யோபு

தலைப்பு: யோபு (Job)

பரிசுத்த வேதாகமத்தின் ஏனைய புத்தகங்களைப் போலவே, சொல்லப்படும் சம்பவத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரே இப்புத்தகத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது. எபிரேய மொழியில் “துன்புறுத்தப்பட்ட” என்ற வார்த்தையிலிருந்து “துன்புறுத்தப்பட்டவன்” என்ற அர்த்தத்தையோ, அல்லது அரபு மொழிச் சொல்லிலிருந்து “மனம்திரும்பியவன்” (To repent) என்ற அர்த்தத்தையோ ‘யோபு’ என்ற பெயர் பெற்றிருக்கலாம். யோபுவின் வாழ்க்கையின் ஒரு முக்கிய காலகட்டத்தை ஆசிரியர் இதில் விவரிக்கிறார். இதில் அவர் சோதிக்கப்படுவதையும், அதன் மூலம் தேவனுடைய குணாதிசயம் வெளிப்படுவதையும் காண்கிறோம். புதிய ஏற்பாட்டில் இரண்டு முறை நேரடியாகக் குறிப்பிடப்படுவதிலிருந்தும் (ரோமர் 11:35; 1 கொரி. 3:19), எசேக்கியேல் 14:14, 20 மற்றும் யாக்கோபு 5:11 ஆகிய வசனங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தும், யோபு என்பவர் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த ஒரு வரலாற்று நபர் என்பது உறுதியாகிறது.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் காலம்

இப்புத்தகம் அதன் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடவில்லை. யோபுவிற்குப் பரலோகத்தில் நடந்த உரையாடல்கள் மற்றும் சவால்கள் குறித்த அறியாமை இருந்ததால், யோபுவே இதை முழுமையாக எழுதியிருக்க முடியாது. யூத தல்மூத் (Talmud) பாரம்பரியம், மோசே மீதியான் தேசத்தில் 40 வருடங்கள் வசித்தபோது, உஸ் தேசத்திற்குச் சமீபமாக இருந்ததால், இச்சம்பவங்கள் குறித்த பதிவுகளைப் பெற்றிருக்கலாம் என்று கூறுகிறது. சாலொமோன் ஞானப் புத்தகங்களை (சங்கீதம் 72, 127 தவிர மற்ற நீதிமொழிகள், பிரசங்கி போன்றவை) எழுதியுள்ளதால், அவரே இதன் ஆசிரியராக இருக்கவும் வாய்ப்புண்டு. யோபு வாழ்ந்த காலத்திற்குப் பல வருடங்களுக்குப் பின் சாலொமோன் வாழ்ந்திருந்தாலும், ஆதாம் ஏவாள் குறித்த சம்பவங்களை மோசே தேவ ஆவியின் ஏவுதலால் எழுதியது போல, சாலொமோனும் எழுதியிருக்கக்கூடும். எலிகூ, ஏசாயா, எசேக்கியா, எரேமியா மற்றும் எஸ்றா போன்றவர்களும் இப்புத்தகத்தை எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது, ஆனால் இவற்றிற்குத் தெளிவான ஆதாரங்கள் இல்லை.

இப்புத்தகம் எழுதப்பட்ட காலம், அதில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் நடந்த காலத்திற்கு வெகு நாட்களுக்குப் பின் இருக்கலாம். கீழ்க்காணும் காரணங்களினால் இந்த முடிவு எட்டப்படுகிறது:

  1. யோபுவின் வயது (42:16): யோபு இன்னும் 140 வருடங்கள் (மொத்தம் சுமார் 200 வருடங்கள்) வாழ்ந்தது, முற்பிதாக்களின் காலத்தைப் பிரதிபலிக்கிறது. ஆபிரகாம் 175 வருடங்கள் வாழ்ந்தார் (ஆதி 25:7).

  2. சமூக அமைப்பு: முற்பிதாக்களின் காலத்தில் காணப்பட்டதைப் போன்ற சமூக அமைப்பையே இங்கும் காண்கிறோம்.

  3. கல்தேயர்: யோபுவின் வேலைக்காரர்களைக் கல்தேயர் மூன்று 'பவுஞ்சாக' (படையாக) வந்து அழித்துப் போட்டனர் (1:17). அக்காலத்தில் கல்தேயர் நாடோடிகளாக இருந்தனர், இன்னும் பட்டணவாசிகளாக நிலைபெறவில்லை.

  4. செல்வத்தின் அளவீடு: யோபுவின் செல்வம் பொன், வெள்ளியினால் அல்ல, அவரிடம் இருந்த கால்நடைகளின் எண்ணிக்கையினாலேயே அளவிடப்பட்டது (1:3; 42:12).

  5. குடும்ப ஆசாரியத்துவம்: யோபு தன் குடும்பத்திற்குத் தானே ஆசாரியனாகச் செயல்பட்டு பலி செலுத்தினார் (1:4, 5). இது லேவியராகம சட்டங்களுக்கு முந்தைய நடைமுறை.

