நினைத்துக் கொள்ள வேண்டிய ஒரு பெண்
ஆசிரியர்: ஜே. சி. ரைல்
வாசிப்பதற்கான நேரம்: 23 நிமிடங்கள்

 லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள் (லூக். 17:32).

தனது வருகையின் நாளிலே அதற்கு ஆயத்தமில்லாமல் இருக்கப்போகிற மக்களைப் பற்றிப் பேசும்போது, இயேசுகிறிஸ்து இந்த வார்த்தைகளைக் குறிப்பிட்டார். தனது வருகைக்கு ஆயத்தமில்லாத, இரட்சிப்படையாத ஆத்துமாக்களைப் பற்றிப் பேசும்போது, இயேசு லோத்தின் மனைவியைக் குறித்துப் பேசுவது கவனிக்கத்தக்கது.

மேலும், இங்கே இயேசு தம்மை வெறுத்த பரிசேயரிடமோ வேதபாரகரிடமோ பேசாமல், தமது சீஷர்களிடம் பேசுகிறார் என்பதைக் கவனிக்கும்போது, இந்த எச்சரிப்பை நாம் இன்னும் கருத்துடன் சிந்திக்க வேண்டும். 'லோத்தின் மனைவியைப் போல இருக்காதீர்கள்' என்று அவர் குறிப்பிடாமல், 'லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்' என்று குறிப்பிடுகிறார். நாம் இந்தப் பாடத்தை மறந்துவிடக் கூடாது என்பதுபோலப் பேசுகிறார். இது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல; நமது சோம்பலான நினைவுகளைத் தட்டி எழுப்பும் வார்த்தைகளாகும்.

இதைக் குறித்து நாம் சில காரியங்களைச் சிந்திக்கலாம்:

  1. லோத்தின் மனைவி அனுபவித்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் ஆபிரகாமின் நாட்களில் மெய்யான, இரட்சிப்பிற்கேதுவான தேவபக்தி அரிதாகவே இருந்தது. அந்நாட்களில் வேதாகமம் இல்லை; ஊழியர்கள் இல்லை; திருச்சபைகளும் இல்லை. தேவனைப் பற்றிய அறிவு சில குடும்பத்தாருக்கு மட்டுமே இருந்தது. உலக மக்களில் பெரும்பாலானவர்கள் ஆவிக்குரிய இருளிலும், அறியாமையிலும், மூடநம்பிக்கையிலும், பாவத்திலுமே வாழ்ந்தார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது லோத்தின் மனைவிக்கு அதிக ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் இருந்தன.

அவளது கணவன் ஒரு நீதிமான்; அவளது மாமனார் (உறவினர்) விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம். லோத்தின் மனைவி விசுவாசத்தைக் குறித்தும், விசுவாசமுள்ள இந்த மனிதர்களின் தேவபயத்தையும் ஜெபங்களையும் குறித்தும் நிச்சயம் அறிந்திருந்தாள். ஆயிக்கும் பெத்தேலுக்கும் இடையே ஆபிரகாம் பலிபீடம் கட்டியபோது அவள் அங்கேதான் இருந்திருப்பாள் (ஆதி. 12:8). தேவதூதர்கள் வந்து அவளது கணவனிடம் சோதோமை விட்டு ஓடச் சொன்னபோது அவள் அங்கிருந்தாள் (ஆதி. 19). அந்தக் குடும்பத்தின் கைகளைப் பிடித்து நகரத்திற்கு வெளியே தேவதூதர்கள் கொண்டுபோய் விட்டபோதும் அவள் அங்கே இருந்தாள் (ஆதி. 19:16).

