புத்தகங்கள்

ஆசிரியர்: பீட்டர் மாஸ்டர்ஸ்
தமிழாக்கம்: சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை - சேலம்
வாசிப்பதற்கான நேரம்: 12 நிமிடங்கள்

உண்மையான இரட்சிப்பில் வெளிப்படும் வெளிப்பிரகாரமான அடையாளங்கள் உண்டா என்று கேட்டால், "ஆம், உண்டு" என்றுதான் சொல்லவேண்டும். நமது முற்பிதாக்களால் 'கிருபையின் அடையாளங்கள்' என்று அழைக்கப்பெற்ற இரட்சிப்பின் அடையாளங்கள் அநேகம் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1 யோவான் நிருபத்திலும், ரோமர் 8-ம் அதிகாரத்திலும், அப்போஸ்தலர் நடபடிகள் 2-ம் அதிகாரத்திலும் கிறிஸ்தவ நடைமுறையில் காணப்படும் இவ்வடையாளங்கள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய அடையாளங்களை இந்த நாட்களில் நாம் காண வேண்டிய அவசியத்தை முக்கியமாக உணர வேண்டும். தற்காலத்தில் பிரசங்கிக்கப்படும் சுவிசேஷ செய்திகள் அநேகம், பாவத்தைக் குறித்தும் மனந்திரும்புதலைக் குறித்தும் பேசுவதை விட்டுவிட்டு, ஆசீர்வாதங்களை மட்டுமே மையப்படுத்துபவையாக இருக்கின்றன. அநேகர் வேதம் சொல்லும் உண்மையான மனந்திரும்புதல் இல்லாமல், கிறிஸ்தவப் பணிகளிலும் சபை ஊழியங்களிலும் ஈடுபடுவது இன்று அதிகம் காணப்படுகிறது; இவர்களில் தங்களை 'விசுவாசிகள்' என்று அழைத்துக் கொள்பவர்களும் உண்டு. இயேசுவை விசுவாசித்து இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாக மேடைக்கு முன்வருதலும், கையை உயர்த்துதலும், கையொப்பமிடுதலும் இன்று அதிகம் காணப்படுகின்றன. அவ்விதம் செய்தவர்கள் இரட்சிக்கப்பட்டு விட்டார்கள் என்று அவர்களுக்குப் பொய்யான உறுதியும் அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் மெய்யாகவே இரட்சிக்கப்பட்டவர்களா?

இன்று அநேக ஊழியர்கள் சத்தியத்தை மேலோட்டமாகப் போதிக்கிறார்கள். கூட்டங்களில் தீர்மானம் எடுப்பவர்கள் மெய்யாகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களா என்று ஏன் சோதித்துப் பார்க்கப்படுவதில்லை? அவர்கள் உண்மையாக மனந்திரும்பாமல் இரகசியப் பாவங்களில் சிக்குண்டவர்களாக இருக்கிறார்களா? தங்கள் சுயநீதியை விட்டு, கிறிஸ்துவின் பலியையே முற்றிலும் சார்ந்து, கிறிஸ்துவின் நீதியைச் சுதந்தரித்திருக்கிறார்களா? என்று எண்ணிப் பார்ப்பதில்லை. ஆகவே, நாம் இந்த முக்கியமான இரட்சிப்பின் அடையாளங்களைக் குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய ஊழியங்களில் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் போதிக்கிறோமா? ஆத்துமாக்கள் மனந்திரும்புதலின் மெய்யான சத்தியத்திற்குள் வழிநடத்தப்படுகிறார்களா? என்பதைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஏழு அடையாளங்கள்:

பெந்தெகொஸ்தே நாளில் இரட்சிக்கப்பட்டவர்களின் மனப்பான்மையிலும் வாழ்க்கையிலும் காணப்பட்ட மாற்றத்தை அப்போஸ்தலர் 2:37, 38, 41, 47 ஆகிய வசனங்களில் நாம் காண்கிறோம். பெந்தெகொஸ்தே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். தேவ வசனத்தை அவர்கள் கேட்டபொழுது, தங்கள் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகப் பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: "சகோதரரே, இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி, "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார். அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

