நெகேமியா புத்தகத்தின் விளக்கவுரை

தலைப்பு

சிறையிருப்பிலிருந்து யூதர்கள் மீண்டும் எருசலேமுக்குத் திரும்பும் சம்பவத்தில், அதிகாரம் 7:1 வரை எஸ்றாவின் பெயர் காணப்படவில்லை என்றாலும், இப்புத்தகம் எஸ்றாவின் (“யெகோவா உதவிசெய்கிறார்”) பெயரையே பெற்றுள்ளது. ஏனென்றால், வேதபாரகரும் ஆசாரியருமாகிய இவரே இதன் ஆசிரியர் என்று யூத மற்றும் கிறிஸ்தவப் பாரம்பரியம் கருதுகிறது.

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி ஆரம்ப நாட்களில் ஒரே புத்தகமாக இருந்த எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களின் ஆசிரியராக எஸ்றாவே இருக்கக்கூடும். எஸ்றா 4:8 – 6:18 மற்றும் 7:12-26 ஆகிய பகுதிகள் அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ளன. எஸ்றா தன்னைப்பற்றிக் கூறும்போது, தான் இதன் ஆசிரியர் என்று எங்கும் நேரடியாகக் கூறாவிட்டாலும், அனைத்து வாதங்களும் அவரே ஆசிரியர் என்பதற்கு உறுதுணையாக நிற்கின்றன. அவர் எருசலேமுக்குத் திரும்பினவுடன் (கி.மு. 458), படர்க்கையில் (Third Person) எழுதுவதை விட்டுவிட்டு, தன்மையில் (First Person) எழுதும் நடையைக் கையாளுகிறார். முதல் பகுதிகளில் அவர் பழைய நினைவுகளை எழுதுவதால் படர்க்கையில் எழுதியிருக்கலாம்.

நாளாகமப் புத்தகங்களை எழுதியதும் எஸ்றாவாகத்தான் இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. பழைய ஏற்பாட்டின் முந்தின புத்தகத்தை எழுதியவரே, 70 வருடச் சிறையிருப்பிற்குப் பின் தம்முடைய ஜனங்களைத் தங்கள் சொந்தத் தேசத்திற்குத் திருப்பிக்கொண்டு வந்து, தேவன் தாம் அருளின வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில் எவ்வளவு உண்மையுள்ளவராக இருந்தார் என எடுத்துக்காட்டியது இயல்பான ஒன்றே. நாளாகமப் புத்தகத்தை நாம் வாசிக்கும்போது, அதில் ஆசாரியத்துவத் தொனி அதிகமாகக் காணப்படுகிறது. எஸ்றா ஆரோன் வம்சத்தில் வந்த ஆசாரியர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் (7:1-5). 2 நாளாகமத்தை நிறைவு செய்யும் வசனங்கள் (36:22,23), எஸ்றா புத்தகத்தின் ஆரம்ப வசனங்களுக்கு (1:1-3a) கிட்டத்தட்ட இணையானதாகவே இருப்பதால், இவ்விரண்டு புத்தகங்களின் ஆசிரியர் எஸ்றாதான் என்பதை இது உறுதிசெய்கின்றது.

எஸ்றா ஆசிரியராக இருந்தபடியால் எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களில், விசேஷமாக எஸ்றா புத்தகத்தில் காணப்படும் எண்ணற்ற ஆவணங்களை அணுகக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தார். பெர்சியப் பேரரசின் அரச காப்பகத்தை அணுகும் அனுமதி ஒருசிலருக்கே இருந்தது; அதில் எஸ்றா விதிவிலக்காக இருந்தார் (எஸ்றா 1:2-4; 4:9-22; 5:7-17; 6:3-12).

