வேதாகமத்தை வாசி

யாத்திராகமம் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1மோசேயின் மாமன் எத்திரோ என்ற பெயருடையவன் ஆவான். (எத்திரோ மீதியானில் ஆசாரியனாக இருந்தான்) எத்தி ரோவின் ஆடுகளை மோசே கவனித்து வந்தான். ஒரு நாள், மோசே ஆடுகளைப் பாலைவனத்தின் மேற்குத் திசைக்கு அழைத்துச் சென்றான். மோசே ஓரேப் (சீனாய்) எனப்படும் தேவனின் மலைக்குப் போனான்.
2மோசே மலையின்மேல், ஒரு எரியும் புதரில் கர்த்தருடைய தூதனைக் கண்டான். அது பின்வருமாறு நிகழ்ந்தது: அழியாதபடி எரிந்துகொண்டிருந்த ஒரு புதரை மோசே கண்டான்.
3மோசே புதரின் அருகே சென்று, அழியாதபடி அது எவ்வாறு எரிகிறது என்பதைப் பார்ப்பதற்குத் தீர்மானித்தான்.
4புதரைப் பார்ப்பதற்கு மோசே வந்து கொண்டிருப்பதைக் கர்த்தர் கண்டார். எனவே, தேவன் புதரிலிருந்து, “மோசே, மோசே!” என்று கூப்பிட்டார். மோசே, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.
5அப்போது கர்த்தர், “பக்கத்தில் நெருங்காதே. உனது செருப்புகளைக் கழற்று. நீ பரிசுத்த பூமியில் நின்று கொண்டிருக்கிறாய்.
6நான் உனது முற்பி தாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாகவும் இருக்கிறேன்” என்றார். தேவனைப் பார்ப்பதற்குப் பயந்ததால் மோசே முகத்தை மூடிக் கொண்டான்.
7அப்போது கர்த்தர், “எகிப்தில் என் ஜனங்கள் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். எகிப்தியர்கள் அவர்களைத் துன்புறுத்தும்போது, அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன்.
8நான் இப்போது இறங்கிப்போய், எகிப்தியரிடமிருந்து என் ஜனங்களை மீட்பேன். அந்நாட்டிலிருந்து தொல்லைகளில்லாமல் சுதந்திரமாக வாழத்தக்க ஒரு நல்ல நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். அந்நாடு நல்ல பொருட்களால் நிரம்பியதாகும். கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற ஜனங்கள் அந்நாட்டில் வாழ்கிறார்கள்.
9நான் இஸ்ரவேல் ஜனங்களின் கூக் குரலைக் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியதையும் கண்டேன்.
10நான், உன்னை இப்போது பார்வோனிடம் அனுப்புகிறேன். நீ போய் எனது ஜனங்களாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்து!” என்றார்.
11ஆனால் மோசே தேவனிடம், “நான் பெரிய மனிதன் அல்ல, நான் எவ்வாறு பார்வோனிடம் போய், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தக் கூடும்?” என்று கேட்டான்.
12தேவன், “நான் உன்னோடு இருப்பேன். எனவே நீ இதைச் செய்ய முடியும். நான் உன்னை அனுப்புகிறேன் என்பதற்கு இதுவே சான்றாகும்! ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்திய பிறகு, நீ வந்து இம்மலையின் மேல் என்னைத் தொழுவாய்!” என்றார்.
13அப்போது மோசே தேவனை நோக்கி, “நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவன் என்னை அனுப்பினார்’ என்று கூறினால், அவர்கள், ‘அவரது பெயரென்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்?” என்று கேட்டான்.
14அப்போது தேவன் மோசேயை நோக்கி, “அவர்களிடம் ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ போகும்போது, ‘இருக்கிறேன்’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார், என்று சொன்னார் என்று சொல்” என்றார்.
15மோசேயிடம் தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யேகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார்.
16மேலும் கர்த்தர், “போய் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒருமித்துக் கூடி வரச் செய்து அவர்களுக்கு, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யேகோவா, எனக்குத் தரிசனமளித்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரின் தேவன் என்னிடம் பேசினார். கர்த்தர், நான் உங்களை நினைவுகூர்ந்து, எகிப்தில் உங்களுக்கு நடந்ததையும் கண்டேன்.
17எகிப்தில் நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து உங்களை விடுவிக்க முடிவு செய்தேன். இப்போது கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற வெவ்வேறு ஜனங்களுக்குச் சொந்தமான தேசத்திற்கு உங்களை அழைத்துச் செல்வேன். பல நல்ல பொருட்களால் நிரம்பிய தேசத்திற்கு உங்களை வழிநடத்துவேன்’ என்று சொன்னார் என்று சொல்.
18“மூப்பர்கள் (தலைவர்கள்) உனக்குச் செவி கொடுப்பார்கள். பின்னர் நீயும், அவர்களும் எகிப்திய அரசனிடம் செல்லுங்கள். நீ அரசனிடம், ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய யேகோவா எங்களிடம் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணப்படும்படியாகக் கூறினார். எங்கள் தேவனாகிய யேகோவாவுக்கு நாங்கள் அங்கு பலி செலுத்தவேண்டும் என்று சொல்லுங்கள்.’
19“ஆனால் எகிப்திய அரசன் உங்களைப் போக அனுமதிக்கமாட்டான் என்பதை அறிவேன். மிகப் பெரிய ஒரு வல்லமை மட்டுமே உங்களை அனுப்ப அவனைக் கட்டாயப்படுத்தும்.
20ஆகையால் எனது மிகுந்த வல்லமையை எகிப்துக்கு எதிராகப் பயன்படுத்துவேன். அந்த தேசத்தில் வியக்கும்படியான காரியங்கள் நிகழும்படி செய்வேன். நான் இதைச் செய்தபிறகு, அவன் உங்களைப் போக அனுமதிப்பான்.
21இஸ்ரவேல் ஜனங்களிடம் எகிப்திய ஜனங்கள் இரக்கம்கொள்ளும்படி செய்வேன். எகிப்தைவிட்டுப் புறப்படும்போது, உங்கள் ஜனங்களுக்கு எகிப்தியர்கள் பல வெகுமதிகளைக் கொடுப்பார்கள்.
22எல்லா எபிரெய பெண்களும் தங்கள் அண்டை வீடுகளிலும், தங்கள் வீடுகளிலும் வசிக்கும் எகிப்திய பெண்களிடம் பரிசுகளைக் கேட்க வேண்டும். அந்த எகிப்திய பெண்கள் அவர்களுக்குப் பரிசுகளைக் கொடுப்பார்கள். உன் ஜனங்கள் பொன், வெள்ளி, விலைமதிப்புள்ள ஆடைகள் ஆகியவற்றைப் பரிசாகப் பெறுவார்கள். பின் நீங்கள் எகிப்தை விட்டுப் புறப்படும்போது, உங்கள் குழந்தைகளுக்கு அப்பரிசுகளை அணிவிப்பீர்கள். இவ்வகையில் நீங்கள் எகிப்து தேசத்தின் செல்வத்தை எடுத்துச் செல்வீர்கள்” என்றார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.