ஆசிரியர்: A.W. பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 5 நிமிடங்கள்

 

Family Prayer

     தேவனுடைய வசனத்தில், வெளிப்படையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில முக்கியமான வெளிப்புற ஒழுங்குகளும், கிருபையைக் குறித்த காரியங்களும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றைப் பற்றிய நேரடியான கட்டளைகள் வேத வசனங்களில் தெளிவாக கூறப்படவில்லை; மாறாக, பரிசுத்தவான்களை உதாரணமாய் கொண்டும், சில சம்பவங்களின் மூலமாகவும் அவற்றை நாம் அறிந்துக்கொள்ள முடிகிறது.  இத்தகைய ஒழுங்குகள் ஏற்படுத்தியதற்கு முக்கியமான நோக்கம் ஒன்று உண்டு: அதென்னவெனில், நம் இருதய நிலையை சோதிப்பதாகும். ஏனெனில், அது ஒரு கட்டளையாக கொடுக்கப்படவில்லை என்பதற்காக ஒரு கடமையை ஒதுக்கிவிடுகிறோமா என்பதை அறிவதற்காகும். இதனால் நம் உள்ளத்தின் உண்மையான நிலை வெளிச்சத்திற்கு வரும்; தேவன்மேல் நமக்கு உண்மையான அன்பு உண்டா? இல்லையா என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இது பொது ஆராதனைக்கும், குடும்ப ஆராதனைக்கும் பொருந்தும். குடும்பத்தில் தேவபக்தியை கடைப்பிடிக்க வேண்டிய கடமை உள்ளதென்று நிரூபிப்பது கடினமல்ல. 

முதலாவது உதாரணமாக, விசுவாசத்தின் தகப்பனும், தேவனின் சிநேகிதனுமாகிய ஆபிரகாமைக் குறித்து பார்ப்போம்.  ஆபிரகாம் தன் குடும்பத்தில் தேவபக்தியை கடைபிடித்ததற்காகவே தேவனாகிய யேகோவா தாமாகவே அவரை ஆசீர்வாதித்தார்: “நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றான்.” (ஆதியாகமம் 18:19). இந்த வசனத்தில், ஆபிரகாம் தன் பிள்ளைகளுக்கும் வீட்டாருக்கும் “கர்த்தருடைய வழி” என்ற மிக முக்கியமான கடமையை அதாவது தேவனுடைய மகிமைமிக்க தன்மை, நம்மிடம் எதிர்பார்ப்பவை ஆகியவற்றை போதித்ததற்காக புகழப்படுகிறார். “அவன் கட்டளையிடுவான்” என்பது தகப்பனாகவும், குடும்பத் தலைவராகவும் தேவன் அவனுக்கு அளித்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடும்பத்தில் தேவபக்தியை நிலைநாட்டும் பொறுப்பை அவர் செயல்படுத்தியதை அறிய முடிகிறது. ஆபிரகாம் தனது குடும்பத்தினருடன் ஜெபித்தும், அவர்களுக்கு போதித்தும் இருந்தார்; அவர் எங்கெல்லாம் கூடாரம் போட்டாரோ, அங்கெல்லாம் கர்த்தருக்காக ஒரு பலிபீடம் கட்டினார். (ஆதியாகமம் 12:7; 13:4). இப்போதும் என் அன்பான வாசகர்களே, “ஆபிரகாமின் கிரியைகளை செய்யாத” (யோவான் 8:39) நாம், குடும்ப ஆராதனை என்னும் முக்கியமான கடமையைப் புறக்கணித்தால், நாம் “ஆபிரகாமின் சந்ததியார்” (கலாத்தியர் 3:29) என்று சொல்லக்கூடுமா? உதாரணமாக சுட்டிக்காட்டப்படுகிற மற்ற பரிசுத்தவான்களும் ஆபிரகாமைப் போல ஜீவித்தவர்கள் ஆவர். யோசுவா இவ்விதமாக சொல்லுகிறார். “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” (யோசுவா 24:15) என்று இஸ்ரவேலரிடம் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். அவர் பெற்றிருந்த உயர்ந்த பதவியும், அவரது பொது பொறுப்புகளின் அழுத்தமும் மிக முக்கியமானவையாக இருந்தாலும் அவை, அவரது குடும்பத்தின் ஆவிக்குரிய நிலையை அவர் கவனிப்பதிலிருந்து தடுக்க அவர் இடங்கொடுக்கவில்லை. அதேபோல், தாவீது தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்து மகிழ்ச்சியுடன் துதித்த பிறகு, தனது பொது கடமைகளை முடித்தவுடன் “தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்கு திரும்பினார்” (2 சாமுவேல் 6:20). இவர்களோடு, யோபு (யோபு 1:5) மற்றும் தானியேல் (தானியேல் 6:10) ஆகியோரையும் குறிப்பிடலாம். புதிய ஏற்பாட்டில் தீமோத்தேயுவின் வாழ்க்கையை மட்டும் பார்க்கலாம். அவர் ஒரு தேவபக்தியான வீட்டில் வளர்க்கப்பட்டவர். அப். பவுல், தீமோத்தேயுவில் காணப்பட்ட “மாயமற்ற விசுவாசத்தை” நினைத்து, அது முதலில் அவரது பாட்டியான லோவிசாளுக்குள்ளும், அவரது தாயான ஐனிக்கேயாளுக்குள்ளும் இருந்ததாகச் சொல்கிறார். அதனால் தான் அப். பவுல், “பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்” (2 தீமோத்தேயு 3:15) என்று கூற முடிந்தது.

