1 | கர்த்தர் மோசேயிடம், |
2 | “கானான் தேசத்தைக் கண்டு வருமாறு சிலரை அனுப்பு. இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கப்போகும் நாடு இதுதான். குடும்பத்திற்கு ஒரு தலைவன் என்கிற வீதம் 12 கோத்திரங்களில் இருந்தும் 12 தலைவர்களை அங்கு அனுப்பு” என்று கூறினார். |
3 | கர்த்தருடைய கட்டளைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஜனங்கள் அனைவரும் பாரான் பாலைவனத்தில் தங்கியிருந்தபோது இந்தத் தலைவர்களை மோசே கானானுக்கு அனுப்பி வைத்தான். |
4 | ரூபனின் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகனான சம்முவா; |
5 | சிமியோனின் கோத்திரத்திலிருந்து ஓரியின் மகனான சாப்பாத்; |
6 | யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேப்; |
7 | இசக்காரின் கோத்திரத்திலிருந்து யோசேப்பின் மகனான ஈகால்; |
8 | எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து நூனின் மகனான ஓசேயா; |
9 | பென்யமீன் கோத்திரத்திலிருந்து ரப்பூவின் மகனான பல்த்தி; |
10 | செபுலோன் கோத்திரத்திலிருந்து சோதியின் மகனான காதியேல்; |
11 | யோசேப்பின் கோத்திரத்திலிருந்து (மனாசே) ஆசின் மகனான காதி; |
12 | தாண் கோத்திரத்திலிருந்து கெமல்லியின் மகனான அம்மியேல்; |
13 | ஆசேர் கோத்திரத்திலிருந்து மிகாவேலின் மகனான சேத்தூர்; |
14 | நப்தலி கோத்திரத்திலிருந்து ஒப்பேதியின் மகனான நாகபி; |
15 | காத் கோத்திரத்திலிருந்து மாகியின் மகனான கூவேல்; |
16 | நாட்டைப் போய் கண்டுபிடிக்கவும், அதைப் பற்றி அறியவும் மோசேயால் அனுப்பட்டவர்களின் பெயர்கள் இவைகளே ஆகும். (நூனின் மகனான ஓசேயாவுக்கு மோசே, யோசுவா என்று பெயர் வைத்திருந்தான்.) |
17 | மோசே அவர்களைக் கானான் தேசத்தைக் கண்டு வருமாறு அனுப்பும்போது அவர்களிடம், “நீங்கள் இந்தப் பாலைவனத்தின் தெற்குப் பகுதி வழியாகச் சென்று மலையில் ஏறவேண்டும். |
18 | அந்த நாடு எவ்வாறு தோற்றம் அளிக்கிறது என்று பார்க்க வேண்டும், அங்கே வாழுகிற ஜனங்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள். அவர்கள் பலமானவர்களா, அல்லது பலவீனமானவர்களா? அவர்களின் எண்ணிக்கை குறைவா, மிகுதியா? |
19 | நாட்டைப் பற்றியும் அதில் வாழும் ஜனங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள், இது நல்ல நாடா கெட்ட நாடா? எந்த விதமான பட்டணங்களில் குடியிருக்கிறார்கள்? நகரங்களைப் பாதுகாக்க மதில் சுவர்கள் உள்ளனவா? நகரங்கள் பலமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனவா? |
20 | நாட்டிலுள்ள மற்ற செய்திகளைப் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள். அங்குள்ள மண் விவசாயம் செய்வதற்குரிய வளம் உள்ளதா, அல்லது சாரம் அற்றதா? இந்நாட்டில் மரங்கள் உள்ளனவா? அங்குள்ள பழவகைகளில் சிலவற்றைக் கொண்டு வர முயலுங்கள்” என்றான். (அது முதல் திராட்சைகள் பழுக்கும் காலமாய் இருந்தது.) |
21 | எனவே அவர்கள் நாட்டைப் பற்றித் தெரிந்துக்கொள்ளச் சென்றனர். பின் அவர்கள் சீன் பாலைவனம் முதல் ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை சுற்றிப் பார்த்தனர். |
