வேதாகமத்தை வாசி

ஆதியாகமம் 29

                   
புத்தகங்களைக் காட்டு
1பிறகு யாக்கோபு தன் பயணத்தைத் தொடர்ந்து, கிழக்கே உள்ள நாட்டுக்குப் போனான்.
2யாக்கோபு வயல்வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தான். அக்கிணற்றின் அருகில் மூன்று ஆட்டு மந்தைகள் மடக்கப்பட்டிருப்பதையும் பார்த்தான். அக்கிணறு தான் ஆடுகள் தண்ணீர் குடிக்கும் இடம் ஆகும். கிணற்றின் வாயானது ஒரு பெரிய கல்லால் அடைக்கப்பட்டிருந்தது.
3ஆடுகள் எல்லாம் அங்கு ஒன்று சேர்ந்ததும் மேய்ப்பர்கள் கிணற்றை மூடியுள்ள பாறையை அகற்றி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். ஆடுகள் வயிறு நிறைய தண்ணீர் குடித்த பிறகு மேய்ப்பர்கள் அக்கிணற்றைப் பாறையால் மூடி வைப்பார்கள்.
4யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “சகோதரர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். மேய்ப்பர்கள், “நாங்கள் ஆரானிலிருந்து வருகிறோம்” என்றார்கள்.
5பிறகு யாக்கோபு “உங்களுக்கு லாபா னைத் தெரியுமா? அவர் நாகோரின் மகன்” என்று கேட்டான். மேய்ப்பர்கள் “எங்களுக் குத் தெரியும்” என்று பதில் சொன்னார்கள்.
6“அவர் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான் யாக்கோபு. அதற்கு அவர்கள் “அவர் நன்றாக இருக்கிறார். அதோ பாரும் அவரது மகள் ராகேல் ஆட்டு மந்தையோடு வந்து கொண்டிருக்கிறாள்” என்றார்கள்.
7யாக்கோபு, “சூரியன் அஸ்தமிக்க இன்னும் பொழுது இருக்கிறதே. ஆடுகளை இன்னும் கொஞ்சம் மேய்த்து தண்ணீர் காட்டலாமே! இது ஆடுகளை அடைக்கிற நேரமில்லையே. தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் அவற்றை, வயல்வெளிக்கு அனுப்புங்கள்” என்றான்.
8அதற்கு மேய்ப்பர்கள், “எல்லா ஆடுகளும் சேரு முன்னால் நாங்கள் அவ்வாறு செய்யக் கூடாது. சேர்ந்த பின்னரே கிணற்றின் கல்லை அகற்றுவோம் அப்போது எல்லா ஆடுகளும் தண்ணீர் குடிக்கும்” என்றனர்.
9யாக்கோபு மேய்ப்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போதே ராகேல் தன் தந்தையின் ஆடுகளோடு வந்தாள். (அவளது வேலையே ஆடு மேய்ப்பது தான்.)
10ராகேல் லாபானின் மகள். லாபான் யாக்கோபின் தாயான ரெபெக்காளின் சகோதரன். அவன் ராரேலைக் கண்டதும் கிணற்றின் மேலுள்ள கல்லை நகர்த்தி ஆடுகள் தண்ணீர் குடிக்க உதவினான்.
11பிறகு அவன் ராகேலை முத்தமிட்டு, அழுதான்.
12அவன் அவளிடம், தான் அவளது தந்தையின் குடும்பத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான். தான் ரெபெக்காளின் மகன் என்றான். ராகேல் ஓடிப் போய் தந்தையிடம் கூறினாள்.
13லாபான் தன் சகோதரியின் மகன் யாக்கோபைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அவனைச் சந்திக்க ஓடி வந்தான். அவனை அணைத்து முத்தமிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். யாக்கோபு நடந்தவற்றையெல்லாம் சொன்னான்.
14அப்பொழுது லாபான் “இது ஆச்சரியமானது. நீ எனது சொந்தக் குடும்பத்தில் உள்ளவன்” என்றான். எனவே யாக்கோபு அங்கு ஒரு மாத காலம் தங்கி இருந்தான்.
15ஒரு நாள் லாபான் யாக்கோபிடம், “நீ என்னிடம் தொடர்ந்து சம்பளமில்லாமல் வேலை செய்து கொண்டிருப்பது சரியல்ல. நீ எனது அடிமையல்ல, உறவினன். நான் உனக்கு என்ன சம்பளம் தரட்டும்?” என்று கேட்டான்.
16லாபானுக்கு இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவள் பெயர் லேயாள் இளையவள் பெயர் ராகேல்.
17ராகேல் மிக அழகானவள். லேயாளின் கண்களோ கூச்சம் உடையவை.