இந்த நன்மைகளைப் பெற்றிருந்தும் அவளுக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை. அவள் கிருபையைப் பெறாமலும், தேவனற்றவளாகவும், மனந்திரும்பாதவளாகவும், அவிசுவாசியாகவுமே மரித்தாள். ஒருவேளை வெளிப்படையாக அவள் தனது கணவனுடைய தேவபக்திக்கு ஒத்துப் போயிருக்கலாம்; ஆனால், அவளது உள்ளான இருதயமோ பொருளாசை உள்ளதாகவும், தேவனின் பார்வையில் அருவருப்பானதாகவும் காணப்பட்டது. லோத்தின் மனைவியை நினைப்பதன் மூலம் பல காரியங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்:

  • அ) கிறிஸ்தவத்தின் வெளிப்படையான நன்மைகளைப் பெற்றிருப்பதினால் மட்டுமே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படாது. மார்க்கச் சடங்குகள் தங்களைச் சிறந்த கிறிஸ்தவர்களாக்குகிறது என்று நினைப்பவர்களுக்கு இது கடினமான உண்மையாகத் தோன்றலாம். ஆனால், லோத்தின் மனைவியைப் பார்க்கும்போது, வெறும் கிறிஸ்தவ நன்மைகள் நமது ஆத்துமாவை இரட்சிப்பதற்குப் போதுமானவை அல்ல என்பதை அறிந்துகொள்கிறோம். யோவாப் தாவீதின் தளபதி; கேயாசி எலிசாவின் வேலைக்காரன்; தேமா பவுலின் கூட்டாளி; யூதாஸ் காரியோத்து இயேசுவின் சீஷன். ஆனால், இவர்கள் தேவபக்தியுள்ளவர்களோடு இருந்ததினால் இரட்சிக்கப்படவில்லை; தங்கள் பாவங்களிலேயே மரித்தார்கள். நமக்கு வெளிப்படையான நன்மைகளை விட மேலான, பரிசுத்த ஆவியானவரின் கிருபை தேவை.
  • மார்க்க நன்மைகளை மதிப்பது நல்லதுதான்; ஆனால், அவற்றையே நாம் சார்ந்திருக்கக் கூடாது. அவை நமக்குக் கிடைத்தால் அவற்றை நாம் நன்றியுடன் பயன்படுத்த வேண்டும். அவை நமக்கு நன்மை செய்யாவிட்டால், பெரிய தீமையைச் செய்துவிடக்கூடும். மெழுகை உருக்கும் அதே நெருப்புதான் களிமண்ணைக் கடினப்படுத்துகிறது; ஒரு செடியைச் செழித்து வளரச் செய்யும் அதே சூரியன்தான் வேரற்ற மரத்தைக் காயச் செய்கிறது. பரிசுத்தமான காரியங்களைப் பயனற்ற முறையில் நாம் கையாளுவது போல, நமது இருதயத்தைக் கடினப்படுத்துவது வேறேதுமில்லை. நன்மைகளை விட உயர்ந்த கிருபை நமக்கு வேண்டும்.
  • மார்க்க நன்மைகளைப் பெற்றனுபவிக்கும் மீட்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகளுக்கு நான் ஒரு எச்சரிப்பைக் கொடுக்க விரும்புகிறேன். உங்கள் பெற்றோரின் தேவபக்தியினாலே நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தில் நுழைந்துவிட முடியாது. உங்கள் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரின் சாட்சி வேண்டும். உங்களது சொந்த மனந்திரும்புதல், விசுவாசம், பரிசுத்தம் ஆகியவை மிகவும் அவசியம்.
  1. லோத்தின் மனைவி செய்த பாவம் என்ன? லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள் (ஆதி. 19:26) என்று வாசிக்கிறோம். அது ஒரு சிறிய பாவமாகத் தோன்றுகிறதா? சிலர் அப்படி நினைக்கலாம். ஆனால், மேலோட்டமாகத் தெரிவதைவிடப் பல காரியங்கள் அதிலுண்டு.
  • அ) அது அவளது மெய்யான குணத்தை வெளிப்படுத்தியது: பெரிய காரியங்களைக் காட்டிலும் சிறிய காரியங்கள் நமது மனநிலையை நன்கு வெளிப்படுத்திவிடும். சிறிய அறிகுறிகள் பெரிய நோயின் அடையாளமாக இருக்கலாம். ஒரு பார்வை, ஒரு மனிதனின் இருதய நிலையைக் காட்டிவிடலாம் (மத். 5:28).
  • ஆ) அது அவளுடைய கீழ்ப்படியாமையைக் காட்டியது: தேவதூதனுடைய கட்டளை மிகவும் தெளிவாக இருந்தது: 'திரும்பிப் பார்க்காதே'. லோத்தின் மனைவி அதற்குக் கீழ்ப்படியவில்லை. தேவன் தமது வார்த்தையில் தெளிவாகப் பேசும்போது, அதற்குக் கீழ்ப்படிதலே நமது கடமை என்பது தெளிவானது.
  • இ) அது பெருமையுள்ள அவிசுவாசத்தைக் காட்டியது: தேவன் சொன்னபடி சோதோமை அழிப்பாரா என்று லோத்தின் மனைவி சந்தேகப்பட்டாள். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் (எபி. 11:6). எவராவது தேவனை விடத் தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைத்தால், அவர்களது ஆத்துமா பெரிய ஆபத்திலிருக்கிறது. தேவன் நம்மோடு செயல்படும் விதங்களுக்கான காரணத்தை நம்மால் அறிய முடியவில்லையெனில், அமைதியாக இருப்பதும் அவரை நம்புவதுமே நமது கடமையாகும்.
  • ஈ) இவ்வுலக வாழ்வின் மீது அவள் கொண்டிருந்த இரகசிய அன்பை அது காட்டியது: தனது வீட்டைத் திரும்பிப் பார்க்காமல் விட்டுவர அவளால் முடியவில்லை. அவளது உடல் நகரத்தை விட்டு வெளியே வந்திருந்தாலும், அவளது மனம் இன்னும் சோதோமில்தான் இருந்தது. திசைகாட்டியின் முள் வடக்கை நோக்கித் திரும்புவதைப் போல, தனது பொக்கிஷம் இருக்கும் இடத்தை நோக்கி அவள் திரும்பினாள். உலகத்திற்குச் சிநேகிதனாக இருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாக இருக்கிறான் (யாக். 4:4). ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை (1 யோவான் 2:15).

