வேதாகமத்தை வாசி

யாத்திராகமம் 17

                   
புத்தகங்களைக் காட்டு
1சீன் பாலைவனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பிரயாணம் செய்தார்கள். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணமானார்கள். ரெவிதீமிற்கு ஜனங்கள் பிரயாணம் செய்து அங்கு கூடாரமிட்டுத் தங்கினார்கள். குடிக்கக் கூட ஜனங்களுக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை.
2எனவே ஜனங்கள் மோசேக்கு எதிராக திரும்பி, அவனோடு வாதாட ஆரம்பித்தார்கள். “எங்களுக்குக் குடிப்பதற்கு தண்ணீர் தா” என்று ஜனங்கள் கேட்டார்கள். மோசே அவர்களை நோக்கி, “ஏன் எனக்கு எதிராகத் திரும்பினீர்கள்? ஏன் கர்த்தரை சோதிக்கிறீர்கள்? கர்த்தர் நம்மோடு வரவில்லை என்று நினைக்கிறீர்களா?” என்றான்.
3ஆனால் ஜனங்கள் மிகவும் தாகமாக இருந்தபடியால் மோசேயிடம் தொடர்ந்து முறையிட்டார்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்களும், எங்கள் பிள்ளைகளும், ஆடு மாடுகளும் தாகத்தால் மரித்துபோவதற்காகவா எங்களை அழைத்து வந்தீர்?” என்றார்கள்.
4எனவே மோசே கர்த்தரிடம் சத்தமாக அழுது, “நான் இந்த ஜனங்களோடு என்ன செய்ய முடியும்? இவர்கள் என்னைக் கொல்லத் தயாராயிருக்கிறார்கள்” என்றான்.
5கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகப் போ, ஜனங்களின் மூப்பர்களில் (தலைவர்களில்) சிலரையும் உன்னோடு அழைத்துச் செல். உனது கைத்தடியையும் எடுத்துக்கொள். நைல் நதியை அடித்தபோது நீ பயன்படுத்திய தடி இதுவே.
6உனக்கு முன்பாக ஓரேபிலுள்ள (சீனாய் மலையிலுள்ள) பாறையில் நான் இருப்பேன். உனது கைத்தடியால் பாறையை அடி, உடனே பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும், அப்போது ஜனங்கள் அதைப் பருகலாம்” என்றார். மோசே அவ்வார்த்தைகளின்படியே செய்தான். இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அதைப் பார்த்தார்கள்.
7இவ்விடத்தில் ஜனங்கள் மோசேக்கு எதிராகத் திரும்பி கர்த்தரை சோதித்ததால் மோசே அதற்கு மேரிபா என்றும், மாசா என்றும் பெயரிட்டான். கர்த்தர் அவர்களோடு இருக்கிறாரா, இல்லையா என்று சோதிக்க ஜனங்கள் விரும்பினார்கள்.
8ரெவிதீமில் அமலேக்கிய ஜனங்கள் வந்து இஸ்ரவேல் ஜனங்களோடு போர் செய்தார்கள்.
9எனவே மோசே யோசுவாவை நோக்கி, “சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு போய் அமலெக்கியரோடு நாளை போர் செய். நான் மலையின்மீது நின்று உங்களை கண்காணிப்பேன். தேவன் எனக்குக் கொடுத்த கைத்தடியைப் பிடித்துக்கொண்டிருப்பேன்” என்றான்.
10யோசுவா மோசேக்குக் கீழ்ப்படிந்து, அமலேக்கிய ஜனங்களோடு போர் செய்வதற்கு மறுநாள் போனான். அதே நேரத்தில் மோசேயும், ஆரோனும், ஊரும் மலையுச்சிக்குச் சென்றார்கள்.
11மோசே கைகளை மேலே உயர்த்தியிருந்தபோது, இஸ்ரவேல் ஜனங்கள் வென்றனர். ஆனால் மோசேயின் கரங்கள் கீழே தாழ்ந்தபோது, இஸ்ரவேல் ஜனங்கள் தோல்வியடையத் தொடங்கினார்கள்.
12சிறிது நேரத்திற்குப் பிறகு மோசேயின் கைகள் சோர்வடைந்தன. மோசேயோடு சென்ற மனிதர்கள் மோசேயின் கைகளைத் தூக்கியவாறே வைத்திருப்பதற்கு ஒரு வழி காண முயன்றார்கள். ஒரு பெரிய பாறையை மோசேக்குக் கீழே நகர்த்தி, அவனை அதில் உட்காரச் செய்தார்கள். பின் ஆரோனும், ஊரும் மோசேயின் கைகளைத் தூக்கிப் பிடித்தார்கள். ஆரோன் மோசேக்கு ஒரு புறமாகவும், ஊர் அவனுக்கு மறுபுறமாகவும் நின்றிருந்தனர். சூரியன் மறையும் வரைக்கும் அவர்கள் இவ்வாறே அவனுடைய கைகளைப் பிடித்திருந்தார்கள்.
13ஆகவே யோசுவாவும் அவனுடைய ஆட்களும் இப்போரில் அமலேக்கியர்களை வென்றார்கள்.
14அப்போது கர்த்தர் மோசேயிடம், “இந்த யுத்தத்தைப் பற்றி எழுது. இங்கு நடந்தவற்றை ஜனங்கள் நினைவுகூரும்படியாக இக்காரியங்களை ஒரு புத்தகத்தில் எழுது. பூமியிலிருந்து அமலேக்கிய ஜனங்களை முற்றிலுமாக அழிப்பேன் என்பதை யோசுவாவுக்கு உறுதியாகக் கூறு” என்றார்.
15பின் மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். “கர்த்தர் எனது கொடி” என்று அந்தப் பலி பீடத்திற்குப் பெயரிட்டான்.
16மோசே, “கர்த்தருடைய சிங்காசனத்திற்கு நேராக என் கைகளை உயர்த்தினேன். ஆகையால் கர்த்தர் எப்பொழுதும் செய்தது போல தலைமுறை தலைமுறையாக அமலேக்கியரை எதிர்த்துப் போர் செய்தார்” என்றான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.