மற்றொரு புறம், இந்த கடமையை புறக்கணிக்கிறவர்களுக்கெதிராக தேவன் கூறியுள்ள பயங்கரமான வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். “உம்மை அறியாத ஜாதிகளின் மேலும், உம்முடைய நாமத்தை தொழுதுகொள்ளாத வம்சங்களின் மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்” (எரேமியா 10:25) என்ற வசனத்தை எத்தனை பேர் ஆழமாக சிந்தித்துப் பார்த்திருப்பீர்கள் என எண்ணி ஆச்சரியப்படுகிறேன்! ஜெபமில்லாத குடும்பங்கள், கர்த்தரை அறியாத மக்களுடன் ஒப்பிட்டுக் கூறப்படுவதைக் காண்பது எவ்வளவு அதிர்ச்சிகரமானது! இது நம்மை ஆச்சரியப்படுத்த வேண்டுமா? ஏனெனில், பொய்யான தேவர்களை குடும்பமாக சேவிக்கிற புறஜாதியார் இருக்கிறார்கள். அவர்கள், தங்களை கிறிஸ்தவர்களென்று கூறும் ஆயிரக்கணக்கான மக்களை நாணமடையச் செய்கிறார்கள் அல்லவா? (எரேமியா 10:25ல்), இருக்கூட்டத்தாரும் ஒரே தீர்ப்புக்குரியவர்களாக காணப்படுகிறார்கள். “உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்”. இந்த வார்த்தைகள் நம்மிடம் எவ்வளவு கடுமையாக உரைக்கப்பட்டுள்ளது!