இந்த வசனப் பகுதியில் இரட்சிப்பின் அல்லது கிருபையின் ஏழு அடையாளங்களைக் காண்கிறோம். இரட்சிக்கப்பட்ட இவர்களில் ஆழமான தனிப்பட்ட இரட்சிப்பின் கிரியை காணப்பட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவர்கள் இருதயத்திலும் மனதிலும் முற்றிலும் மாற்றப்பட்டவர்களாய் இருந்தார்கள். இது கர்த்தருடைய உன்னதச் செயலேயன்றி வேறல்ல; தேவன் அவர்களை ஆச்சரியமாக மாற்றியிருந்தார். ஒரு மனிதனில் கர்த்தருடைய கிருபையின் கிரியையைக் கண்டுகொள்ள முடியும் என்பதை இப்பகுதி தெளிவாகக் காட்டுகிறது. நம்முடைய இரட்சிப்பைக் குறித்து நாம் அக்கறையுள்ளவர்களாக இருப்போமானால், இந்தக் கேள்விகளை நமக்குள்ளாகக் கேட்டுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்: நாம் நம்முடைய வாழ்க்கையில் இந்த விதமான கர்த்தரின் கிருபையின் அடையாளங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோமா?

இந்த அடையாளங்களை நம்மில் காண்பது நம்மை கர்த்தருக்குள் உற்சாகப்படுத்துகிறவைகளாக இருக்கும். மற்றவர்களிலும் இவ்விதமான மெய்யான அடையாளங்கள் காணப்படுவதைப் பார்க்கும்போது, எந்தச் சந்தேகமுமின்றி அவர்களின் இரட்சிப்பை இனங்கண்டுகொள்ள முடியும். அந்த அடையாளங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. பாவத்தைக் குறித்த உணர்வு: மேலே பார்த்த வசனப்பகுதியில் நாம் காணும் முதலாவது அடையாளம், உண்மையான மனந்திரும்புதலுக்கேற்ற 'பாவத்தைக் குறித்த உணர்வு' (அப். 2:37-38). ஞானஸ்நானம் உண்மையாக மனந்திரும்பினவர்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் இருதயத்திலே குத்தப்பட்டார்கள். அந்த வார்த்தையைக் கிரேக்க மொழியில் பார்க்கும்போது 'இருதயத்தில் வெட்டுப்பட்டார்கள்' என்று பொருள்படும். தங்கள் பாவ வாழ்க்கையைக் குறித்து அவர்கள் மெய்யாகவே துக்கப்பட்டார்கள்.

ஒருவன் இரட்சகரான இயேசுவை மாத்திரம் சார்ந்துகொள்கிறானா? அவரே தன்னுடைய இரட்சகர் என்றும், ஆண்டவர் என்றும் தன்னை முழுமையாக அவருக்கு ஒப்புக்கொடுக்கிறானா? தங்களைத் தேவனுக்கு முன்பாக மெய்யாகவே தாழ்த்தியிருக்கிறார்களா? உலகத்துக்கும் அவர்களுக்கும் உண்டான தொடர்பில் மெய்யான மாற்றமுண்டா? தேவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற வாஞ்சை அவர்களில் உண்டா? பரிசுத்தத்தில் முன்னேற வேண்டும் என்ற மெய்யான வாஞ்சை அவர்களில் உண்டா? இவ்விதமான அடையாளங்கள் கண்டிப்பாக ஆராயப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

சில சமயங்களில் தங்களின் இரட்சிப்பைக் குறித்து நிச்சயமற்றவர்களாகவும், அதைக் குறித்துக் கலங்கிக் கொண்டிருப்பவர்களாகவும் சிலர் இருக்கலாம். ஆனால், இவ்விதமான அடையாளங்களும், நீதியைக் குறித்த பசிதாகமும் அவர்களில் காணப்படும். இவ்விதமான மக்களிடம் தேவன் செய்துள்ள மகத்துவமான கிருபைகளை நினைவுபடுத்தி, "நீங்கள் மனந்திரும்புதலின் பள்ளத்தாக்கின் வழியாய்த் தேவ ராஜ்யத்தின் மலையின்மேல் உயரே சென்றுகொண்டிருக்கிறீர்கள்" என்பதை அவர்களுக்கு உணர்த்தி உற்சாகப்படுத்த வேண்டும்.

2. வேதத்தை விளங்கிக்கொள்ளுதல்: இரட்சிப்பின் அடையாளங்களில் இரண்டாவதாகக் காணப்படும் அடையாளத்தை அப்போஸ்தலர் 2:42-ல் பார்க்கிறோம். "அப்போஸ்தலருடைய உபதேசத்தில் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்." கிரேக்க மொழிபெயர்ப்பில் பார்க்கும்போது, அப்போஸ்தலருடைய உபதேசத்தோடு தங்களை அதிகமாய் இணைத்துக்கொண்டார்கள் அல்லது ஒட்டிக்கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் உறுதியாய், தொடர்ச்சியாய் அதில் நிலைத்திருந்தார்கள். மக்கள் தேவனுடைய வார்த்தையை விளங்கிக்கொள்ளும்படியாக நேசித்து, அதின் அதிகாரத்திற்கும் ஆளுகைக்கும் தங்கள் இருதயத்தை ஒப்புக்கொடுப்பது ஒரு திட்டமான அடையாளமாயிருக்கிறது. மெய்யாகவே இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதோடு அதிகமாகத் தன்னை இணைத்துக்கொள்வான். அதுவே அவனுக்கு மையமாகவும், அதற்கு அவன் உண்மையுள்ளவனாகவும் இருப்பான்.