வேதபாரகராக எஸ்றாவின் பங்களிப்பு குறித்து 7:10-ல் இவ்வாறாகச் சொல்லப்பட்டுள்ளது: “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்”. அவர் பலசாலியான, தெய்வீக மனிதர்; நெகேமியாவின் காலத்தில் வாழ்ந்தவர் (நெகேமியா 8:1-9; 12:36). பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களின் வரிசையை (Canon) முதன்முதலில் ஏற்றுக்கொண்ட, 'பெரிய ஜெப ஆலயத்தின்' (Great Synagogue) நிறுவனர் இவரே எனப் பாரம்பரியம் கூறுகிறது.

பெர்சியாவிலிருந்து நாடு திரும்பிய இரண்டாவது நிகழ்விற்குத் தலைமையேற்று நடத்தியவர் எஸ்றா (கி.மு. 458). ஆக, இந்தப் புத்தகத்தின் முழுப் பகுதியும் அடுத்து வந்த அநேக பத்தாண்டுகளில் (கி.மு. 457-444) எழுதப்பட்டிருக்கலாம்.

பின்னணி மற்றும் அமைப்பு தேவன் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, வழிநடத்திக் கொண்டுவந்தார் (கி.மு. 1445). நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு, எஸ்றாவின் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன், “அவர்கள் தேவனுடன் கொண்டிருக்கும் உடன்படிக்கையை மீறும்போது, தேவன் மீண்டும் அந்நிய தேசத்தினர் இஸ்ரவேலரை அடிமைகளாக்கிச் செல்ல அனுமதித்துவிடுவார்” எனத் தேவன் தம்முடைய ஜனங்களிடத்தில் எச்சரித்திருந்தார் (எரேமியா 2:14-25). தேவன் தீர்க்கதரிசிகளின் வழியாக மீண்டும் மீண்டும் எச்சரிக்கை தந்திருந்தபோதிலும், இஸ்ரவேல் மற்றும் யூதா மக்கள் தங்கள் கர்த்தரை நிராகரிப்பதையே தெரிந்துகொண்டனர். அந்நிய தேவர்களை வணங்குவதிலும், விக்கிரகாராதனையுடன் தொடர்புடைய அருவருப்பான செயல்களிலும் ஈடுபட்டனர் (2 ராஜாக்கள் 17:7-18; எரேமியா 2:7-13).

தேவன் தாம் சொல்லியிருந்தபடியே, வழிதவறிய இஸ்ரவேல் மற்றும் யூதா தேசத்தினர் திரும்பும்படி அசீரியர்களையும் பாபிலோனியர்களையும் வரவழைத்து அவர்களைச் சிட்சித்தார். கி.மு. 722-ல் வடதேசத்துப் பத்துக் கோத்திரத்தாரை நாடுகடத்தி, அவர்களைத் தேசமெங்கும் சிதறடித்தனர் (2 ராஜாக்கள் 17:24-41; ஏசாயா 7:8). பல நூற்றாண்டுகளுக்குப் பின், கி.மு. 605-586 காலகட்டத்தில் பாபிலோனியர்களால் துரத்தப்படச் செய்து, எருசலேமின் மக்கள்தொகையைக் குறைத்தார். யூதா தொடர்ந்து உடன்படிக்கையை மீறி உண்மையில்லாது இருந்தபடியால், தேவன் 70 வருடச் சிறையிருப்புக்கு அனுமதித்து அவர்களைச் சிட்சித்தார் (எரேமியா 25:11). பின்னர் எஸ்றா மற்றும் நெகேமியா ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி அவர்கள் எருசலேமுக்குத் திரும்பினார்கள். பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ், பாபிலோனியரை கி.மு. 539-ல் தோற்கடித்தான்.

கோரேஸ் ராஜா, ”யூத ஜனங்கள் எருசலேமுக்குப் போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்” என்று பிறப்பித்த ஆணையுடன் எஸ்றா புத்தகம் தொடங்குகிறது. யூதர்களின் பண்டிகைகளும் பலியிடுதலும் மீண்டும் ஆசரிக்கப்படவும், இரண்டாம் தேவாலயம் கட்டப்படுதல் (கி.மு. 536-ல் ஆரம்பித்து கி.மு. 516-ல் முடிந்தது) உள்ளிட்ட பணிகள் திரும்ப நடைபெறவும் ஆரம்பித்தன.