தற்காலத்தைப் போல (ஆசிரியர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்) எந்தக் காலத்திலும் பரிசுத்தமற்ற உலகச் சிந்தையைக் குறித்த எச்சரிக்கை கிறிஸ்தவர்களுக்கு அதிகம் தேவைப்பட்டதில்லை என்று நான் கருதுகிறேன். லோத்தின் மனைவி ஒரு கொலைகாரியாகவோ, விபசாரியாகவோ, திருடியாகவோ இருக்கவில்லை; ஆனாலும், உலகத்தைத் திரும்பிப் பார்த்தாள். இன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டாலும், உலகத்தின் பொருளாசைக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஆகவே, லோத்தின் மனைவி செய்த பாவத்தை நினைவுகூரத்தக்க நேரம் இதுதான் என்பது உறுதி.

  • அ) எத்தனையோ கிறிஸ்தவக் குடும்பத்தின் பிள்ளைகள் நன்றாக ஆரம்பித்து, இறுதியில் தேவபக்தியற்றவர்களாகிப் போகிறார்கள். சிறுவயதிலே அவர்கள் முழுவதும் தேவபக்தியுள்ளவர்கள் போலக் காணப்படுகிறார்கள். ஆனால், சிறுவன் வளர்ந்து வாலிபனாகும்போது, பொழுதுபோக்கையும் விளையாட்டையும் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. சிறுமிகள் வளர்ந்து கன்னிகளாகும்போது, தங்கள் ஆடைகளையும் உலகப் பிரகாரமான நட்பையும் தவிர வேறு எதைக் குறித்தும் சிந்திப்பதில்லை. அவர்கள் லோத்தின் மனைவியைப் போல இருக்கிறார்கள்.
  • ஆ) எத்தனையோ வாலிப ஆண்களும் பெண்களும் ஆரம்பத்தில் தேவபக்தியை நேசித்தாலும், காலம் செல்லச் செல்ல, இவ்வாழ்வின் காரியங்கள் இனிவரும் வாழ்வைக் குறித்த சிந்தனையை அவர்கள் மனதிலிருந்து அகற்றிவிடுகின்றன. அவர்கள் விரைவிலேயே லோத்தின் மனைவியைப் போலச் செயல்படுகிறார்கள்.
  • இ) எத்தனையோ மணமான தம்பதிகள், தங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும்வரை தேவபக்தியுள்ளவர்களாக இருந்துவிட்டு, பிறகு விசுவாசத்தை விட்டு விலகிவிடுகிறார்கள்.

