பரிசுத்த ஆவியை எப்படி பெறுவது?
ஆசிரியர்: கே. நரசிமுடு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 17 நிமிடங்கள்

 

இக்காலத்தில் பரிசுத்த ஆவியானவரைக் குறித்துப் பரவலாகப் பல தவறான போதனைகளை நாம் காண்கிறோம். அவற்றில் மிக முக்கியமானவை எவையெனில்:

  1. இரட்சிப்பைப் பெற்றால் மட்டும் போதாது; பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்காகச் சில காலம் காத்திருக்க வேண்டும். அதற்காக ஜெபிக்க வேண்டும். அல்லது தேவமனிதர் ஒருவர் நம் மீது கைகளை வைத்து ஜெபிக்க வேண்டும். அப்படிச் செய்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டால் ஒழிய, ஒருவன் முழுமையான சுவிசேஷத்தை நம்பியதாக அர்த்தமாகாது.
  2. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருந்தால் கண்டிப்பாக அந்நிய பாஷைகளில் பேச வேண்டும். மேலும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட பல அற்புத வரங்களையும் பெற்றிருக்க வேண்டும்.

இம்மாதிரியான தவறான போதனைகளை நாம் அதிகமாகப் பார்க்கிறோம். எனவே, இவற்றுக்கெல்லாம் வேதாகமத்திலிருந்து பதில் பெற்றுக்கொள்ளும் வகையில், "பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வது எப்படி?" என்ற தலைப்பை இப்போது தியானிப்போம். உண்மையில், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பதும் ஒன்றே. அந்த வகையில், இத்தலைப்பில் நாம் மிக முக்கியமான கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கப்போகிறோம்.

  • முதலாவதாக: பரிசுத்த ஆவியானவரை ஏன் பெற்றுக்கொள்ள வேண்டும்?
  • இரண்டாவதாக: சபையின் ஆரம்ப நாட்களில், அதாவது அப்போஸ்தலர் காலத்தில் இருந்த பரிசுத்தவான்கள் பரிசுத்த ஆவியானவரை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள்?
  • மூன்றாவதாக: இக்காலத்தில் உள்ள பரிசுத்தவான்கள் பரிசுத்த ஆவியானவரை எவ்வாறு பெற்றுக்கொள்கிறார்கள்?
  1. பரிசுத்த ஆவியானவரை ஏன் பெற்றுக்கொள்ள வேண்டும்?

"மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்." (மத்தேயு 3:11,12)

இவ்வசனப் பகுதியில், ஞானஸ்நானம் கொடுக்கும் யோவான், "நான் உங்களுக்குத் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; ஆனால் எனக்குப்பின் வருகிறவராகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்" என்று கூறுகிறார். கவனியுங்கள், இங்கே இரண்டு வகையான ஞானஸ்நானங்களை நாம் பார்க்கிறோம். ஒன்று ஆவியின் ஞானஸ்நானம்; அதாவது இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும் அனைவரும் இந்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெறுவார்கள். அவர்மேல் இரட்சிப்புக்கேதுவான விசுவாசம் வைத்து, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர் எவரும் இல்லை. இதை நம்புவதற்கான ஆதாரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளிலேயே நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

"வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று ரைக்கையாய்ச் சொன்னார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்தே இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை." (யோவான் 7:38,39)

இந்தச் சந்தர்ப்பத்தில், தம்மிடம் விசுவாசம் வைக்கும் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவார்கள் அல்லது பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெறுவார்கள் என்று அவர் மிகத் தெளிவாகக் கூறுகிறார். மேலும் 39-ம் வசனத்தின் இரண்டாம் பகுதியை கவனித்தால், "இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை" என்று கூறி, அது எப்போது நிகழும் என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வார்த்தைகளின்படி; இயேசு கிறிஸ்து சர்வலங்களையும் மீட்கும் வகையில் பிராயச்சித்தம் செய்து, தேவனுடைய நீதியைத் திருப்திப்படுத்தி, மரித்து, உயிர்த்தெழுந்த பிறகு, அதாவது அவர் மகிமைப்படுத்தப்பட்ட பிறகு பரிசுத்த ஆவியானவர் அருளப்படுவார்.