இஸ்ரவேலிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தப்படுதல் மூன்று கட்டங்களாக நடைபெற்றதால் (கி.மு. 605, கி.மு. 597 மற்றும் கி.மு. 586), சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின் எருசலேமுக்குத் திரும்புதலும் மூன்று கட்டங்களாக நிறைவேறின. கி.மு. 538-ல் செருபாபேல் தலைமையில் முதற் குழு திரும்பியது. அவரைத் தொடர்ந்து எஸ்றா, இரண்டாவது எருசலேமுக்குத் திரும்பி வருதலை கி.மு. 458-ல் வழிநடத்தினார். அதற்கு 13 வருடங்களுக்குப் பின் நெகேமியா கி.மு. 445-ல் மூன்றாம் குழுவை வழிநடத்தி வந்தார். எந்த எதிர்ப்பும் இல்லாத அரசியல் தன்னாட்சி முழுமையாகத் திரும்ப ஏற்படவில்லை. செருபாபேலின் நாட்களில் கி.மு. 520 மற்றும் அதற்கு அடுத்த ஆண்டுகளில் தீர்க்கதரிசிகளாகிய ஆகாயும் சகரியாவும் பிரசங்கித்து வந்தனர்.

வரலாற்று மற்றும் இறையியல் கருப்பொருட்கள் பாபிலோனியச் சிறையிருப்பிலிருந்து யூதர்கள் திரும்பி வந்தது, எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் தன் இறையாட்சியினால் விடுவித்து எப்படி அழைத்து வந்தாரோ, அதேபோல இருப்பதால், இது 'இரண்டாம் யாத்திராகமம்' போன்று காட்சியளிக்கிறது. அசல் யாத்திராகமத்தில் நிறைவேறிய செயல்பாடுகளை ஒத்த செயல்கள் பாபிலோனிலிருந்து திரும்பும்போதும் நிகழ்ந்தன:

  1. தேவாலயமும் பட்டணத்தின் மதில்சுவர்களும் திரும்பக் கட்டப்பட்டன.

  2. நியாயப்பிரமாணம் திரும்ப நிலைநாட்டப்பட்டது – இச்செயல், செருபாபேல், எஸ்றா மற்றும் நெகேமியா ஆகியோரை ஒன்றுசேரப் பார்க்கும்போது, பார்ப்பதற்கு இரண்டாவது மோசே போல் தோற்றமளித்தது.

  3. உள்ளூர் சத்துருக்களின் சவால்.

  4. யூதர்கள் அல்லாதவர்களுடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபடச் சோதிக்கப்பட்டு, முடிவில் விக்கிரக ஆராதனையில் முடிவடைதல். அசலான யாத்திராகம நிகழ்விலும், பாபிலோனிலிருந்து நாடு திரும்பியபோதும் ஏற்பட்ட இணையொத்த நிகழ்வு யாதெனில், திரும்பி வந்தவர்களுக்குத் தேவன் திரும்ப ஒரு புதிய ஆரம்பத்தைத் தந்திருக்கிறார் என்ற உணர்வினை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்பதே.