நாம் தனிப்பட்ட முறையில் நம்முடைய தனி அறைகளில் ஜெபிப்பது மட்டும் போதாது; நம்முடைய குடும்பங்களிலும் தேவனை மகிமைப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் காலை, மாலை என இரண்டு வேளையில் முழு குடும்பமும் ஒன்று கூடி, பெற்றோர், பிள்ளைகள், எஜமான்கள், ஊழியர்கள் என அனைவரும் கர்த்தருக்கு முன்பாக பணிந்து, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய இரக்கங்களுக்கு நன்றி சொல்லி, அவருடைய உதவியையும் ஆசீர்வாதத்தையும் நாட வேண்டும். இந்த கடமையைத் தவிர்க்க எதுவும் இடையூறாக இருக்கக்கூடாது; மற்ற குடும்ப வேலைகள் அனைத்தும் இதற்கு ஒதுக்கி வைக்க வேண்டும். குடும்பத் தலைவரே இந்த ஆராதனையை நடத்த வேண்டும். அவர் இல்லாவிட்டால், அல்லது மிகவும் பெலவீனத்தோடு இருந்தால், அல்லது அவிசுவாசியாக இருந்தால், மனைவியே கணவருடைய இடத்திலிருந்து நடத்த வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் குடும்ப ஆராதனை தவிர்க்கப்படக்கூடாது. நம் குடும்பத்தின்மேல் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறோம் என்றால், தினமும் குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒன்று கூடி ஸ்தோத்திரம் செலுத்தி, ஜெபிக்க வேண்டும். “என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்” என்பதே தேவனுடைய வாக்குத்தத்தமாகும்.

ஒரு பழைய எழுத்தாளர் சிறப்பாக கூறியுள்ளார்: “ஜெபமில்லாத குடும்பம் என்பது கூரை இல்லாத வீட்டைப் போல, வானத்திலிருந்து உண்டான அனைத்து புயல்களுக்கும் திறந்து கிடப்பதுபோல் உள்ளது”. நமது வீட்டில் காணப்படும் எல்லா நன்மைகளும், உலகப்பிரகாரமான ஈவுகளும் கர்த்தரின் அன்பினாலும் இரக்கத்தாலும் வருகிறது என்பதை நாம் உணர வேண்டும். அதற்குப் பதிலாக நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம், தேவனுடைய நன்மைகளை எண்ணி குடும்பமாக ஒன்றாய் சேர்ந்து நன்றியறிதலோடு இருப்பதாகும். இந்த பரிசுத்த கடமையை நிறைவேற்றாமல் சொல்லுகிற எல்லாக் காரணங்களும் பயனற்றவை ஆகும். நாம் தேவனுக்குமுன் நம்முடைய குடும்பத்தை நிர்வகித்த முறையைப் பற்றி கணக்குக் கொடுக்கும் நாளில், ‘எங்களுக்கு அதிக வேலைச்சுமை இருந்ததால் நேரம் கிடைக்கவில்லை; காலை முதல் மாலை வரை கடுமையாக வேலை செய்தோம்’ என்று சொல்லுவதில் என்ன பயன்? உண்மையாகவே நமக்கு உலகப்பிரகாரமான பணிகள் அதிகம் இருந்தால், அதற்கேற்ப நமக்கு ஆவிக்குரிய உதவியும் அதிகமாக தேவைப்படும். அதேபோல், இந்தச் செயலை செய்யத் தக்க தகுதி இல்லையென்று எந்த கிறிஸ்தவரும் கூற முடியாது; திறமைகளும் தாலந்துளும் பயன்படுத்துவதின் மூலமே பெருகுமேயன்றி, புறக்கணிப்பதால் அல்ல.