இரண்டாவதாக, அவர் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்று யோவான் கூறுகிறார். அநேகர் இந்த அக்கினி ஞானஸ்நானமும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமும் ஒன்று என்று தவறாக எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த அக்கினி ஞானஸ்நானம் என்றால் என்ன என்பதை யோவானே 12-ம் வசனத்தில் தெளிவுபடுத்துகிறார்: "தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்" (மத்தேயு 3:12).

இங்கே அவர் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பதை விசுவாசிகளின் பாதுகாப்பைக் குறித்தும், அவியாத அக்கினியினால் பதரைச் சுட்டெரிப்பதை அவிசுவாசிகள் தள்ளப்படப்போகும் நரக அக்கினியைக் குறித்தும் பேசுகிறார். எனவே இங்கே இரண்டு பிரிவினர் மட்டுமே உள்ளனர். முதல் பிரிவினர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டால், இரண்டாவது பிரிவினர் அக்கினி ஞானஸ்நானத்தைப் (நியாயத்தீர்ப்பை) பெற்றுக்கொள்வார்கள். அந்த வகையில் இவ்வுலகில் உள்ள மக்கள் இந்த இரண்டில் ஏதேனும் ஒரு ஞானஸ்நானத்தைக் கண்டிப்பாகப் பெறுவார்கள். மூன்றாவதாக ஒரு கூட்டம் என்று எதுவும் இல்லை. இந்த வசனப் பகுதிகளைப் பாருங்கள்:

  • ரோமர் 8:9 - "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல."
  • யோவான் 14:17 - "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்."

இவ்வசனங்களின்படி; பரிசுத்தவான்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டுள்ளனர். ஆனால் உலகம் அவரைக் கொண்டிருப்பதில்லை. ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல என்றால், உண்மையில் அவன் தேவனுக்குரியவனே அல்ல என்று அர்த்தம். அவன் மரித்தால் நித்திய நரகத்திற்கே செல்வான். இது நம் நித்திய வாழ்வோடு தொடர்புடையது என்பதால், இது மிகவும் முக்கியமானது என்பதை உணர வேண்டும். ஏனெனில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்ற நபர் மட்டுமே நித்திய ராஜ்யத்தில் இருப்பார்.

  1. சபையின் ஆரம்ப நாட்களில், அதாவது அப்போஸ்தலர் காலத்தில் இருந்த பரிசுத்தவான்கள் பரிசுத்த ஆவியானவரை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள்?

அப்போஸ்தலர் 1:4-8 "அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆதலால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்குக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்."

இவை இயேசு கிறிஸ்து பரமேறுவதற்கு முன்பாகத் தம்முடைய சீஷர்களிடம் கூறிய வார்த்தைகள். இதில், யோவான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தார், ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவீர்கள், அதற்காகக் காத்திருங்கள் என்று கூறுகிறார். இங்கே எருசலேமிலேயே தங்கி பிதாவின் வாக்குத்தத்தத்திற்காகக் காத்திருங்கள் என்று யாருக்குச் சொல்கிறார்? எல்லோருக்கும் சொல்கிறாரா? ஒருவேளை எல்லோருக்கும் என்றால், இரட்சிப்புப் பெற்ற பிறகு பரிசுத்த ஆவியானவருக்காகக் காத்திருப்பவர்கள் அனைவரும் எருசலேமுக்குச் செல்ல வேண்டுமே? எனவே அவர் அங்கே இருந்த 120 சீஷர்களிடம் மட்டுமே இந்த வார்த்தைகளைக் கூறுகிறார். மேலும், நீங்கள் பெலனடைவீர்கள், அந்தப் பெலத்தினால் எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றும் கூறுகிறார்.

இந்த வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனித்தால், மூன்று கூட்டத்தாரை இங்கே காண்கிறோம்:

  1. எருசலேம், யூதேயா (இக்கூட்டத்தில் உள்ள அனைவரும் இஸ்ரவேலர்கள்).
  2. சமாரியா (இக்கூட்டத்தில் உள்ள அனைவரும் சமாரியர்கள் - அதாவது பாதி யூதர்கள் மற்றும் பாதிப் புறஜாதிகள்).
  3. பூமியின் கடைசிபரியந்தம் (இக்கூட்டத்தில் உள்ள அனைவரும் புறஜாதிகள்).