தேசத்திற்குத் திரும்பி வந்தபோது, எஸ்றா வேதபாரகராக இருந்தபடியால் பெர்சியாவில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த நிர்வாக ஆவணங்கள் அவரை ஈர்த்தன. அரச நிர்வாக ஆவணங்களும், “அவனுடைய தேவனாகிய கர்த்தரின் கரம் அவன்மேல் / என்மேல் இருந்ததினால்” (7:6, 28) என்ற வார்த்தைகளும் ஒன்றுசேரும்போது மிக வல்லமையான செய்தியை எடுத்துச் செல்கின்றன. கட்டளைகள், பிரகடனங்கள், நிருபங்கள், பட்டியல்கள், வம்ச வரலாறுகள், நினைவுக் குறிப்புகள் எனப் பெர்சிய அரசாங்கத்தினால் எழுதப்பட்ட ஆவணங்கள், இஸ்ரவேலரை மறுசீரமைப்பதில் இறையாட்சி செய்யும் தேவனுடைய கரம் அவர்களுக்காகச் செயல்பட்டது என்பதற்குச் சான்றளிக்கின்றன. அந்நிய தேவர்களைச் சேவிக்கும் ராஜா மற்றும் அவன் வழிவந்தவர்களைப் பயன்படுத்தி, ஓர் இசைப்பண் சுருதி சேர்வதுபோல் அனைத்து நிகழ்வுகளையும் காரணத்துடன் ஒன்றுசேர்த்து, கடந்தகாலச் சோகமான சூழ்நிலையை (சிறைபிடிப்பை) மாற்றி, யூதாவிற்கு ஓர் எதிர்கால நம்பிக்கையை (சொந்தத் தேசத்திற்குத் திரும்புதல்) தேவன் தந்தார். இந்த உலகத்தின் எந்தவொரு ராஜாவிற்கும் மேலோங்கி நிற்கும் தேவனுடைய நிர்வாகம், ஆகையால் “ஒட்டுமொத்தமாக, இஸ்ரவேலருக்குத் தேவனுடைய உடன்படிக்கையின் இரக்கம் தொடர்ந்து கிடைக்கப்பெறுகிறது” என்ற செய்தியே எஸ்றா புத்தகத்தின் மையமாகும்.

எஸ்றா புத்தகத்தில் காணப்படும் மற்றொரு கருப்பொருள், உள்ளூரில் இருந்த (அசீரியா தேசத்திலிருந்து வந்து குடியமர்த்தப்பட்ட) சமாரியாவில் குடியிருந்தோரின் எதிர்ப்பாகும் (எஸ்றா 4:2; ஒப்பிடுக: யோவான் 4:4-42). ஆலயக் கட்டுமானப் பணிகளைத் தந்திரமாகத் தகர்க்க, இஸ்ரவேலரின் எதிரிகள் தேவாலயத்தைத் திரும்பக் கட்டும் பணியில் தங்களையும் சேர்த்துக்கொள்ளக் கோரினர் (4:1, 2). அவர்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டபோது, அவர்கள் யூதர்களுக்கு விரோதமாக ஆலோசனைக்காரருக்குக் கைக்கூலி கொடுத்தார்கள் (4:4, 5). ஆனால் கர்த்தர் தாமே, ஆகாய் மற்றும் சகரியா இருவரின் பிரசங்கத்தினால் ஜனங்களின் ஆவியை அனல்மூட்டி எழுப்பிவிட்டார். அவர்கள் தலைவர்களை நோக்கி, "பெலன்கொண்டு வேலையை நடத்துங்கள்; நான் உங்களுடன் இருக்கிறேன்" என்ற வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி ஆலயத்தைத் திரும்பக் கட்டச் செய்தார்கள் (ஆகாய் 2:4; எஸ்றா 4:24 – 5:2). தேவாலயக் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கி, வேலை நிறைவுற்றது; ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மீண்டும் தேவனுடைய சேவைக்கென்று பயன்பட்டது (கி.மு. 516).

வியாக்கியானச் சவால்கள் (Interpretation Challenges) முதலாவதாக, சொந்தத் தேசத்திற்குத் திரும்பி வந்த பின் எஸ்றாவினால் எழுதப்பட்ட 1 மற்றும் 2 நாளாகமப் புத்தகங்கள், தேசம் திரும்பிய பின் எழும்பிய தீர்க்கதரிசிகளான ஆகாய், சகரியா மற்றும் மல்கியாவுடன் எப்படித் தொடர்புபடுகின்றன? நாளாகமத்தின் இரண்டு புத்தகங்களும் எஸ்றாவினால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தாவீதின் அரசாட்சியை, ஆரோனின் ஆசாரியத்துவத்தை நினைவுக்குக் கொண்டுவந்து, தேவாலய ஆராதனையைப் பாராட்ட எழுதப்பட்டவை. தேவாலயம் திரும்பக் கட்டப்பட்ட எஸ்றா (அதிகாரங்கள் 4-6) காலகட்டத்தில் ஆகாய், சகரியா இருவரும் தீர்க்கதரிசனம் உரைத்து வந்தனர். நெகேமியா பெர்சியா தேசத்திற்குச் சென்றிருந்தபோது மல்கியா எழுதினார் (நெகேமியா 13:6).