இது இரட்சிப்பின் அடையாளங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் 1 கொரிந்தியர் 2:14-ம் வசனம் திட்டமாக இதைக் குறித்துச் சொல்லுகிறது: "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான், அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." இரட்சிக்கப்படாதவர்களுக்கு வேதம் புரியாத புதிராகவும், மறைபொருளாகவும், விளங்கிக்கொள்வதற்குக் கடினமானதாகவும் காணப்படும். ஆனால், அவர்கள் இரட்சிக்கப்பட்ட பிறகு தேவ சத்தியம் அவர்களுக்கு வெளிச்சம் தருகிறதாய், இருதயத்தை அசைக்கிறதாய், ஆறுதல்படுத்துகிறதாய், வாழ்க்கையின் நம்பிக்கையாய்க் காணப்படுகிறது.

தேவ ஆவியானவர் மாத்திரமே சத்தியத்தை நமக்கு விளங்கப்பண்ணக்கூடும். எசேக்கியேல், வெளிப்படுத்தின விசேஷம் போன்ற புத்தகங்களை உடனடியாக விளங்கிக்கொள்ள முடியாததாய்க் காணப்பட்டாலும், பொதுவாகத் தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு முற்றிலும் புரியாததாக இருக்காது. தேவன் வேதத்தை அறிந்துகொள்கிற புதிய மனதையும் புதிய கண்களையும் கொடுக்கிறார்.

இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்லுகிறவர்களுக்குத் தேவனுடைய வார்த்தை எவ்விதம் இருக்கிறது என்பதைக் குறித்துக் கேட்க வேண்டும். மெய்யாகவே அது அவர்களுக்கு ஆச்சரியமான புதிய வெளிச்சத்தைக் கொடுத்து வழிநடத்துகிறதா? ஒரு சமயத்தில் படிப்பதற்கு மிகவும் சலிப்பாக இருந்த வேதம், தற்போது படிப்பதற்கு உற்சாகமுள்ளதாக, இன்னும் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொடுக்கிறதாக இருக்கிறதா? அவர்களை வழிநடத்திச் செல்லும் அதிகாரம் அதில் உள்ளதாக உணர முடிகிறதா? மெய்யாகவே இரட்சிக்கப்பட்டவர்கள், வேதம் சொல்லுவதைச் செய்ய வேண்டும் என்று அதற்குக் கீழ்ப்படிய மனதுள்ளவர்களாக இருப்பார்கள். தேவ வார்த்தையினால் எந்தத் தாக்கமும் அடையாதவர்கள் இரட்சிக்கப்பட்டார்களா என்பது சந்தேகமே.

மேலும், தேவனுடைய வார்த்தையில் அவர்கள் உறுதியாய்த் தரித்திருப்பார்கள்; ஏனோதானோ என்று இருக்கமாட்டார்கள். அநேக வாரங்களாகத் தேவனுடைய ஆலயத்துக்கு வராமலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்க விருப்பம் இல்லாமலும் இருக்கிறார்களா? அப்படியானால் இவர்களின் இரட்சிப்பு கேள்விக்குறியே. அவர்களில் ஏற்பட்டிருக்கிற புதிய இரட்சிப்பின் மாற்றம் கொஞ்சம் வெளிப்பட்டு மறைவதல்ல; அதில் தொடர்ச்சியும், முன்னேற்றமும், உறுதியும் காணப்படும். தேவனுடைய வார்த்தையை வாசிப்பதிலும், அதைச் சிந்திப்பதிலும், கேட்பதிலும் ஆர்வம் காணப்படும். தொடர்ந்து தேவ வார்த்தையில் நிலைத்திருப்பது இரட்சிப்பின் முக்கியமான அடையாளமாகும்.