இந்த அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலேயே இந்த மூன்று கூட்ட மக்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதை நாம் காண்கிறோம்.

முதல் கூட்டத்தாரான இஸ்ரவேலர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தை அப்போஸ்தலர் 2:1-4 ல் காண்கிறோம்:

"பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்றுடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடெங்கும் நிறைத்தது. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்."

இவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் மூலம் இரட்சிப்புப் பெற்று, அவர் சொன்னபடியே எருசலேமில் பரிசுத்த ஆவியானவருக்காகக் காத்திருந்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்களில் பரிசுத்த ஆவியானவரைப் பெறாதவர் ஒருவரும் இல்லை, அனைவரும் பெற்றுக்கொண்டனர். இதற்குப் பிறகு இவர்களுடைய ஊழியத்தின் மூலமே இஸ்ரவேலர்கள் பலர் இரட்சிப்பைப் பெற்றனர். கவனியுங்கள், அவர்கள் அனைவரும் விசுவாசித்தபோதே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டனர். விசுவாசம் வைத்து, இரட்சிப்புப் பெற்று, இன்னும் பரிசுத்த ஆவியானவரைப் பெறாத இஸ்ரவேலர் ஒருவர் கூட இல்லை.

இரண்டாவது கூட்டத்தாரான சமாரியர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தை அப்போஸ்தலர் 8:16-17 ல் காண்கிறோம்:

"அப்பொழுது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தார்களேயல்லாமல், அவர்களில் ஒருவன்மேலும் பரிசுத்த ஆவியானவர் அதுவரைக்கும் இறங்கினதில்லை. அப்பொழுது அவர்கள் (பேதுருவும் யோவானும்) இவர்மேல் கைகளை வைத்தார்கள், இவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்."

ஆரம்பத்தில் விசுவாசிகள் அனைவரும் எருசலேமிலேயே இருந்தனர். ஆனால் எருசலேமிலுள்ள சபைக்குத் துன்புறுத்தல் ஏற்பட்டபோது, அப்போஸ்தலர்களைத் தவிர மற்ற அனைவரும் பல இடங்களுக்குச் சிதறிப் போனார்கள். அப்போது பிலிப்பு சமாரியா பட்டணம் வரை சென்று சுவிசேஷத்தை அறிவித்தார். உடனே அநேகர் நம்பி ஞானஸ்நானம் பெற்றனர். ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளவில்லை. "அவர்களுக்குள் ஒருவன்மேலும் அவர் அதுவரைக்கும் இறங்கினதில்லை". இங்கே 'அவர்கள்' என்றால் யார்? சமாரியர்கள். அவர்கள் ஏன் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், அந்தச் செயல் அப்போஸ்தலர்களின் முன்னிலையிலேயே நடக்க வேண்டும்; அவர்கள் மட்டுமே அதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே அப்போஸ்தலர்கள் வரும்வரை பரிசுத்த ஆவியானவர் அவர்களில் யார் மீதும் இறங்கவில்லை. எப்போது பேதுருவும் யோவானும் சமாரியாவுக்குச் சென்று அவர்கள் மேல் கைகளை வைத்து ஜெபித்தார்களோ, அப்போது சமாரியாவில் இருந்த அந்த விசுவாசிகள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதைப் பார்க்கிறோம்.

கவனியுங்கள், இங்கேயும் சமாரிய விசுவாசிகள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டனர். அவர்களில் சிலர் பெற்றுக்கொள்வதும், சிலர் பெற்றுக்கொள்ளாதிருப்பதும் நடக்கவில்லை. எருசலேம் யூதேயா விசுவாசிகள் எப்படிப் பெற்றுக்கொண்டார்களோ, இவர்களும் அவ்வாறே பெற்றுக்கொண்டனர்.

மூன்றாவது கூட்டத்தாரான புறஜாதிகள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை அப்போஸ்தலர் 10 ஆம் அதிகாரத்தில் காண்கிறோம்:

"இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்."

