடத்தில் கற்றுக் கொள்ளக்கூடிய தாழ்மையுடையவர்களாய்க் காணப்படுவான். இவ்விதமான மாற்றத்தைப் பெற்றிருக்கிறவர்களைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாயிருக்கும். அவர்கள் தேவனுக்கு ஏற்றதையே செய்ய விரும்புகிறவர்களாய்க் காணப்படுவார்கள். சில சமயங்களில் பழைய எதிரான சுபாவங்கள் வெளிப்படப் பார்த்தாலும் அது அப்படியே அடங்கிவிடும். மேலே சொல்லப்பட்ட தன்மையற்றவர்களாய் பெருமையோடும். தாழ்மையற்ற அவர்களுமாய், போதிக்கப்பட விரும்பாதவர்களாய் உலக மேன்மையையும், புகழ்ச்சியையும் விரும்பி உலகத்தில் மேன்மையானவர்களாய்க் காணப்பட விரும்புகிறவர்களின் இரட்சிப்பு சந்தேகத்திற்குரியதே. இவ்விதமானவர்களில் புதிய இருதய அனுபவம் கிடையாது. மேலும், அப்போஸ்தலர் 2:43 -ல் "எல்லோருக்கும் பயமுண்டாயிற்று" என்று பார்க்கிறோம். இந்த பயம் தேவ பயத்தைக் குறிக்கிறது. அவருடைய பரிசுத்தத்தைக் குறித்த பயம் காணப்பட்டது. புதிய இருதயம் பெற்றவர்கள் தேவனைக் குறித்த பரிசுத்த பயத்தைக் கொண்டிருப்பார்கள். இன்றைக்கு அநேக கிறிஸ்தவ கூட்டங்களில் தேவனைக் குறித்த பரிசுத்த பயமற்றவர்களாய்ப் பேசும் தலைவர்களும், மக்களும் காணப்படுவது மிகவும் வேதனையான காரியம். மெய்யாகவே இரட்சிக்கப்பட்டவர்கள் ஆராதனைகளிலும், ஆராதிப்பதிலும் பரிசுத்த பயம் உள்ளவர்களாய் இருதயம் மாற்றப்பட்டவர்களாய்க் காணப்படுவார்கள்.

  1. இரட்சிப்பைக் குறித்து ஆரம்ப நிச்சயம்:

அப்போஸ்தலர் 2 : 41, 47 ஆகிய வசனங்களில் அவர்கள் இரட்சிப்பின் ஆரம்ப நிச்சயத்தைக் கொண்டிருந்தார்கள் என்று பார்க்கிறோம். மகிழ்ச்சி (46ம் வசனம்), தேவனைத் துதித்தார்கள் (47ம் வசனம்) ஆகியவைகள் தேவனைக் குறித்த அன்பையும், தேவனுக்கு ஒப்புக் கொடுத்தலையும் காட்டுகிறது. ஒவ்வொரு விசுவாசியும் தான் தேவனுக்குச் சொந்தமானவன், சொந்தமானவள் என்ற உறுதியைக் கொண்டிருப்பார்கள். "நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளான போது, வாக்குத்தத்ததம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் முத்திரை போடப்பட்டீர்கள்" (எபேசியர் 1:13). இதே ஆசீர்வாதத்தை 2கொரிந்தியர் 1:22 -லும் நாம் பார்க்கிறோம்.

கிறிஸ்துவுக்குள் பிறந்த புதிய விசுவாசியில் பெரிதான அளவில் இந்த நிச்சயத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் அந்த முத்திரையைக் காண முடியும். தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்று சொல்லப்படும் படியான முத்திரை காணப்படும் ஒவ்வொரு உண்மையான இரட்சிப்பைப் பெற்ற விசுவாசியிலும் தேவ ஆவியானவரின் முத்திரை காணப்படும்.

