வேதாகமத்தை வாசி

எண்ணாகமம் 19

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும் பேசினார். அவர்,
2“இந்த சட்டங்களெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தந்த போதனைகளாகும். பழுதற்ற ஒரு சிவப்புப் பசுவைக் கொண்டு வாருங்கள். அப்பசு நுகத்தடியில் பூட்டப்படாததாகவும் ஊனமில்லாததாகவும் இருக்க வேண்டும்.
3கன்று போடாத இளம் பசுவை ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுங்கள். அவன் அதை வெளியே கொண்டுப்போய் கொல்லவேண்டும்.
4பிறகு எலெயாசார் அதன் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரல்களால் தொட்டு பரிசுத்த கூடாரத்திற்குள் தெளிக்கவேண்டும். இவ்வாறு அவன் ஏழு முறை செய்யவேண்டும்.
5பின்பு அவன் கண்களுக்கு முன்னால் அந்தப் பசுவின் தோல், சதை, இரத்தம், குடல் அனைத்தும் எரிக்கப்பட வேண்டும்.
6பிறகு, ஆசாரியர் கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும் எடுத்து காளை எரிக்கப்படும் இடத்தில் போடவேண்டும்.
7பின்னர் ஆசாரியன் தன்னையும், தனது உடைகளையும் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப்பின் அவன் கூடாரத்திற்குள் வரவேண்டும். அவன் மாலைவரை தீட்டாக இருப்பான்.
8காளையை எரித்தவனும் தன்னைக் கழுவி உடலைச் சுத்தமாக்க வேண்டும். மேலும் தனது ஆடையையும் தண்ணீரால் கழுவ வேண்டும். அவனும் அன்று மாலைவரை தீட்டாக இருப்பான்.
9“பிறகு தீட்டு இல்லாத ஒருவன் எரிந்துபோன காளையின் சாம்பலைச் சேகரித்து அவற்றைக் கூடாரத்திற்கு வெளியே சுத்தமான இடத்தில் கொட்ட வேண்டும். ஜனங்கள் இதனை தம்மை சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இச்சாம்பல் ஒருவனின் பாவத்தைப் போக்கவும் பயன்படும்.
10“காளையின் சாம்பலைச் சேகரித்தவன் தனது ஆடைகளைத் துவைக்கவேண்டும். அவன் அன்று மாலைவரை தீட்டாக இருப்பான். “இந்த விதிகள் எல்லாக் காலத்துக்கும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் உரியதாக்கும். இந்த விதி உங்களோடு வாழ்கிற அயல் நாட்டவருக்கும் உரியதாகும்.
11எவனாவது, மரித்துப்போனவனின் சரீரத்தை தொட்டால், அவன் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான்.
12அவன் தன்னைத் தீட்டுக்கழிக்கும் தண்ணீரால் மூன்றாவது நாளும், ஏழாவது நாளும் கழுவவேண்டும். அவ்வாறு அவன் செய்யாவிட்டால் தொடர்ந்து அவன் தீட்டுள்ளவனாக இருப்பான்.
13ஒருவன் ஒரு மரித்த சரீரத்தைத் தொட்டால், அவன் தீட்டுள்ளவன் ஆகிறான். அவன் தீட்டுள்ளவனாக பரிசுத்த கூடாரத்திற்குள் சென்றால், அதுவும் தீட்டாகிவிடும். எனவே அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து தனியே பிரித்து வைக்கப்படுவான். தீட்டுள்ளவன் மேல் தீட்டுக்கழிக்கும் தண்ணீர் தெளிக்கப்படாவிட்டால், அவன் தொடர்ந்து தீட்டுள்ளவனாக இருப்பான்.
14“இவை அனைத்தும் தங்கள் கூடாரத்திற்குள் மரித்துப் போகிறவர்களைப் பற்றிய விதிகளாகும். ஒருவன் தனது கூடாரத்தில் மரித்தால், அக்கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் தீட்டாகும். அவை ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவையாக இருக்கும்.
15ஒவ்வொரு ஜாடியும், பாத்திரமும் மூடப்படாமல் இருந்தால் தீட்டாகும்.
16வெளியிலே எவனாவது பிணத்தைத் தொட்டால், ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். போரில் கொல்லப்பட்டவனையோ, மரித்தவனின் எலும்பையோ தொட்டாலும் அவன் தீட்டுள்ளவன் ஆவான்.
17“எனவே அவனை மீண்டும் சுத்தப்படுத்த எரித்த காளையின் சம்பலை நீங்கள் பயன்படுத்தவேண்டும். ஒரு ஜாடிக்குள் சாம்பலைப்போட்டு தண்ணீரை அதில் விடவேண்டும்.
18தீட்டில்லாத ஒருவன் ஈசோப்புக் கிளையை எடுத்து அதை தண்ணீரில் நனைக்கவேண்டும். பிறகு அதனைக் கூடாரம், சகல பொருட்கள், ஜனங்கள் ஆகியவற்றின் மீது தெளிக்கவேண்டும். மரித்த மனிதனின் சரீரத்தைத் தொட்டவன் மீதும் இவ்வாறு தெளிக்க வேண்டும். போரில் கொல்லப்பட்ட ஒருவனைத் தொட்டவன் மீதும், மரித்துப் போனவனின் எலும்புகளைத் தொட்டவன் மீதும் இவ்வாறு தெளிக்கவேண்டும்.
19“தீட்டு இல்லாத ஒருவன், இத்தண்ணீரை தீட்டுள்ளவன் மீது மூன்றாவது நாளும், ஏழாவது நாளும் தெளிக்கவேண்டும். ஏழாவது நாள் தீட்டுள்ளவன் சுத்தமாவான். அவன் தனது ஆடையை தண்ணீரில் துவைக்கவேண்டும். மாலையில அவன் சுத்தமாகிவிடுவான்.
20“ஒருவன் தீட்டுள்ளவனாகி அதிலிருந்து சுத்தமாகாமல் இருந்தால் அவனை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒதுக்கி வைக்கவேண்டும். அவன் மீது தீட்டுக்கழிக்கும் தண்ணீர் தெளிக்கப்படாததால் அவன் சுத்தமாகவில்லை: ஆகையால், அவன் பரிசுத்தக் கூடாரத்தையும் தீட்டாக்கிவிடுவான்.
21இந்த விதி எல்லாக் காலத்திற்கும் உரியது, ஒருவன் தீட்டுக்கழிக்கும் தண்ணீரால் தெளிக்கப்பட்டாலும் அவன் தன் ஆடைகளை தண்ணீரில் துவைக்க வேண்டும். தீட்டுக்கழிக்கும் தண்ணீரைத் தொடுகிற எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்.
22தீட்டுள்ள ஒருவன் யாரையாவது தொட்டால் அவனும் தீட்டுள்ளவனாவான். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்” என்று கூறினார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.