3. கிறிஸ்தவ ஐக்கியம்: அப்போஸ்தலர் 2:42-ல் மூன்றாவதாக மற்றுமொரு அடையாளத்தைப் பார்ப்போம்: "அந்நியோந்நியத்தில் (ஐக்கியத்தில்) உறுதியாய்த் தரித்திருந்தார்கள்." அந்தப் பெந்தெகொஸ்தே நாளில் இரட்சிக்கப்பட்டவர்கள், தேவனுடைய பிள்ளைகளோடு ஒருவருக்கொருவர் தேவ அன்பினால் இணைக்கப்பட்டார்கள். இவ்விதமான கிறிஸ்தவ ஐக்கியத்தைத் தேடும்படியான புதிய வாஞ்சையும் விருப்பமும் இரட்சிப்பின் மற்றொரு அடையாளமாகும். கிறிஸ்தவ அன்பின் பிணைப்பு இவர்களில் காணப்படும். ஆகவேதான் 1 யோவான் 3:14-ல், "நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்" என்று வாசிக்கிறோம்.

இந்தப் பிணைப்பை அழகாக ரூத் 1:16-ல் பார்க்கிறோம்: "அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன், நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன், உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம், உம்முடைய தேவன் என்னுடைய தேவன்." இரட்சிக்கப்பட்டவர்கள் ஆலயக் கூடுகைகளில் கலந்துகொள்வதையும், விசுவாசிகளோடு ஐக்கியப்படுவதையும் அதிகம் வாஞ்சிப்பார்கள். கூட்டங்கள் முடிந்தவுடன் கிறிஸ்துவுக்குள்ளான அன்பைப் பகிர்ந்துகொள்ளுகிறவர்களாய்க் காணப்படுவார்கள். ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து மற்றவர்களிடம் பேசுகிறவர்களாகவும், தேவன் தங்களுடைய வாழ்க்கையில் செய்திருக்கிறவைகளைப் பகிர்ந்துகொள்பவர்களாகவும் காணப்படுவார்கள். ஜெபக் கூட்டங்களிலும் திருச்சபைக் கூட்டங்களிலும் பங்குபெற விருப்பப்படுவார்கள். தாங்கள் தேவ குடும்பத்தின் அங்கத்தினர் என்ற உணர்வோடு, பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை வாஞ்சிக்கிறவர்களாக இருப்பார்கள்.

இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லியும், இன்னமும் உலக மக்களின் ஐக்கியத்தையும் உலகச் சகவாசத்தையும் அதிகம் விரும்புகிறவர்களிடம் காணப்படுவது ஒரு சரியான அடையாளமல்ல. கிறிஸ்தவப் பிணைப்பும், உண்மையான ஐக்கியத்தின் வாஞ்சையும், தேவனுடைய காரியங்களைக் குறித்துப் பகிர்ந்துகொள்ளும் ஆர்வமும் இல்லாதவர்களின் இரட்சிப்பு சந்தேகத்திற்குரியதே.

4. ஜெபத்தில் ஆர்வம்: நாம் பார்க்கும் மற்றுமொரு அடையாளம் "ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருத்தல்" (அப். 2:42). இரட்சிக்கப்படுவதற்கு முன்பு அந்த யூதர்கள் தனிப்பட்ட, ஊக்கமான, உண்மையான ஜெபத்தை அறியாதவர்களாய் இருந்திருப்பார்கள். ஒருவேளை ஜெப ஆலயங்களில் செய்யப்படும் வழக்கமான ஆசாரிய ஜெபங்களை மட்டும் அறிந்தவர்களாயும், தனிப்பட்ட ஜெபம் என்பது உயிரற்ற சில வாசகங்களை மறுபடியும் மறுபடியுமாக உச்சரிக்கின்றவைகளாகவே அவர்களுக்கு இருந்திருக்கக்கூடும்.

ஆனால் இரட்சிக்கப்பட்ட பின்பாக, இந்த விசுவாசிகள் ஜெப ஐக்கியத்தை நாடுகிறவர்களாக மாறினார்கள். ஜெபத்தில் உள்ள ஜீவதுடிப்பைக் கொண்டிருந்தார்கள். ஊக்கமான ஜெபத்தையும், அதின் சிலாக்கியத்தையும் உணர்ந்திருப்பார்கள். தாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்பதையும், தங்களின் பிரதான ஆசாரியர் பரலோகத்தில் தங்களின் கதறுதலுக்குச் செவிகொடுக்கிறார் என்பதையும் அறிந்திருந்தார்கள். ஜெபிக்கும்போது அவர்கள் உள்ளம் உற்சாகமடைவதையும், தேவன் தங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார் என்பதையும் மெய்யாகவே அறிந்திருந்தார்கள்.
ஜெபத்தைக் குறித்த ஒரு புதிய ஆர்வம் இரட்சிப்பின் அடையாளங்களில் முக்கியமான ஒன்று. தேவனுக்குள்ளான தங்களின் புத்திர சுவிகாரத்தை உணர்ந்தவர்களாக, தேவனுடைய பிரசன்னத்தை வாஞ்சையோடு தேடிச் செல்பவர்களாகக் காணப்படுவார்கள். தேவ ஆவியானவர்தாமே இவ்விதமான சிந்தையை இருதயத்தில் வைக்கிறவர். "மேலும், நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்" (கலாத்தியர் 4:6). இவ்விதமான தனிப்பட்ட ஜெப ஆர்வம் இல்லாதவர்களின் இரட்சிப்பு சந்தேகத்திற்குரியதே.