குடும்ப ஆராதனை பயபக்தியோடும், ஊக்கத்தோடும், எளிமையாகவும் நடத்தப்பட வேண்டும். அந்த நேரங்களில்தான் சிறியவர்கள் தேவனைப் பற்றிய தங்கள் முதல் எண்ணங்களையும், அவரைப் பற்றிய அடிப்படை புரிதல்களையும் பெறுகின்றனர். தேவன் அதரிசனமானவர் என்பதையும் சமீபத்திலிருப்பதையும், அவருடைய பரிசுத்தமும் இரக்கமும், வல்லமையும் தயையும், நீதியும் கிருபையும் ஆகிய தேவனுடைய தன்மைகளைக் குறித்து அவர்களுக்கு தவறான எண்ணங்களை உருவாக்கி விடாதபடி எல்லாவற்றையும் சீரான முறையில் அறிய செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  ஆராதனை ஒரு சுருக்கமான ஜெபத்துடன், தேவனுடைய பிரசன்னத்தையும் ஆசீர்வாதத்தையும் வாஞ்சித்து தொடங்க வேண்டும். பின்னர் தேவனுடைய வசனத்திலிருந்து ஒரு சிறிய பகுதியைப் படித்து, சுருக்கமாக விளக்கலாம். பின்பு ஒரு சங்கீதத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று வசனங்களை வாசிக்கலாம். இறுதியில், தேவனுடைய கைகளில் ஒப்புவிக்கும் ஜெபத்துடன் ஆராதனையை முடிக்கலாம். நாம் அற்புதமாந வார்த்தைகளை சொல்லி ஜெபிக்க இயலாவிட்டாலும், நம்முடைய ஜெபம் ஊக்கமானதாக இருக்க வேண்டும். ஜெயமுள்ள ஜெபங்கள் பெரும்பாலும் சுருக்கமானவையாகவே இருக்கும். சிறுபிள்ளைகள் சோர்ந்துபோவதற்கேதுவாக ஆராதனை நீளமாகாமல் கவனிக்க வேண்டும்.

குடும்ப ஆராதனையினால் உண்டாகிற நன்மைகளும் ஆசீர்வாதங்களும் அளவிட முடியாதவையாகும்.  முதலில், குடும்ப ஆராதனை பல பாவங்களிலிருந்து காக்கும். அது ஆத்துமாவிலே பயத்தை உண்டாக்கும், தேவனுடைய மகிமையையும் அதிகாரத்தையும் உணரச்செய்யும், சத்தியங்களை சிந்தையின் முன்நிறுத்தும், வீட்டில் தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். தேவனுக்கு முன்பாக வீட்டிலுள்ள தனிப்பட்ட பக்தியுள்ள ஜீவியம், சிறுபிள்ளைகளுக்கு தேவவழியை போதிக்கும் மிக வல்லமையுள்ள வழியாகும். பிள்ளைகள் பெரும்பாலும் காண்கிறதை பின்பற்றும் தன்மையுடையவர்கள் ஆவர். அவர்கள் பிறரிடம் காணும் செயல்களைப் பின்பற்ற விரும்புவர். "அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும், தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்” (சங்கீதம் 78:5-7).  பெரும்பாலான இடங்களில் தங்களின் குடும்பக் கடமையைத் தவறவிட்ட தகப்பனிடமிருந்தே துவங்கியுள்ள இன்றைய பரிதாபகரமான ஒழுக்கக்கேடுகளும், ஆவிக்குரிய ஜீவியத்தின் வீழ்ச்சியும் எத்தனை? தேவனைத் தங்கள் குடும்பங்களில் ஆராதிக்கத் தவறுகிறவர்கள், எப்படி சமாதானத்தையும் ஆறுதலையும் எதிர்பார்க்க முடியும்? வீட்டின் அனுதின ஜெபம், நாம் அனைவருக்கும் பொதுவாக உள்ள மகிழ்ச்சியற்ற உணர்வுகளை மாற்றும் கிருபையின் வழியாகும். இறுதியாக, குடும்ப ஜெபம் தேவனுடைய பிரசன்னத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுத் தருகிறது. தேவன் நம் நடுவில் இருப்பதை உணர்த்தக்கூடிய பொருத்தமான ஒரு வாக்குத்தத்தம் உள்ளது: மத்தேயு 18:19,20 -யை பார்க்கவும். அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.” அதிக பலன்கள் இல்லாமல் தனி ஜெபங்களில் தேடியிருந்த தேவ ஒத்தாசையையும் ஐக்கியத்தையும், பலர் குடும்ப ஆராதனையின் மூலமாக பெற்றுள்ளனர்.

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.