ஆனால், நமது ஆரம்ப வருடங்களில் காணப்பட்ட அதே ஆழமான இரக்கமும், மகா பெரிய வல்லமையும் கர்த்தராகிய இயேசுவில் இன்றும் மாறாமல் காணப்படுகின்றன! ஒவ்வொரு விசுவாசியும் நிச்சயமாக அவரை நம்பலாம்.

  • அ) நீங்கள் ஏழ்மையும் தேவையுமுள்ளவராக இருக்கிறீர்களா? இயேசுவும் அப்படித்தான் இருந்தார். அவர் இரவல் படகிலிருந்து பிரசங்கித்தார்; இரவல் கழுதையிலே எருசலேமுக்குச் சவாரி செய்தார்; அவரை இரவல் கல்லறையில்தான் அடக்கம் செய்தார்கள். நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் இருந்தன; அவருக்கோ தலைசாய்க்க இடமிருக்கவில்லை.
  • ஆ) நீங்கள் இவ்வுலகில் தனிமையாக இருக்கிறீர்களா? இயேசுவும் அப்படித்தான் இருந்தார். அவரைப் பின்பற்றிய சிலர் மீன் பிடிக்கிறவர்களாகவும், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆயக்காரர்களாகவும், பாவிகளாகவுமே இருந்தார்கள்.
  • இ) நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, உபத்திரவப்படுகிறீர்களா? இயேசுவும் அவ்வாறுதான் நடத்தப்பட்டார். சமுதாயத்தால் தூக்கி எறியப்பட்டவர்கள் மற்றும் தீயவர்களின் நண்பன் என்று அவர் அழைக்கப்பட்டார். அவர் போஜனப்பிரியர் என்றும், மதுபானம் அருந்துகிறவர் என்றும் அவரது எதிரிகள் பழித்தார்கள். அவர் பிசாசு பிடித்தவர் என்றும், பைத்தியக்காரன் என்றும் இகழப்பட்டார். அவர் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு, அநியாயமாக மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
  • ஈ) நீங்கள் சோதிக்கப்படுகிறீர்களா? இயேசுவும் சோதிக்கப்பட்டார். அவரது சோதனையைக் குறித்து மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்திகளில் நீங்கள் வாசிக்கலாம். பிசாசு தீய ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குவதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா? இயேசுவும் அவ்வாறே சோதிக்கப்பட்டார்.
  • உ) மிகப்பெரிய மனப்போராட்டத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்ததுண்டா? தேவன் உங்களைக் கைவிட்டார் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? இயேசுவும் அவ்வாறு உணர்ந்திருக்கிறார். அவர் கெத்செமனே தோட்டத்திலும் சிலுவையிலும் அனுபவித்த பாடுகளின் அளவை யாரால் சொல்லிமுடியும்?

நமது இருதயத்தின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தவிர, மிகப் பொருத்தமான இரட்சகரைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். இயேசுவை விட அவரின் தாயாகிய மரியாளும் மற்ற பரிசுத்தவான்களும் நம்மைப் பற்றி அதிகம் அறிந்தவர்கள் என்ற கருத்துக்குச் செவிகொடுக்க வேண்டாம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தன்மையைக் குறித்து வேதாகமம் என்ன போதிக்கிறது என்ற அறியாமையினாலேயே அவ்வாறு கூறப்படுகிறது. தேவமனிதனாகிய கர்த்தராகிய இயேசுவில் ஆறுதலைப் பெற்றுக்கொண்ட மனிதனுக்கு, வேறு பரிசுத்தவான்களிடத்திலிருந்தோ, தேவதூதர்களிடத்திலிருந்தோ, கன்னி மரியாளிடத்திலிருந்தோ எந்த ஆறுதலும் தேவையில்லை.