இந்தச் சந்தர்ப்பத்தை ஆராய்ந்து பார்த்தால்; செசரியாவிலே கொர்நேலியு என்ற ஒரு நூற்றுக்கு அதிபதி இருந்தார். இவர் தேவபக்தி உள்ளவரே தவிர இரட்சிக்கப்பட்டவர் அல்ல. இவருடைய பக்தி லீதியாளைப் போல யூத மார்க்க சம்பந்தமானது (அப் 16:13,14). எனவே தேவன் ஒரு தூதனை இவரிடம் அனுப்பி, எந்த வார்த்தைகள் மூலம் கொர்நேலியு இரட்சிப்பைப் பெறுவாரோ, அந்த வார்த்தைகளைச் சொல்லும் பேதுருவை வரவழைக்கச் சொல்கிறார். உடனே கொர்நேலியு தன் ஆட்களை அனுப்பி பேதுருவை அழைத்துவரச் சொல்கிறார். அதற்குள் அவர் தன் உறவினர்கள் எல்லாரையும் வரவழைத்து, பேதுரு வந்ததும் அவர் சொல்லும் வார்த்தைகளைக் கேட்க ஆயத்தமாக இருக்கிறார். பேதுரு வருகிறார். பேதுரு வந்து பாவமன்னிப்பைக் குறித்துப் போதித்தவுடனேயே, அந்தப் போதனையைக் கேட்டவர்கள் அனைவர் மீதும் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருகிறார். இங்கே விசுவாசித்தவுடனேயே பரிசுத்த ஆவியானவர் புறஜாதி விசுவாசிகள் அனைவருக்குள்ளும் இறங்கி வருவதைப் பார்க்கிறோம். சமாரியர்களின் விஷயத்தில் மட்டுமே அவர்கள் விசுவாசித்த நேரத்திற்கும், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்கும் இடையில் சிறிது கால இடைவெளி இருந்தது (அதற்கான காரணத்தையும் மேலே பார்த்தோம்). ஆனால் இங்கே அப்படி எதையும் பார்க்கவில்லை. அந்தப் புறஜாதிகள் வசனத்தைக் கேட்டார்கள். கேட்டுக்கொண்டிருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள். ஏனென்றால் இது ஒரு அப்போஸ்தலரின் முன்னிலையில் நடந்தது. இங்கேயும் விசுவாசித்த அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள். சிலர் பெறுவது, சிலர் பெறாமல் இருப்பது, காத்திருப்பது என்பதெல்லாம் நடக்கவில்லை. அதேபோல் சமாரியர்களும் அவருக்காகக் காத்திருந்தபோது அவர் இறங்கி வரவில்லை; அப்போஸ்தலர்கள் கைகளை வைத்தவுடனேயே இறங்கி வந்தார்.

இவ்வாறு மூன்று கூட்ட மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டதைப் பார்க்கிறோம். முதலாவதாக இஸ்ரவேலர்கள், இரண்டாவதாக சமாரியர்கள், மூன்றாவதாகப் புறஜாதிகள். வேதாகமத்தில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட இன்னொரு சந்தர்ப்பத்தையும் பார்க்கிறோம். அவர்கள் யாரென்றால் யோவானின் ஞானஸ்நானம் மூலம் மனந்திரும்புதல் அடைந்தவர்கள். இப்போது இவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். இவர்களின் விஷயத்திலும் தேவன் பவுலுடைய அப்போஸ்தல ஊழியத்தை உறுதிப்படுத்தவே அப்படி அனுமதித்தார். மேலும் இவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மரண, உயிர்த்தெழுதலைக் குறித்தோ அல்லது பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்ற செய்தியோ தெரியாது.

அப்போஸ்தலர் 19:1-6

"அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசினார்கள், தீர்க்கதரிசனமும் சொன்னார்கள்."