இரண்டாவதாக, இந்தப் புத்தகம் என்ன நோக்கத்தை நிறைவேற்றுகிறது? பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டுச் சென்று பின் அங்கிருந்து எருசலேம் திரும்பும் குறிப்பில் மூன்றில் இரண்டு பங்கினை எஸ்றா புத்தகம் பேசுகிறது. செருபாபேல் வழிநடத்துதலில் (கி.மு. 538) வந்த முதல் திரும்புதல் (அதிகாரங்கள் 1-6), எஸ்றாவின் தலைமையில் இரண்டாவது திரும்புதல் (கி.மு. 458) ஆகியவை நிறைவேறின (அதிகாரங்கள் 7-10). எஸ்றா தனது வம்சத்தின் மூலத்தை எலியேசர், பினெகாஸ் மற்றும் சாதோக் (எஸ்றா 7:1-5) வரை கண்டறிந்து, ஆரோன் முறை ஆசாரியத்துவத்தின் முக்கியத்துவத்தைத் திரும்பவும் நிலைநாட்டுகின்றார். இரண்டாம் தேவாலயம் கட்டப்படுவதைக் குறித்து எழுதியுள்ளார் (அதிகாரங்கள் 3-6). அந்நிய தேசத்துப் பெண்களுடன் கலப்புமணத்தில் ஈடுபட்டதினால் வந்த பாவத்தை அவர் எப்படிக் கையாண்டார் என்பதைக் குறித்து அதிகாரம் 9, 10-ல் பேசுகிறார். மிக முக்கியமாக, தேவனின் ஆளுகை செய்யும் கரம் எப்படியாக ராஜாக்களைச் செயல்பட வைத்து, எதிர்வந்த அத்தனை எதிர்ப்புகளையும் மேற்கொண்டு, ஆபிரகாமின் வித்தான இஸ்ரவேலை, ஆபிரகாம், தாவீது மற்றும் எரேமியாவுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் மீண்டும் நிலைநாட்டுகிறது என்பதை விளக்குகிறது.

மூன்றாவதாக, கோரேஸ் அரசாண்ட காலத்தில் தேவாலயம் கட்டப்பட்டது. அகாஸ்வேரு (4:6) மற்றும் அர்தசஷ்டா (4:7-23) ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால், அவர்களின் ஆட்சிக்காலத்தில்கூட தேவாலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்ற முடிவிற்கும் ஒருவர் வரலாம். ஆனால், அப்படி முடிவு செய்வது வரலாற்றை மீறுவதாகும். எஸ்றா அகாஸ்வேரு மற்றும் அர்தசஷ்டாவின் கட்டிட சாதனைகளைக் குறித்து இங்கு பேசவில்லை. மாறாக, தேவாலயம் கட்டப்பட்ட பிறகும் அவர்களின் எதிர்ப்பு எஸ்றாவின் காலம் வரைக்கும் கூட நீடித்தது என்பதைக் குறித்து எழுதுகிறார். எஸ்றா 4:1-5 மற்றும் 4:24–5:2 பகுதிகள் செருபாபேல் காலத்தில் தேவாலயம் மறுபடியும் கட்டப்பட்டதைக் குறித்துப் பேசுகின்றன; இடைப்பட்ட 4:6-23 பகுதிகள், எஸ்றா மற்றும் நெகேமியாவின் காலத்தில் வரலாற்றில் ஏற்பட்ட எதிர்ப்பை மீண்டும் தொகுத்துக் காட்டுகிறது என்பதை இதிலிருந்து வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம்.