ஒரு மெய்யான விசுவாசியில் முன்பெற்றிராத தேவ சமாதானம் காணப்படும். பாவ மன்னிப்பைப் பெற்ற நிச்சயத்தினால் இது உண்டாகுகின்றது. முத்திரையானது பிறகு அவர்கள் முழுமையாய்ப் பெறப்போகின்ற கிறிஸ்தவ சிலாக்கியங்கள், பரலோகத்தின் காரியங்களுக்கு ஆரம்ப அச்சாரமாயிருக்கிறது. தன்னில் ஏற்பட்டிருக்கிற மாற்றத்தைக் கண்டு தானே வியக்கக் கூடியவனாகவும் அவன் இருப்பான். பாவத்தைக் குறித்த புதிய வெறுப்பும், பாவத்தைக் கட்டுப்படுத்துகிற பெலனும், வல்லமையும் அவனில் காணப்படும். ஆனால், அதே சமயத்தில் எல்லோரிலும் ஒரே விதமாக இவை அனைத்தும் காணப்படாவிட்டாலும் அவைகளின் ஆரம்பமும், தொடர்ச்சியும் காணப்படும்.

  1. சாத்தானின் தாக்குதல்

இது அப்போஸ்தலர் 2 ஆம் அதிகாரத்தில் சொல்லப்படவில்லை யென்றாலும் சாத்தானின் தாக்குதல் இரட்சிப்பின் அடையாளங்களில் ஒன்றாகும். புதிதாக இரட்சிக்கப்பட்டவர்களின் மனதை, சந்தேகங்கள், பயங்கள் என்ற அக்கினி அம்புகளைக் கொண்டு சாத்தான் தாக்குவான். தேவனைத் தேடுகிறவர்கள் தேவனுடைய சத்தியத்தைக் குறித்தும், ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் குறித்தும் சந்தேகங்களினால், தாக்கப்படும் போது தேவ ஆவியானவர் அவர்களில் கிரியை செய்கிறார் என்று அர்த்தம். ஒரு இரட்சிக்கப்படாத ஆத்துமா இன்னும் ஆவிக்குரிய அடிமைத்தனத்தில் இருக்கும்பொழுது அவ்வளவாக சாத்தானால் தாக்கப்படுவதில்லை. ஆண்டவராகிய இயேசு இதைக் குறித்து லூக்கா 11: 21-ல் சொல்லுகிறதைப் பார்க்கலாம்.

ஆயுதந்தரித்த பலவான் தன் அரமணையைக் காக்கிறபோது. அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும். மெய்யான இரட்சிப்பைப் பெற்றவர்கள் அவனுடைய பிடிக்குள் இன்னமாக இல்லை. அவர்கள் தப்பித்து விட்டார்கள். ஆகவே, தான் அவர்களோடு யுத்தம் செய்கிறவனாய் அவன் காணப்படுகிறான். "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” (எபேசியர் 6:12) உனக்குள் ஏற்படும் போராட்டங்களை உணருகிற நிச்சயமற்ற தன்மைகள், அநேக சமயங்களில் ஏற்படும் சந்தேகங்கள் அவர்கள் தற்போது யுத்தகளத்தில் இருப்பதையும் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. இரட்சிக்கப்படுகிற இளம் விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய விதத்தில் உதவி செய்ய வேண்டும். சாத்தான் அவர்களின் இரட்சிப்பை ஒருக்காலும் எடுத்துப்போட முடியாது என்றாலும் கிறிஸ்துவுக்குள்ளான சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கெடுக்கப் பார்ப்பான்.

சாத்தானின் தந்திரங்கள் வித்தியாசமானது. ஒரு விசுவாசி தன் விசுவாசத்தைக் குறித்து சந்தேகப்படச் செய்வான். அவன் ஆம் எல்லாம். உண்மைதான், விசுவாசம் உண்மைதான். இரட்சிப்பும் உண்மைதான், ஆனால், நீயோ இரட்சிக்கப்படவில்லை. நீயாகவே அவ்விதம் எண்ணிக் கொள்ளுகிறாய்? என்பான். ஏதாகிலும் தவறிவிட்டால் உடனே பார்த்தாயா, நீ எப்படி மெய்யாகவே இரட்சிக்கப் பட்டிருக்கக் கூடும்? என்று குற்றஞ்சாட்டுவான்.

நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா? என்று அதைக்குறித்து கவலைப்படுவதே நல்லது தான். உண்மையான கிறிஸ்தவர்கள் தங்கள் இரட்சிப்பைக் குறித்து கருத்துள்ளவர்களாய் இருப்பார்கள். அவர்களின் ஆவிக்குரிய நிலை அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இதை பியூரிட்டன்ஸ் என்று சொல்லப்படும் தூய்மைவாதிகள் "பரிசுத்த அச்சம்" என்று அழைக்கிறார்கள். இது நல்ல ஒரு ஆவிக்குரிய நிலையைக் காட்டுகிறது. அவர்களுடைய பொக்கிஷம் தேவனுடைய இராஜ்ஜியத்தில் இருக்கிறதென்பதைக் காட்டுகிறது. ஆனால், இரட்சிக்கப்படாதவர்கள் இதைக்குறித்து அக்கரையும் கவலையும் கொள்ளமாட்டார்கள். அது அவர்களுக்கு முக்கியமல்ல.