நாம் இவ்விதமானவர்களை நோக்கி, "ஜெபம் உங்களுக்கு எப்படி இருக்கிறது?" என்பதைக் கேட்க வேண்டும். தேவன் அவர்கள் ஜெபங்களுக்கு எவ்விதம் பதில் கொடுத்து வருகிறார் என்பதை அவர்களால் பகிர்ந்துகொள்ள முடிகிறதா? எவ்விதமான காரியங்களுக்காக அவர்கள் ஜெபிக்கிறார்கள்? இரட்சிக்கப்படாத அநேக மக்களைப் போல வெறும் சுயநல ஜெபமும், உலக ஆசீர்வாதங்களுக்கான ஜெபங்களை மாத்திரமே செய்துகொண்டிருக்கிறார்களா? அல்லது தேவனுடைய வார்த்தையை நன்கு விளங்கிக்கொள்ளவும், பாவத்தின்மேல் வெற்றியடையவும், மற்றவர்களிடத்தில் சாட்சி பகர ஞானம் மற்றும் வல்லமைக்காகவும் ஜெபிக்கிறார்களா? உண்மையாக இரட்சிக்கப்பட்டவர்கள் ஆவிக்குரிய ஜெபத்தைச் செய்கிறவர்களாகக் காணப்படுவார்கள். இரட்சிக்கப்படாத குடும்ப நபர்கள், உறவினர்கள், நண்பர்களை நினைவுகூர்ந்து அவர்களின் இரட்சிப்பிற்காக உண்மையான பாரத்தோடு ஜெபிக்கிறவர்களாக இருப்பார்கள். தேவனின் நன்மைகளுக்காகத் தேவனைத் துதிக்கிறவர்களாய் இருப்பார்கள். வாழ்க்கையின் சோதனைகளில் முறுமுறுக்கிறவர்களாக இல்லாமல், கிருபாசனத்தண்டையில் கிட்டிச்சேருகிறவர்களாகக் காணப்படுவார்கள். இரட்சிப்பின் ஆரம்ப நாட்களில் ஜெபம் ஒரு பெரிய நம்பிக்கையூட்டும் ஆவிக்குரிய கருவியாக அவர்களிடம் செயல்படும்.

5. புதிய இருதயம்: இன்னுமொரு இரட்சிப்பின் அடையாளத்தை அப்போஸ்தலர் 2:46-ல் வாசிக்கிறோம். அதை ஆங்கில வேதாகமத்தில் "Singleness of heart" (கபடற்ற இருதயம் / ஏக இருதயம்) என்று பார்க்கிறோம். அதாவது உண்மையான, பிரிக்கப்படாத, தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட இருதயம் என்று சொல்லப்படுகிறது. ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனின் உள்ளான மனதிலும், இருதயத்திலும், உணர்வுகளிலும் ஆழமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தேவனுடைய காரியங்களுக்குத் திறந்த மனதும், நோக்கங்களில் தேவனுக்கடுத்த பரிசுத்தமும் காணப்படும். தேவனுடைய ஆசீர்வாதமும் உலக சிநேகமும் ஒன்றாக இணைந்திருக்காது; தேவனுடைய காரியங்களும் உலகச் சிற்றின்பங்களும் ஒன்றாகப் பயணிக்காது.

வேதம் அவர்களைக் குறித்து இவ்விதம் சொல்லுகிறது: "இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" (2 கொரி. 5:17). மெய்யான இரட்சிப்பில் தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறுகிறது: "அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்" (எசேக்கியேல் 11:19).

பழைய கடினமான, குளிர்ந்துபோன இருதயம் மாறி, ஆவிக்குரிய காரியங்களை வாஞ்சித்துத் தேவ ஐக்கியத்தை நாடும் புதிய இருதயமாக மாற்றப்படுகிறது. தேவனுடைய சித்தத்தைத் தேடுகிற இருதயமுள்ளவர்கள், கிறிஸ்தவக் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுகிறவர்களாகக் காணப்படுவார்கள். புதிய வாஞ்சைகளையும், புதிய நோக்கங்களையும், புதிய விருப்பங்களையும் கொண்டவர்களாக அவர்கள் காணப்படுவார்கள். உலகமும் அதின் வழிகளும் விருப்பமற்றதாகவும், தேவனுடைய வார்த்தைக்கு ஏற்ற காரியங்கள் மட்டுமே வாஞ்சிக்கத் தக்கதாகவும் மாறும். அப்படியானால், "உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்" (லூக்கா 12:34) என்று வேதம் சொல்லுவது எவ்வளவு உண்மையாயிருக்கிறது!