பவுல் தன் சுவிசேஷ ஊழியத்தின் ஒரு பகுதியாகப் பல இடங்களுக்குச் சென்று எபேசுவுக்கு வந்தார். அங்கே யோவானுடைய சீஷர்கள் சிலர் இருந்தனர். இவர்களில் இஸ்ரவேலர்களும் இருக்கலாம், புறஜாதிகளும் இருந்திருக்கலாம். பவுல் அவர்களைப் பார்த்து, "நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்களா?" என்று கேட்டார். ஆனால் அவர்களோ, "பரிசுத்த ஆவியானவர் ஒருவர் இருக்கிறார் என்பதே எங்களுக்குத் தெரியாது" என்று கூறினார்கள். இவ்வார்த்தைகளை வைத்துப் பலர், அவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரின் இருப்பே தெரியாது என்றும், அவர்கள் அவிசுவாசிகள் என்றும் தவறாக எண்ணிக்கொள்கிறார்கள். உண்மையில் பவுல் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே அவர்கள் உண்மையான தேவன் மேல் விசுவாசம் வைத்திருந்தார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அதனால்தான் பவுல், "நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்களா?" என்று கேட்டார். அதுமட்டுமின்றி இவர்கள் யோவானுடைய சீஷர்கள். யோவானின் போதனைகளிலும் நாம் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து வாசிக்கிறோம் (மத்தேயு 3:11-12).

எனவே யோவானின் சீஷர்களுக்கு இவ்விஷயங்கள் எல்லாம் தெரியும், ஆனால் அது எப்போது நிறைவேறியது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால்தான், "பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எங்களுக்குத் தெரியாது" என்ற அர்த்தத்தில் அவர்கள் பதிலளித்ததாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டில்கூடப் பல இடங்களில் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டை நாம் காண்கிறோம். அவர்களுக்கு யோவானின் போதனைகள் மட்டுமே தெரியும். தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறிய செய்தி தெரியாததால், அவர்கள் ஒரு அப்போஸ்தலரின் முன்னிலையில் பரிசுத்த ஆவியானவரைப் பெற வேண்டிய அவசியம் இருந்தது. அப்போது பவுல் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து அவர்களுக்குப் போதித்து, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கி வந்தார். இவ்வாறு அங்கிருந்த யோவானின் சீஷர்களும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாறு மூன்று கூட்ட மக்களும், அத்துடன் எஞ்சியிருந்த யோவானின் சீஷர்களும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டனர். இவ்வுலகில் இம்மூன்று வகை மக்களே இருப்பதால், இந்த மூன்று சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக இவர்கள் அனைவரும் அப்போஸ்தலர்களின் முன்னிலையில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டனர். பவுலும் பேதுருவைப் போன்ற ஒரு அப்போஸ்தலரே என்று நிரூபிப்பதற்கும் இந்த எபேசுவிலுள்ள யோவான் சீஷர்களின் சம்பவம் ஒரு நல்ல ஆதாரமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கே பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டதை அவர்கள் எப்படி அறிந்துகொண்டார்கள் என்ற சந்தேகம் எழலாம். முதல் நூற்றாண்டில், மனித சக்திக்கு அப்பாற்பட்ட அடையாளங்கள் மூலம் தேவன் அவர்களுக்கு உறுதிப்படுத்தினார். அதன் ஒரு பகுதியாகவே, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட உடனே அந்நிய பாஷைகளில் பேசினார்கள். இதுவே அவர்களுக்கு அடையாளமாக இருந்தது. அந்த உறுதிப்படுத்தலும் அப்போஸ்தலர்களின் முன்னிலையிலேயே நடக்க வேண்டும்; அதனால்தான் அப்போஸ்தலர்கள் முன்னிலையில் இம்மூன்று வகை மக்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டனர்.

  1. இக்காலத்தில் உள்ள விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரை எவ்வாறு பெற்றுக்கொள்கிறார்கள்?

கவனியுங்கள். எப்போது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் அப்போஸ்தலர்களின் முன்னிலையில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்களோ, அதன் பிறகு அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த வேறு யாரேனும் இரட்சிப்புப் பெறும்போது, அவர்கள் விசுவாசித்த உடனேயே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டனர். அதற்கு இனி அப்போஸ்தலர்களின் சாட்சியம் தேவையில்லை. உதாரணமாக, பவுல் நேரடியாகக் கர்த்தராகிய இயேசுவின் மூலம் சுவிசேஷத்தைக் கேட்டு இரட்சிப்பைப் பெற்றார். அவர் ஒரு இஸ்ரவேலர்; ஏற்கனவே இந்தக் கூட்டத்தார் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதால், பவுல் விசுவாசித்த உடனேயே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார். தான் இவ்வாறு விசுவாசித்த உடனேயே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதால்தான், எபேசுவில் இருந்த யோவானின் சீஷர்களிடம் "நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்களா?" என்று கேட்டார். மேலும் பவுல் எபேசியருக்கு நிருபம் எழுதும்போது, நாம் எப்போது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதையும் விளக்குகிறார்.