நான்காவதாக, எஸ்றாவின் காலவரிசையில் எஸ்தர் எந்த இடத்தில் பொருந்துகிறாள் என்பதை விளக்கம் தருபவர்தான் பொருத்திக்கொள்ள வேண்டும். கவனமாகச் சோதித்துப் பார்க்கும்போது, அதிகாரங்கள் 6 மற்றும் 7-க்கும் இடையில் இச்சம்பவம் நடந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஐந்தாவதாக, எஸ்றா 10-ல் நாம் காணும் விவாகரத்து, "தேவன் விவாகரத்தை வெறுக்கிறார்" (மல்கியா 2:16) என்ற உண்மையுடன் எப்படிச் சம்பந்தப்பட்டுள்ளது? எஸ்றா எந்தவொரு புதிய விதிமுறையையும் நிர்ணயிக்கவில்லை; ஆனால் வரலாற்றில் நடைபெற்ற ஒரு விசேஷ நிகழ்ச்சியை மையமாக வைத்து இதைக் கையாளுகிறார். ஒரு பெரிய தவறினைத் தவிர்ப்பதற்காகச் சிறிய தவறைச் செய்வதைத் தெரிந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற நியதியின்படி இது தீர்மானிக்கப்பட்டது. யூதர்குலம் அந்நியப் பெண்களுடன் கலப்புமணத்தில் ஈடுபட்டதால், தேசமும் தாவீதின் வம்சத்தில் மேசியா தோன்றுவார் என்ற வம்சவழியும் புறஜாதியாரினால் கலப்படமாகி, வம்சவழி முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டனர். இப்படியாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைப்பது, தேவனின் இரக்கத்தைப் பெரிதுபடுத்துகிறது. ஏனென்றால், இதற்கு மாற்றுத் தீர்வு என்று பார்ப்போமானால், இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் (கணவன், மனைவிகள் மற்றும் குழந்தைகள்) யாத்திராகம காலத்தில் சித்தீம் என்ற இடத்தில் எப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அப்படி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் (எண்ணாகமம் 25:1-9). அந்தப் பயங்கரமான தண்டனை இதன் மூலம் தவிர்க்கப்பட்டது.

சுருக்கம்

I. சொந்தத் தேசத்திற்கு - செருபாபேலின் தலைமையில் முதலாம் திரும்புதல் (1:1 – 6:22)

  • அ. திரும்புவதற்கு கோரேஸ் ஆணையிடல் (1:1-4)

  • ஆ. தேவாலயத்தைத் திரும்பக் கட்டுவதற்குப் பணக்குவியல் (1:5-11)

  • இ. திரும்பினவர்கள் (2:1-70)

  • ஈ. இரண்டாம் தேவாலயத்தைக் கட்டுதல் (3:1 – 6:22)

    1. கட்டிடவேலை ஆரம்பித்தல் (3:1 – 3:13)

    2. எதிர்ப்பு எழும்புதல் (4:1-5)

    3. எதிர்கால எதிர்ப்பினைக் குறித்து விரிவான விளக்கம் (4:6-23)

    4. கட்டிட வேலை புதுப்பிக்கப்படல் (4:24 – 5:2)

    5. எதிர்ப்பு புதுப்பிக்கப்படுதல் (5:3 – 6:12)

    6. தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்படுதல் (6:13-22)

II. சொந்தத் தேசத்திற்கு - எஸ்றாவின் தலைமையில் வரும் இரண்டாம் திரும்புதல் (7:1 – 10:44)

  • அ. எஸ்றாவின் வருகை (7:1 – 8:36)

  • ஆ. எஸ்றா எழுப்புதலுக்குத் தலைமையேற்று நடத்துதல் (9:1 – 10:44)

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.