ஒரு மெய்யான விசுவாசி போதிக்கப்படக் கூடியவனாகவும், கற்றுக்கொள்ளக் கூடியவனாகவும் இருப்பான். முன்பெல்லாம் தான் நினைத்ததே சரி என்று எண்ணுகிறவனும் பேசுகிறவனுமாக இருந்தான்; ஆனால் தற்போது ஆவிக்குரிய காரியங்களை மற்றவர்களிடத்தில் கற்றுக்கொள்ளக்கூடிய தாழ்மையுடையவனாய்க் காணப்படுவான். இவ்விதமான மாற்றத்தைப் பெற்றிருக்கிறவர்களைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாயிருக்கும். அவர்கள் தேவனுக்கு ஏற்றதையே செய்ய விரும்புகிறவர்களாய்க் காணப்படுவார்கள். சில சமயங்களில் பழைய சுபாவங்கள் வெளிப்படப் பார்த்தாலும் அது உடனடியாக அடங்கிவிடும். தாழ்மையற்றவர்களாய், போதிக்கப்பட விரும்பாதவர்களாய், உலக மேன்மையையும் புகழ்ச்சியையும் விரும்பி உலகத்தில் மேன்மையானவர்களாய்க் காணப்பட விரும்புகிறவர்களின் இரட்சிப்பு சந்தேகத்திற்குரியதே.

மேலும், அப்போஸ்தலர் 2:43-ல் "எல்லோருக்கும் பயமுண்டாயிற்று" என்று பார்க்கிறோம். இந்தப் பயம் தேவபயத்தைக் குறிக்கிறது; அவருடைய பரிசுத்தத்தைக் குறித்த பயம் அங்கே காணப்பட்டது. புதிய இருதயம் பெற்றவர்கள் தேவனைக் குறித்த பரிசுத்த பயத்தைக் கொண்டிருப்பார்கள். இன்றைக்கு அநேக கிறிஸ்தவக் கூட்டங்களில் தேவனைக் குறித்த பரிசுத்த பயமற்றவர்களாய்ப் பேசும் தலைவர்களும் மக்களும் காணப்படுவது மிகவும் வேதனையான காரியம். மெய்யாகவே இரட்சிக்கப்பட்டவர்கள், தேவனை ஆராதிப்பதில் பரிசுத்த பயம் உள்ளவர்களாய், இருதயம் மாற்றப்பட்டவர்களாய்க் காணப்படுவார்கள்.

6. இரட்சிப்பைக் குறித்த ஆரம்ப நிச்சயம்: அப்போஸ்தலர் 2:46, 47 ஆகிய வசனங்களில் அவர்கள் இரட்சிப்பின் ஆரம்ப நிச்சயத்தைக் கொண்டிருந்தார்கள் என்று பார்க்கிறோம். "மகிழ்ச்சி" (வச. 46) மற்றும் "தேவனைத் துதித்தார்கள்" (வச. 47) ஆகியவைகள் தேவனைக் குறித்த அன்பையும், தேவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தலையும் காட்டுகிறது. ஒவ்வொரு விசுவாசியும் தான் தேவனுக்குச் சொந்தமானவன்/சொந்தமானவள் என்ற உறுதியைக் கொண்டிருப்பார்கள். "நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் முத்திரை போடப்பட்டீர்கள்" (எபேசியர் 1:13). இதே ஆசீர்வாதத்தை 2 கொரிந்தியர் 1:22-லும் நாம் பார்க்கிறோம்.

கிறிஸ்துவுக்குள் பிறந்த புதிய விசுவாசியில் பரிபூரணமான அளவில் இந்த நிச்சயத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், அந்த முத்திரையின் அடையாளத்தைக் காண முடியும். உண்மையான இரட்சிப்பைப் பெற்ற ஒவ்வொரு விசுவாசியிலும் 'தேவனுக்குச் சொந்தமானவர்கள்' என்று சொல்லப்படும்படியான பரிசுத்த ஆவியானவரின் முத்திரை காணப்படும்.

