வேதாகமத்தை வாசி

ஆதியாகமம் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தருடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன் என்றாள்.
2பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றெடுத்தாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
3சிலநாட்கள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் பழங்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
4ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் கர்த்தர் ஏற்றுக்கொண்டார்.
5காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது.
6அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது? உன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது?.
7நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும் என்றார்.
8காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலோடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்போது, காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
9கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா என்றான்.
10அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
11இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தம் உன்னால் பூமியில் சிந்தப்பட்டதால் இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
12நீ நிலத்தில் பயிரிடும்போது, அது தன்னுடைய பலனை இனி உனக்குக் கொடுக்காது; நீ பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பாய்” என்றார்.
13அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது.
14இன்று என்னை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்திற்கு விலகி மறைந்து, பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.
15அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாமலிருக்க கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.
16அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கே நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
17காயீன் தன்னுடைய மனைவியுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றெடுத்தாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்திற்குத் தன் மகனாகிய ஏனோக்குடைய பெயரை வைத்தான்.
18ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றெடுத்தான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றெடுத்தான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
19லாமேக்கு இரண்டு பெண்களைத் திருமணம் செய்தான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பெயர், மற்றொருவளுக்குச் சில்லாள் என்று பெயர்.
20ஆதாள் யாபாலைப் பெற்றெடுத்தாள்; அவன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
21அவனுடைய சகோதரனுடைய பெயர் யூபால்; அவன் கின்னரக்காரர்கள், நாதசுரக்காரர்கள் அனைவருக்கும் தகப்பனானான்.
22சில்லாளும், தூபால் காயீனைப் பெற்றெடுத்தாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.
23லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, நான் சொல்வதை மிகவும் கவனமாகக் கேளுங்கள்; எனக்குக் காயமுண்டாக்கிய ஒரு மனிதனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக்கிய ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்;
24காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.
25பின்னும் ஆதாம் தன் மனைவியுடன் இணைந்தான்; அவள் ஒரு மகனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்கு பதிலாக, தேவன் எனக்கு வேறொரு மகனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள்.
26சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான்; அப்பொழுது மக்கள் கர்த்தருடைய நாமத்தை வழிபட ஆரம்பித்தார்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.