22 | நெகேவ் வழியாக நாட்டிற்குள் நுழைந்தனர். தெற்கேயும் எபிரோன் வரை சென்றார்கள். (எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.) அங்கே ஆனாக்கின் சந்ததியாகிய அகீமானும், சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். |
23 | பிறகு அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை சென்றனர். அங்கே அவர்கள் திராட்சைக் கொடியில் ஒரு குலையை அறுத்துக் கொண்டனர். அதனை ஒரு கம்பிலே கட்டி, இரண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். அவர்கள் மாதுளம் பழங்களிலும், அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தனர். |
24 | அந்த இடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. காரணம் அந்த இடத்தில்தான் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு குலை திராட்சை பழத்தைக் கொடியோடு வெட்டிக் கொண்டு வந்தார்கள். |
25 | அவர்கள் 40 நாட்கள் அந்த தேசத்தை நன்கு சுற்றி பார்த்தனர். பிறகு அவர்கள் தங்கள் முகாமுக்கு திரும்பி வந்தனர். |
26 | இஸ்ரவேல் ஜனங்கள் பாரான் பாலைவனத்தில் காதேஷ் என்ற இடத்துக்கு அருகில் தம் கூடாரங்களை அடித்திருந்தனர். அவர்கள் மோசே, ஆரோன் மற்றும் மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் இருந்த இடத்துக்குத் திரும்பி வந்தனர். அந் நாட்டிலிருந்து கொண்டு வந்த பழங்களைக் காட்டினார்கள். |
27 | மேலும் அவர்கள் மோசேயிடம், “நீங்கள் அனுப்பிய இடத்திற்கு நாங்கள் சென்றோம். பல நல்ல பொருட்களால் நிறைந்த நாடு அது. அங்கே பழுத்துள்ள சில பழங்களில் கொஞ்சம் இதோ; |
28 | ஆனால் அங்கு ஜனங்கள் மிகவும் பல முள்ளவர்களாக வாழ்கிறார்கள். நகரங்கள் மிகவும் விரிவானவை, மிகவும் பலமான பாதுகாப்பு கொண்டவை. அங்கே சில ஏனாக்கின் ஜனங்களையும் கண்டோம். |
29 | அமலேக்கியர் தென்புறமான நாட்டில் குடியிருக்கிறார்கள். மலை நாடுகளில் ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் குடியிருக்கிறார்கள். கானானியர்கள் கடற்கரைகளிலும், யோர்தான் நதி அருகேயும் வாழ்கிறார்கள்” என்றனர். |
30 | மோசேயின் அருகே இருந்த ஜனங்களைக் காலேப் அமைதிப்படுத்தி, “நாம் போய் அந்நாட்டை நமக்குரியதாக எடுத்துக் கொள்வோம். நாம் எளிதில் இவர்களை வென்றுவிடலாம்” என்றான். |
31 | ஆனால் அவனோடு சென்று வந்த மற்றவர்களோ, “நாம் அவர்களோடு சண்டையிட முடியாது. அவர்கள் நம்மைவிட பலமுள்ளவர்கள்” என்றனர். |
32 | மேலும் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் தம்மால் அந்நாட்டில் உள்ளவர்களை வெல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தனர். அவர்கள், “நாங்கள் பார்வையிட்ட அந்நாட்டில் பல முள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே அங்கே செல்லும் எவரையும் அவர்கள் எளிதாக வென்று விடுவார்கள். |
33 | அங்கே நாங்கள் இராட்சதர்களையும் பார்த்தோம்! (ஏனாக்கின் சந்ததியிலுள்ள சிலர் இராட்சதப் பிறவிகளாயிருந்தனர்.) எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன் நாங்கள் சிறிய வெட்டுக்கிளிகளைப் போன்று இருந்தோம். அவர்களது பார்வையில் நாங்களும் அப்படியே தோன்றினோம்!” என்றார்கள். |