ஒரு மெய்யான விசுவாசியில் முன்பெற்றிராத தேவ சமாதானம் காணப்படும். பாவமன்னிப்பைப் பெற்ற நிச்சயத்தினால் இது உண்டாகிறது. இந்த முத்திரையானது, எதிர்காலத்தில் அவர்கள் முழுமையாய்ப் பெறப்போகின்ற பரலோகத்தின் காரியங்களுக்கு ஆரம்ப அச்சாரமாயிருக்கிறது. தன்னில் ஏற்பட்டிருக்கிற மாற்றத்தைக் கண்டு தானே வியக்கக்கூடியவனாகவும் அவன் இருப்பான். பாவத்தைக் குறித்த புதிய வெறுப்பும், பாவத்தைக் கட்டுப்படுத்துகிற பெலனும் அவனில் காணப்படும். எல்லோரிலும் ஒரே விதமாக இவை அனைத்தும் காணப்படாவிட்டாலும், அவைகளின் ஆரம்பமும் தொடர்ச்சியும் நிச்சயமாகக் காணப்படும்.

7. சாத்தானின் தாக்குதல்: இது அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் நேரடியாகச் சொல்லப்படவில்லையென்றாலும், சாத்தானின் தாக்குதல் இரட்சிப்பின் அடையாளங்களில் ஒன்றாகும். புதிதாக இரட்சிக்கப்பட்டவர்களின் மனதை, சந்தேகங்கள், பயங்கள் என்ற அக்கினி அம்புகளைக் கொண்டு சாத்தான் தாக்குவான். தேவனைத் தேடுகிறவர்கள் தேவனுடைய சத்தியத்தைக் குறித்தும், ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் குறித்தும் சந்தேகங்களினால் தாக்கப்படும்போது, தேவ ஆவியானவர் அவர்களில் கிரியை செய்கிறார் என்று அர்த்தம். ஒரு இரட்சிக்ப்படாத ஆத்துமா இன்னமும் ஆவிக்குரிய அடிமைத்தனத்தில் இருக்கும்பொழுது, அவ்வளவாகச் சாத்தானால் தாக்கப்படுவதில்லை. ஆண்டவராகிய இயேசு இதைக் குறித்து லூக்கா 11:21-ல் சொல்லுகிறதைப் பார்க்கலாம்: "ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும்."

மெய்யான இரட்சிப்பைப் பெற்றவர்கள் அவனுடைய பிடிக்குள் இன்னமும் இல்லை; அவர்கள் தப்பித்துவிட்டார்கள். ஆகவேதான், அவர்களோடு யுத்தம் செய்கிறவனாய் அவன் காணப்படுகிறான். "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு" (எபேசியர் 6:12). உங்களுக்குள் ஏற்படும் போராட்டங்களை உணரும் தன்மையும், அநேக சமயங்களில் ஏற்படும் சந்தேகங்களும், நீங்கள் தற்போது யுத்தகளத்தில் இருப்பதையும், இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும் காட்டுகிறது. இரட்சிக்கப்படுகிற இளம் விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய விதத்தில் மூத்தவர்கள் உதவி செய்ய வேண்டும். சாத்தான் அவர்களின் இரட்சிப்பை ஒருக்காலும் எடுத்துப்போட முடியாது என்றாலும், கிறிஸ்துவுக்குள்ளான சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கெடுக்கப் பார்ப்பான்.

சாத்தானின் தந்திரங்கள் வித்தியாசமானவை. ஒரு விசுவாசியைத் தன் விசுவாசத்தைக் குறித்துச் சந்தேகப்படச் செய்வான். "ஆம், எல்லாம் உண்மைதான், விசுவாசம் உண்மைதான், இரட்சிப்பும் உண்மைதான், ஆனால் நீ இரட்சிக்கப்படவில்லை. நீயாகவே அவ்விதம் எண்ணிக்கொள்ளுகிறாய்!" என்பான். விசுவாசி ஏதாகிலும் தவறிவிட்டால், "பார்த்தாயா, நீ எப்படி மெய்யாகவே இரட்சிக்கப்பட்டிருக்க முடியும்?" என்று உடனே குற்றஞ்சாட்டுவான்.

"நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா?" என்று அதைக் குறித்துக் கவலைப்படுவதே ஒரு நல்ல அடையாளம்தான். உண்மையான கிறிஸ்தவர்கள் தங்கள் இரட்சிப்பைக் குறித்துக் கருத்துள்ளவர்களாய் இருப்பார்கள். அவர்களின் ஆவிக்குரிய நிலை அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இதைத் தூய்மைவாதிகள் (Puritans) "பரிசுத்த அச்சம்" (Holy Fear) என்று அழைக்கிறார்கள். இது ஒரு நல்ல ஆவிக்குரிய நிலையைக் காட்டுகிறது. அவர்களுடைய பொக்கிஷம் தேவனுடைய இராஜ்ஜியத்தில் இருக்கிறதென்பதை இது வெளிப்படுத்துகிறது. ஆனால், இரட்சிக்கப்படாதவர்கள் இதைக் குறித்து அக்கறையும் கவலையும் கொள்ளமாட்டார்கள்; அது அவர்களுக்கு முக்கியமல்ல.