  1. மெய்யான கிறிஸ்தவர்களது வாழ்விலும் பெரிய பலவீனம் அவர்களது விசுவாசத்தில் காணப்படலாம். கடலில் புயல் வீசியபோது சீஷர்கள் நடந்துகொண்டதைவிட இதற்கு வேறு என்ன ஆதாரம் தேவை? 'நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?' என்று கூறி, பயத்தினால் இயேசுவை எழுப்பினார்கள். அவர்கள் பொறுமையற்றவர்களாக இருந்தார்கள்; இயேசு எழும்பும்வரை அவர்களால் பொறுத்திருக்க முடியவில்லை. அவர்கள் அவிசுவாசம் உள்ளவர்களாக இருந்தார்கள்; இயேசு தங்களோடு இருக்கும்போது தாங்கள் எப்படி மடிய முடியும் என அவர்கள் சிந்திக்கவில்லை. அவர்கள் நம்பிக்கையிழந்தார்கள்; 'உமக்குக் கவலையில்லையா?' என்று கதறினார்கள்.

அவர்கள் பயப்பட்டிருக்க வேண்டியதில்லை. அவரது அன்பும் இரக்கமும் அவர்களுக்கு இதுவரை கிடைத்ததே இல்லையா? நாம் பயப்படும்போது ஞாபக சக்தியை இழந்துவிடுவோம்! பல கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்திருப்பார்கள் என்று நான் அறிவேன். அவர்கள் கிறிஸ்துவை முழுவதுமாக நம்புவதாக நினைக்கிறார்கள். ஆனால் எதிர்பாராத சோதனை, பயம், சந்தேகம் வரும்போது, அவநம்பிக்கை வெள்ளம் போல அவர்களைச் சூழ்ந்துகொள்கிறது.

இவ்வுலக வாழ்வில் யாருமே பரிபூரண கிறிஸ்தவர்களாக வாழ முடியாது என்பதுதான் உண்மை. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமே எகிப்தியருக்குப் பயந்ததினால், தனது மனைவியைச் சகோதரி என்று சொல்லச் சொன்னான். கோலியாத் என்னும் இராட்சதனை எதிர்கொள்ளத்தக்க விசுவாசமுள்ள தாவீது, சவுல் தன்னைக் கொலை செய்யத் தேடினாலும், ஒருநாளில் இஸ்ரவேலுக்குத் தான் தேவனாலேயே அரசனாக ஏற்படுத்தப்படுவான் என்பதை விசுவாசித்தான். ஆனாலும் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் பயத்தினால் மேற்கொள்ளப்பட்டு, 'நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினாலே மடிந்துபோவேன்' (1 சாமு. 27:1) என்று அஞ்சினான்.

எந்த விசுவாசியாவது எல்லாப் பிரச்சினைகளிலும் கிறிஸ்துவில் அசையாத அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்க முடியுமா? அப்படியானால் அது நல்லது! ஆனால், உங்கள் விசுவாசம் எப்போதாவது மெய்யான சோதனையைச் சந்தித்திருக்கிறதா என்று நான் கேட்க விரும்புகிறேன். சோதனையில்லாமல் உங்கள் பலவீனத்தை அறிந்துகொள்வது எளிதான காரியமல்ல. எசேக்கியாவின் பலவீனங்கள் என்ன என்பதைக் காட்டவே, கர்த்தர் அவனைச் சோதித்தார் (2 நாளா. 32:31).

