வேதாகமத்தை வாசி

லேவியராகமம் 10

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்பு ஆரோனின் மகன்களாகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் நெருப்பையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய நெருப்பை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
2அப்பொழுது நெருப்பு கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களை எரித்துவிட்டது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் மரணமடைந்தார்கள்.
3அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் செய்யப்பட்டு, சகல மக்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.
4பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் மகன்களாகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் அருகில் வந்து, உங்கள் சகோதரர்களைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து எடுத்து, முகாமிற்கு வெளியே கொண்டுபோங்கள் என்றான்.
5மோசே சொன்னபடி அவர்கள் அருகில் வந்து, அவர்களை அவர்கள் அணிந்திருந்த உடைகளோடும் எடுத்து முகாமிற்கு வெளியே கொண்டுபோனார்கள்.
6மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவனுடைய மகன்களையும் நோக்கி: நீங்கள் மரணமடையாமல் இருக்கவும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராமல் இருக்கவும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் உடைகளைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் கர்த்தர் கொளுத்தின இந்த நெருப்பிற்காகப் புலம்புவார்களாக.
7நீங்கள் சாகாமல் இருக்க ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகத்தைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.
8கர்த்தர் ஆரோனை நோக்கி:
9நீயும் உன்னுடன் உன் மகன்களும் மரணமடையாமல் இருக்கவேண்டுமானால், ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைகிறபோது, திராட்சைரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.
10பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம் உண்டாக்கும்படிக்கும்
11கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்ன சகலபிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கும் என்றார்.
12மோசே ஆரோனையும் மீதியாக இருந்த அவனுடைய மகன்களாகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான உணவுபலியை எடுத்து, பலிபீடத்தின் அருகில் புளிப்பில்லாததாக சாப்பிடுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
13அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே சாப்பிடுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன் மகன்களுக்கும் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன்.
14அசைவாட்டும் மார்புப்பகுதியையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் மகன்களும் மகள்களும் சுத்தமான இடத்திலே சாப்பிடுவீர்களாக; இஸ்ரவேல் மக்களுடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
15கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், அசைவாட்டும் மார்புப்பகுதியையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நிரந்தரமான கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.
16பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது எரிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாக இருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்கள்மேல் அவன் கோபம்கொண்டு:
17பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாக இருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக அதை உங்களுக்கு கொடுத்தாரே.
18அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டியதாக இருந்ததே என்றான்.
19அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்கதகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி சம்பவித்ததே; பாவநிவாரணபலியை இன்று நான் சாப்பிட்டேன் என்றால், அது கர்த்தரின் பார்வைக்கு ஏற்றதாக இருக்குமோ என்றான்.
20மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.