வேதாகமத்தை வாசி

ஆதியாகமம் 16

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குக் குழந்தையில்லாமல் இருந்தது. எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆகார் என்னும் பெயர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள்.
2சாராய் ஆபிராமை நோக்கி: நான் குழந்தைபெறாமலிருக்கக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடு சேரும், ஒருவேளை அவளால் என்னுடைய குடும்பம் கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தையின்படி ஆபிராம் செய்தான்.
3ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருடங்கள் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் கணவனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
4அவன் ஆகாருடன் இணைந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள், தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் எஜமானியை அற்பமாக நினைத்தாள்.
5அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக நினைக்கிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநிலையாக நியாயந்தீர்ப்பாராக என்றாள்.
6அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் அதிகாரத்திற்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமாகத் தோன்றுகிறபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாக நடத்தியதால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.
7கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்திரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்று அருகில் கண்டு:
8சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் எஜமானியாகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.
9அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் எஜமானியிடத்திற்குத் திரும்பிப்போய், அவளுடைய அதிகாரத்திற்குள் அடங்கியிரு என்றார்.
10பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகச்செய்வேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாக இருக்கும் என்றார்.
11பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாக இருக்கிறாய், ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டதால், அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக.
12அவன் கொடூரமான மனிதனாக இருப்பான்; அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும், எல்லோருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
13அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இந்த இடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னுடன் பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பெயரிட்டாள்.
14ஆகையால், அந்தக் கிணற்றின் பெயர் லகாய்ரோயீ எனப்பட்டது; அது காதேசுக்கும் பேரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
15ஆகார் ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் மகனுக்கு இஸ்மவேல் என்று பெயரிட்டான்.
16ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றெடுத்தபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.