"அப்படியே பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்." (தீத்து 2:6)

கிறிஸ்துவின் ஊழியனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த தீத்துவுக்கு, அப்போஸ்தலனாகிய பவுல் நிருபத்தை எழுதி அனுப்புகையிலே, இளைஞர்களை விசேஷித்தவர்களாகக் கருதி அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றார். முதிர்வயதுள்ள ஆண்களையும், முதிர்வயதுள்ள பெண்களையும், வாலிபப் பெண்களையும் பற்றிக் குறிப்பிட்ட பிறகு, அவர் இந்த அர்த்தமுடைய புத்திமதியைக் கூறுகிறார்: "அப்படியே பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்" (தீத்து 2:6).

அப்போஸ்தலனாகிய பவுலினுடைய இந்த அறிவுரையையே நானும் கடைப்பிடிக்கப் போகிறேன். வாலிப வயதிலுள்ளவர்களுக்குக் கரிசனையோடு நான் ஒருசில புத்திமதிகளைக் கூறப் போகிறேன். இப்பொழுது நான் வயது முதிர்ந்தவன்; ஆனால், எனது வாலிப நாட்களின் சில காரியங்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றன. சந்தோஷங்களும், கவலைகளும், எதிர்பார்ப்புகளும், பயங்களும், சோதனைகளும், துன்பங்களும், தவறான புரிதல்களும், தவறாகச் செலுத்திய அன்பும், அறியாமல் செய்த தவறுகளும், ஆசைகளும் எப்படி ஒரு வாலிபனை அவன் வாலிப நாட்களில் சூழ்ந்திருக்கின்றன என்பதற்கு, என் வாழ்க்கையிலேயே நிறைய உதாரணங்களை நான் வைத்திருக்கிறேன். ஆகவே, என்னுடைய அனுபவத்தின் வாயிலாக நான் சொல்லுகிற ஏதாவது ஒருசில காரியங்கள், சில வாலிபர்களையாவது சரியான பாதைக்குத் திருப்பி, அவர்களைப் பாவத்திலிருந்து காத்து, நித்திய வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டுசெல்லுமானால் நான் மிகவும் நன்றியுள்ளவனாய் இருப்பேன்.

இந்தப் புத்தகத்தில் நான் குறிப்பிட விரும்பும் நான்கு காரியங்களைப் பார்ப்போம்:

  1. இளைஞர்களுக்குப் புத்திமதிகளைச் சொல்வதற்கான பொதுவான காரணங்களைக் குறிப்பிடுகிறேன்.

  2. இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டிய சில ஆபத்துகளைக் குறித்து எச்சரிக்கிறேன்.

  3. இளைஞர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய சில பொதுவான புத்திமதிகளைக் குறிப்பிடுகிறேன்.

  4. சில ஒழுங்கு நடவடிக்கைகளைக் கட்டளையாகவும் குறிப்பிடுகிறேன். அவற்றை இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டுமெனப் புத்திசொல்லுகிறேன்.

இந்த நான்கு காரியங்களிலும் நான் கூறுகிற விஷயங்கள் இளைஞர்களுக்குப் பயனுள்ளதாக இருந்து, அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென நான் தேவனிடம் ஜெபிக்கிறேன்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.