18யாக்கோபு ராகேலை நேசித்தான். எனவே அவன் லாபானிடம், “உங்கள் மகள் ராகேலை மணமுடிக்க நீங்கள் அனுமதித்தால் நான் ஏழு ஆண்டுகள் உங்களுக்காக வேலை செய்யத் தயார்” என்றான்.
19அதற்கு லாபான், “அவள் வேறு யாரை யாவது மணந்துகொள்வதைவிட உன்னை மணந்து கொள்வது அவளுக்கு நல்லது” என்றான்.
20அதனால் யாக்கோபு அங்கு ஏழு ஆண்டுகள் தங்கி வேலை பார்த்தான். ஆனால் அவன் ராகேலை நேசித்ததால் ஆண்டுகள் வேகமாக முடிந்துவிட்டன.
21ஏழு ஆண்டுகள் ஆனதும் அவன் லாபானிடம், “ராகேலை எனக்குத் தாருங்கள். நான் அவளை மணமுடிக்க வேண்டும். நான் வேலை செய்ய வேண்டிய காலமும் முடிந்துவிட்டது” என்றான்.
22அதனால் அந்த இடத்திலுள்ள எல்லா ஜனங்களுக்கும் லாபான் ஒரு விருந்து கொடுத்தான்.
23அன்று இரவு அவன் தன் மூத்த மகள் லேயாளை யாக்கோபிடம் அழைத்து வந்தான். இருவரும் பாலின உறவு கொண்டனர்.
24(லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளை லேயாளுக்கு வேலைக்காரியாக ஆக்கி இருந்தான்.)
25காலையில் எழுந்ததும் யாக்கோபு இரவு முழுக்க தன்னோடு இருந்தது லேயாள் என்பதை அறிந்து கொண்டான். லாபானிடம் சென்று “என்னை ஏமாற்றிவிட்டீர்கள். நான் ராகேலை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஏழு ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறேன். ஏன் என்னை ஏமாற்றினீர்கள்?” என்று கேட்டான்.
26லாபான், “மூத்தவள் இருக்கும்போது இளையவளுக்கு மணம் முடிக்க எங்கள் நாட்டில் அனுமதிக்கமாட்டோம்.
27ஆனால் திருமணச் சடங்குகளை ஒரு வாரத்திற்குத் தொடர்ந்தபின் நான் உனக்கு ராகேலையும் திருமணம் செய்து கொள்ளத் தருவேன். ஆனால் நீ இன்னும் ஏழு ஆண்டுகள் எனக்குப் பணியாற்ற வேண்டும்” என்றான்.
28எனவே யாக்கோபு அதற்கு ஒப்புக் கொண்டு ஒரு வாரத்தைக் கழித்தான். லாபான் ராகேலை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
29(தனது வேலைக்காரியான பில்காளை ராகேலுக்கு வேலைக் காரியாகக் கொடுத்தான்.)
30யாக்கோபு ராகேலோடும் பாலின உறவு கொண்டான். அவன் லேயாளைவிட ராகேலைப் பெரிதும் நேசித்ததால் மேலும் ஏழு ஆண்டுகள் அங்கு வேலை செய்தான்.
31யாக்கோபு லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசிப்பதைக் கர்த்தர் கண்டார். எனவே லேயாள் மட்டுமே கருத்தரிக்குமாறு கர்த்தர் செய்தார். ஆனால் ராகேலோ மலடியாய் இருந்தாள்.
32லேயாளுக்கு ஓர் மகன் பிறந்தான். அவள் அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள். “கர்த்தர் நான் படும் தொல்லைகளைக் கண்டார். என் கணவன் என்னை நேசிக்காமல் இருந்தார். இப்போது ஒரு வேளை அவர் என்னை நேசிக்கலாம்” என்று நினைத்தாள்.
33லேயாள் மீண்டும் கர்ப்பமானாள். அவள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்கு சிமியோன் என்று பெயர் வைத்தாள். “நான் நேசிக்கப்படாததைக் கண்டு கர்த்தர் எனக்கு இன்னொரு மகனை கொடுத்தார்” என்று கூறினாள்.
34லேயாள் மீண்டும் கர்ப்பமாகி இன்னொரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள். “இப்பொழுது என் கணவர் என்னை நிச்சயம் நேசிப்பார். நான் அவருக்கு மூன்று மகன்களைக் கொடுத்திருக்கிறேன்” என்றாள்.
35லேயாள் மேலும் ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள். அவள், “நான் இப்போது கர்த்தரைத் துதிப்பேன்” என்றாள். பிறகு குழந்தை பெறுவது நின்றுவிட்டது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.