எபேசியர் 1:13 "நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியினாலே அவருக்குள் முத்திரிக்கப்பட்டீர்கள்."

இவ்வார்த்தைகளில், விசுவாசிகள் இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கேட்டு, இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்த உடனேயே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்று அவர் மிகத் தெளிவாகக் கூறுகிறார். ஞானஸ்நானத்திற்குப் பிறகு ஊழியர் (போதகர்) கைகளை வைத்து ஜெபித்தால் அப்போது பெற்றுக்கொள்வார்கள் என்று சொல்லவில்லை. அல்லது அவர்கள் இரட்சிப்புப் பெற்ற பிறகு காத்திருந்து ஜெபித்தால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் சொல்லவில்லை. எனவே, இப்போது ஒரு நபர் இரட்சிக்கப்படுவதற்கும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்கும் இடையில் எந்தக் கால இடைவெளியும் இருப்பதில்லை. விசுவாசிப்பது, இரட்சிப்புப் பெறுவது, மறுபடியும் பிறப்பது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வது அனைத்தும் ஒரே நேரத்தில் நடப்பவை. இது உள்ளான மனிதனில் நடக்கும் தேவனுடைய செயல்.

நம் உள்ளத்தில் நடந்த அந்தச் செயலுக்கு அடையாளமாக, நாம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற தீர்மானம் ஒவ்வொரு விசுவாசியிடமும் இருக்கும். பரிசுத்த வாழ்க்கை அப்போதிலிருந்தே தொடங்குகிறது; ஞானஸ்நானத்திற்குப் பிறகு அல்ல. தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதலின் ஒரு பகுதியாகவே, இரட்சிப்புப் பெற்றவர்கள் ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்று சாட்சி கொடுக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறபடியே ஜலத்தினால் ஞானஸ்நானம் எடுக்கிறோமே தவிர, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்காக அல்ல.

மேலும் பவுல் அந்தந்தச் சபைகளுக்கு நிருபங்களை எழுதும்போது, அவர்கள் அனைவரையும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர்களாகவே வர்ணித்து எழுதுகிறார். அதனால்தான் கொரிந்தியர்களைப் பார்த்து, "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" (1கொரிந்தியர் 3:16) என்று கூறி, அந்தக் காரணத்தினால் அவர்கள் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்று எச்சரித்தார். தெசலோனிக்கேயரைப் பார்த்து, நீங்கள் பாவம் செய்தால் உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுவார் என்று (எபேசியர் 4:30) போதித்தார். யோவானும் தன் நிருபத்தில் "உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்" (1யோவான் 4:4) என்று பரிசுத்த ஆவியானவரைக் குறித்துச் சொல்வதைப் பார்க்கிறோம். பவுலானாலும், யோவானானாலும், வேறு யாரானாலும் சரி, விசுவாசிகள் அனைவரையும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர்களாகவே பார்த்தார்கள். ஒருவேளை இரட்சிப்புடன் கூடவே அவரைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், அவருக்காக மீண்டும் தனியாகக் காத்திருக்க வேண்டியிருந்தால், அவர்கள் கண்டிப்பாகச் சொல்லியிருப்பார்கள் அல்லவா! ஏனெனில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வது என்பது ஒரு நபரின் நித்திய வாழ்வு சம்பந்தப்பட்டது என்பதால், "இரட்சிப்புப் பெற்றால் போதாது, பரிசுத்த ஆவியானவருக்காகக் காத்திருங்கள், ஜெபம் செய்யுங்கள்" என்று கண்டிப்பாகச் சொல்லியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், இப்போது ஒரு நபர் விசுவாசித்த உடனேயே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்கிறார்.

ஆகவே, இக்காலத்தில் உள்ள பரிசுத்தவான்களும் விசுவாசித்த உடனேயே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேச வேண்டிய அவசியமில்லை. மீண்டும் அப்போஸ்தலர்கள் முன்னிலையில் சாட்சி கொடுக்க வேண்டிய அவசியம் அதைவிட இல்லவே இல்லை.

 
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.