இரட்சிப்பின் அடையாளங்களின் சுருக்கம்:

1 உண்மையான மனந்திரும்புதல் வேண்டும் - நொறுங்குண்டதும், நறுங்குண்டதுமான இருதயம் தேவனுடைய கிருபைக்காக இரக்கத்திற்காக நோக்கி பார்க்கும்.

2 தேவனுடைய வார்த்தையைக் குறித்த புதிய தெளிவும், விளங்குதலும், அதின் அதிகாரத்திற்கு கீழ்படிதலும் காணப்படும்.

3 தேவ பிள்ளைகளின் ஐக்கியத்தைத் தேடுதலும், தேவக் குடும்பத்தில் பிறந்த உணர்வோடு காணப்படுதலும் இருக்கும்.

  1. ஜெபிக்கும்படியான விருப்பமும், ஜெபத்தில் தேவனோடு உறவாடுதலை வாஞ்சித்து அதில் தொடர்ந்து வளருதலும் காணப்படும்.

5 புதிய இருதயம் காணப்படும். உலகத்திலிருந்து விடுபட்டு. தேவனை வாஞ்சிப்பதினால் புதிய வாஞ்சைகளும். கர்த்தருக்கேற்ற விருப்பங்களும், மகிழ்ச்சியும் அந்த இருதயத்தில் காணப்படும். மேலும் பரிசுத்தமாகுதல் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாய் நடைபெறும் தேவனுக்குப் பிரியமாய் நடப்பதும், கீழ்ப்படிதலும் அங்கே காணப்படும்.

6 தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்ற ஆரம்ப நிச்சயம் இருதயத்தில் காணப்படும். தேவ ஆவியானவரே அதை இருதயத்தில் வைக்கிறார்.

7 சாத்தானின் தாக்குதல்கள் புதிய சோதனைகளாக, சந்தேகங்களாக பயங்களாக காணப்படலாம். ஆவிக்குரிய யுத்தம் ஆரம்பமாகி விட்டது என்பது அறியப்படும்.

இந்த இரட்சிப்பின் அடையாளங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் காணப்படுமா? வேதத்தில் உள்ள அநேக இரட்சிப்பின் செயல்களைப் பார்க்கும்போது இரட்சிப்பு சில சமயங்களில் சடுதியாக ஏற்படலாம். சில சமயங்களில் தொடர்ந்து சில காலங்களாக நடைபெறுகிறதாக இருக்கலாம். ஒரு பாவி பயத்தைப் பற்றி உணரும்போது, அவனுக்குள் படிப்படியாக வெளிச்சமும், விளங்குதலும் வரலாம். தன்னுடைய எல்லா இருதயத்தின் கடினத் தன்மையும் நொறுக்கப்பட்டு, தேவனுக்கு முன்பாக சரணடைவதில் சில சமயம் சில காலங்கள் செல்லலாம். ஒரு பாவி இரட்சிப்பின் மாறுதலுக்குள் வருவதற்கு முன் பாவத்தைக் குறித்து உணருவதும், தேவனைத் தேடுவதும் சில காலம் தொடர்ச்சியாக நடை பெறுகிற காரியமாகவும் கூட இருக்கலாம்.

இரட்சிப்பின் அடையாளங்களில் சில, ஆவியானவர் இருதயத்தில் செய்யும் கிரியை மூலமாக ஆரம்பத்தில் வெளிப்பட்டு பிறகு தொடர்ச்சியாக காணப்படலாம் ஆனால், இருள் முற்றிலும் நீங்கி வெளிச்சம் வரும்போது, குற்ற உணர்வு நீங்கி பாவ மன்னிப்பைப் பெறும் பொழுது இரட்சிப்பின் எல்லா அடையாளங்களும் அழகாக தெளிவாக பகிரங்கமாக வெளிப்படும். இதை வாசிக்கும் அன்பான சகோதரனே! சகோதரியே நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா?

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.