இளம் கிறிஸ்தவர்கள் தங்களில் இவ்விதமான காரியங்களைக் காணமுடியும் என்பதால், இந்த எச்சரிப்பை நான் கொடுக்க விரும்புகிறேன். தங்கள் பலவீனத்தைக் கண்டு அவர்கள் சோர்ந்துபோவதை நான் தடுக்க விரும்புகிறேன். இளம் விசுவாசிகள் மெய்யான விசுவாசத்தையும் கிருபையையும் பெற்றிருந்தாலும், சிலவேளைகளில் பயத்தையும் சந்தேகத்தையும் அடைவார்கள் என்பதை உணர வேண்டும். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் மெய்யான சீஷர்களாக இருந்தாலும், பயமே இல்லாத அளவிற்கு அவர்கள் பூரண ஆவிக்குரியவர்களாகக் காணப்படவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, மற்ற விசுவாசிகளிடத்தில் சிலவேளைகளில் காணப்படக்கூடிய பலவீனங்களுக்காக, அவர்களை மிகத் தீவிரமாக நியாயந்தீர்த்துவிடக் கூடாது என்பதைக் கிறிஸ்தவர்கள் உணர வேண்டும். தங்கத்திலே மாசுகள் கலந்திருப்பதால் அது மதிப்பற்றதாகிவிடுமா? இந்தப் படகிலே இருந்த சீடர்கள், எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள்; அவரை விசுவாசித்தவர்கள்; அவரை நேசித்தவர்கள். ஒருவன் எல்லாவற்றையும் விட்டுக் கிறிஸ்துவைப் பின்பற்றினாலும், சிலவேளைகளில் பயத்தினாலும் சந்தேகத்தினாலும் மேற்கொள்ளப்படுவது சாத்தியமே.

  1. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இயேசு இருந்த படகின் மீது அலைகள் வந்து மோதின. சீஷர்கள் பயந்தார்கள். சிருஷ்டிகர் மட்டுமே செய்யக்கூடிய வல்லமையான அற்புதத்தை இயேசு செய்தார். உங்கள் வாழ்விலும் சிலவேளைகளில் நீங்கள் புயலைச் சந்திக்கலாம். அந்த நேரத்தில் இயேசுவின் வல்லமையைத் தெளிவாக அறிந்திருப்பது நல்லது. இரட்சகர் வல்லமையுள்ளவர் என்பதை ஒவ்வொரு விசுவாசியும் அறிந்திருக்க வேண்டும். நமது மீட்பர் இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாக இருக்கிறார். இயேசுவின் வல்லமையைப் பற்றி இன்னும் அறிந்துகொள்ளுங்கள்:
  • அ) அவரது படைப்புகளில் அவரது வல்லமையைக் கற்றுக்கொள்ளுங்கள்: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை (யோவான் 1:3). சூரியன் முதல் பூமியிலுள்ள சிறிய புழு வரை அனைத்துமே அவரால் படைக்கப்பட்டவை. அவர் கட்டளையிட அவை உருவாகின. இது மாபெரும் வல்லமை இல்லையா?
  • ஆ) அவரது பராமரிப்பின் செயல்களில் வல்லமையைப் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் ஒரு பிழையற்ற ஒழுங்கில் இயங்குகின்றன. பருவ காலங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகக் கிரமத்துடன் வருகின்றன. எல்லாவற்றையும் தாங்குகிற அவராலேயே இராஜ்யங்கள் எழுகின்றன, வளருகின்றன, தேய்கின்றன, மறைகின்றன.
  • இ) இயேசுகிறிஸ்துவினால் செய்யப்பட்ட அற்புதங்களில் அவரது வல்லமையைப் பாருங்கள்: ஒரு வார்த்தையினாலே இறந்தவர்களை எழுப்பினார்; குருடருக்குப் பார்வை தந்தார்; செவிடரைக் கேட்கச் செய்தார்; ஊமையரைப் பேசச் செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாவிகள் தேவனுடைய இராஜ்யத்தைக் காணவும் அதில் நுழையவும் செய்தார்!

மறுபடியும் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலுள்ள வேதப்பகுதியைப் பாருங்கள். உங்கள் இருதயம் எந்த வகையான பயத்தினாலும் கவலையினாலும் நிறைந்திருந்தாலும், உங்கள் இருதயத்தைப் பார்த்து 'இரையாதே, அமைதலாயிரு' என்று சொல்லக்கூடியவராக இயேசு இருக்கிறார். நீங்களும் சீஷர்களைப் போல இயேசுவிடம் அமைதிக்காகக் கதறுகிறீர்களா? நீங்கள் தேவனோடு சமாதானமாக இருந்தும் ஏழ்மை, வலி, முதுமை, அன்பானவரின் மரணம் ஆகியவற்றினால் உங்கள் இதயம் பாரமடைந்திருக்கிறதா? 'இரையாதே, அமைதலாயிரு' என்று இயேசு உங்கள் இருதயத்திடம் சொல்லமுடியும்.