இரட்சிப்பின் அடையாளங்களின் சுருக்கம்:

  1. உண்மையான மனந்திரும்புதல்: நொறுங்குண்டதும், நறுங்குண்டதுமான இருதயம் தேவனுடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் அவரை நோக்கிப் பார்க்கும்.

  2. வேதத்தை நேசித்தல்: தேவனுடைய வார்த்தையைக் குறித்த புதிய தெளிவும், விளங்குதலும், அதின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதலும் காணப்படும்.

  3. ஐக்கியம்: தேவப் பிள்ளைகளின் ஐக்கியத்தைத் தேடுதலும், தேவக் குடும்பத்தில் பிறந்த உணர்வோடு காணப்படுதலும் இருக்கும்.

  4. ஜெப வாழ்க்கை: ஜெபிக்கும்படியான விருப்பமும், ஜெபத்தில் தேவனோடு உறவாடுதலை வாஞ்சித்து அதில் தொடர்ந்து வளருதலும் காணப்படும்.

  5. புதிய இருதயம்: உலகத்திலிருந்து விடுபட்டு, தேவனை வாஞ்சிப்பதினால் புதிய வாஞ்சைகளும், கர்த்தருக்கேற்ற விருப்பங்களும், மகிழ்ச்சியும் இருதயத்தில் காணப்படும். பரிசுத்தமாகுதல் தொடங்கப்பட்டுத் தொடர்ச்சியாய் நடைபெறும்; தேவனுக்குப் பிரியமாய் நடப்பதும், கீழ்ப்படிதலும் அங்கே காணப்படும்.

  6. இரட்சிப்பின் நிச்சயம்: 'தேவனுக்குச் சொந்தமானவர்கள்' என்ற ஆரம்ப நிச்சயம் இருதயத்தில் காணப்படும். தேவ ஆவியானவரே அதை இருதயத்தில் வைக்கிறார்.

  7. ஆவிக்குரிய யுத்தம்: சாத்தானின் தாக்குதல்கள் புதிய சோதனைகளாக, சந்தேகங்களாக, பயங்களாகக் காணப்படலாம். ஆவிக்குரிய யுத்தம் ஆரம்பமாகிவிட்டது என்பது அறியப்படும்.

இந்த இரட்சிப்பின் அடையாளங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் காணப்படுமா? வேதத்தில் உள்ள அநேக இரட்சிப்பின் செயல்களைப் பார்க்கும்போது, இரட்சிப்பு சில சமயங்களில் சடுதியாக ஏற்படலாம்; சில சமயங்களில் தொடர்ந்து சில காலங்களாக நடைபெறுகிறதாகவும் இருக்கலாம். ஒரு பாவி பாவத்தைப் பற்றி உணரும்போது, அவனுக்குள் படிப்படியாக வெளிச்சமும், விளங்குதலும் வரலாம். தன்னுடைய எல்லா இருதயத்தின் கடினத்தன்மையும் நொறுக்கப்பட்டு, தேவனுக்கு முன்பாகச் சரணடைவதில் சில சமயம் காலங்கள் செல்லலாம். ஒரு பாவி இரட்சிப்பின் மாறுதலுக்குள் வருவதற்கு முன் பாவத்தைக் குறித்து உணருவதும், தேவனைத் தேடுவதும் சில காலம் தொடர்ச்சியாக நடைபெறும் காரியமாகவும் கூட இருக்கலாம்.

இரட்சிப்பின் அடையாளங்களில் சில, ஆவியானவர் இருதயத்தில் செய்யும் கிரியையின் மூலமாக ஆரம்பத்தில் வெளிப்பட்டுப் பிறகு தொடர்ச்சியாகக் காணப்படலாம். ஆனால், இருள் முற்றிலும் நீங்கி வெளிச்சம் வரும்போது, குற்றவுணர்வு நீங்கிப் பாவமன்னிப்பைப் பெறும்பொழுது, இரட்சிப்பின் எல்லா அடையாளங்களும் அழகாக, தெளிவாக, பகிரங்கமாக வெளிப்படும்.

இதை வாசிக்கும் அன்பான சகோதரனே! சகோதரியே! நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா?

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.