நீங்கள் கிறிஸ்துவின் வல்லமையைப் பற்றிய சரியான அறிவுடையவராக இருக்க வேண்டும். நீங்கள் எதைப்பற்றிச் சந்தேகப்பட்டாலும், கிறிஸ்துவின் வல்லமையைப் பற்றி மட்டும் சந்தேகிக்கக் கூடாது. "தம்மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்" (எபி. 7:25).

  1. விசுவாசிகளின் பலவீனங்களில் இயேசு அவர்களை எவ்வளவு பொறுமையாகக் கையாளுகிறார். பயந்த சீஷர்களிடம் நமது கர்த்தர் கோபத்துடன் பதிலளிக்கவில்லை. 'ஏன் பயப்பட்டீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசமில்லையா?' என்று கேட்டார். அவர்களைக் கடுமையாகக் கடிந்துகொள்ளாமல், இரண்டு சாதாரண கேள்விகளைக் கேட்டார். அவற்றிலிருந்து நமது கர்த்தரின் கருணையைக் கண்ணாரக் காண்கிறோம். சீஷர்களோடு நமது இரட்சகர் நடந்துகொண்ட விதம் முழுவதையும் நாம் கருத்துடன் கவனிக்க வேண்டும்.

எப்பொழுதுமே கர்த்தருடைய போதனைகளைச் சீஷர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. தங்களது எஜமானாகிய கிறிஸ்துவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை எளிமையான வார்த்தைகளினாலும் தெளிவான கூற்றுகளினாலும் அவர் எடுத்துக்கூறியும், அது அவர்கள் மனதில் பெரிய பாதிப்பை உண்டுபண்ணவில்லை. சிலவேளைகளில் தங்களில் யார் பெரியவன் என்பதற்காகத் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில், இரண்டு சீடர்கள் இயேசுவைப் புறக்கணித்த ஒரு கிராமத்தின் மீது வானத்திலிருந்து நெருப்பு வந்து அழிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இயேசு கைது செய்யப்பட்டபோது, அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓடிவிட்டார்கள். பேதுரு மூன்று முறை அவரை மறுதலித்தான்.

இவ்விதமான சீடர்களின் நடக்கைகளை இயேசு எவ்வாறு எதிர்கொண்டார்? அவர்களை அவர் முட்டாள்கள் என்று கடிந்துகொள்ளவோ, கோழைகள் என்று புறக்கணிக்கவோ இல்லை. எப்போதுமே அவர்களை மென்மையாக நடத்தினார். அவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய காரியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குப் போதித்தார். அவரது போதனைகள் எப்போதும் இரக்கமும், ஆறுதலும், உணர்வுபூர்வமானவையுமாக இருந்தன.

கர்த்தராகிய இயேசு இரக்கமே உருவானவர் என்பதை முழு உலகமும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். தமது சீஷர்களில் பலமுள்ளவர்களைப் பராமரிப்பதைப் போலவே, சிறியவர்களையும் பராமரிக்கிறார். எல்லா விசுவாசிகளையும் பிதா அவரிடம் கொடுத்திருக்கிறார். அவர்களது பலவீனங்கள் மத்தியிலும் அவர்களை அவர் பரலோகத்தில் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்.

இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொன்னதையே திரும்பச் சொல்லி முடிக்கிறேன். எனது வாசகர்கள் சுவிசேஷங்களுக்கும், இந்த அத்தியாயத்தின் ஐந்து பிரிவுகளுக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் கிறிஸ்துவை அறியவேண்டும், நன்றாக அறிய வேண்டும். அவரால் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை அதிகமதிகமாக அறிந்துகொள்வதே பரிசுத்தம் ஆகும்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.