  6. நியாயப்பிரமாணத்தின் மௌனம்: ஆபிரகாமுடனான உடன்படிக்கை, யாத்திராகமம் மற்றும் மோசேயின் நியாயப்பிரமாணங்கள் குறித்து இப்புத்தகம் மௌனமாக இருக்கிறது.

யோபு காவியத்தில் காணப்படும் சம்பவங்கள் முற்பிதாக்களின் வாழ்வில் நடந்தவை போல் தோற்றமளிக்கின்றன. மறுபுறம், யோபு ஆதாமைப் பற்றியும் (31:33), நோவா காலத்து வெள்ளத்தைக் குறித்தும் (22:16) அறிந்திருந்தார். கலாச்சார மற்றும் வரலாற்று அம்சங்களை வைத்துப் பார்க்கும்போது, பாபேல் கோபுர சம்பவத்திற்குப் (ஆதி. 11:1-9) பின்னரும், ஆபிரகாமுக்கு (ஆதி. 11:27) முன்னரும், அல்லது ஆபிரகாமின் சமகாலத்தவராகவும் யோபு வாழ்ந்திருக்கலாம்.

பின்னணி மற்றும் அமைப்பு

பரலோகத்தில் நடைபெறும் சம்பவங்களும், அதனைத் தொடர்ந்து யோபுவின் வாழ்க்கையில் வந்த துன்பங்களும், அனைத்து காலங்களிலும் வாழும் விசுவாசிகளின் விசுவாசத்திற்கு முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. யோபு தேவனை ஏன் உத்தமமாகச் சேவித்தான்? யோபு, நோவா மற்றும் தானியேல் ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசப்படுகிறார்; அவருடைய நீதி பறைசாற்றப்படுகிறது (எசே. 14:14-20). "யோபுவின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்" என யாக்கோபு 5:11-ல் கூறப்படுகிறது.

யோபுவின் துன்பத்தைப் பார்த்துப் பல கேள்விகள் எழுகின்றன. உதாரணமாக, "நீதிமான்கள் ஏன் உபத்திரவப்படுகிறார்கள்?" இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் முக்கியமானதாக இருந்தபோதிலும், யோபுவின் சரித்திரம் நேரடியான பதிலை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல. யோபுவிற்கோ அல்லது அவனது சிநேகிதர்களுக்கோ அவனது துன்பங்களுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை.

நீதியினிமித்தம் பாடுபட்ட யோபுவிற்கு,த் தனது வேதனைகளுக்கான காரணம் தெய்வீக நீதிமன்றத்தில் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் நடந்த வாதங்கள் என்பது தெரியாது. சர்வலோகத்தின் தேவனைப் பின்நாளில் எதிர்கொண்ட யோபு, தன் வாயின் மீது கை வைத்து ஒன்றும் பேசாமல் அமைதியானார். யோபுவின் அமைதி, அவர் பட்ட பாடுகளையோ வேதனைகளையோ அற்பமானவைகளாக்கவில்லை. மாறாக, பாடுகளின் மத்தியிலும் தேவனின் நோக்கங்களில் நம்பிக்கையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஏனெனில், பாடுகளும் மனுஷனுடைய ஏனைய அனுபவங்களைப் போலவே, தேவனின் பூரண ஞானத்தினால் வழிநடத்தப்படுகின்றன. முடிவில், ஒருவரது பாடுகளுக்கான காரணம் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், சர்வவல்ல தேவனின் இறையாண்மையின் (Sovereignty) மீது முழுமையான நம்பிக்கையை வைக்க வேண்டும் என்பதே இதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம்.

இறையியல் கருப்பொருட்கள்

இரண்டு மிகப்பெரிய கருப்பொருள்களும், அநேக சிறிய கருப்பொருள்களும் இப்புத்தகத்தின் அறிமுக அதிகாரங்கள் (1, 2), முடிவுரை (42:7-17) மற்றும் யோபுவின் பாடுகள் குறித்து இடையில் காணப்படும் கவிதை நடை அதிகாரங்களில் (3:1 - 42:6) காணப்படுகின்றன.

பரலோகத்தில் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் நடைபெறும் வாதம், எப்படியாக யோபுவும் அவனது சிநேகிதர்களும் பூலோகத்தில் நடத்திய மூன்று சுற்று வாதங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே முதல் கருப்பொருளை அறிவதற்கான திறவுகோல். விசுவாசிகளுடைய உத்தம குணாதிசயத்தை தேவன் சாத்தானுக்கும், அனைத்துப் பிசாசுகளுக்கும், தேவதூதர்களுக்கும் மற்றும் மனுஷருக்கும் நிரூபிக்கும்படி விரும்பினார்.

சாத்தானின் குற்றச்சாட்டு இதுதான்: "யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? அவனது உத்தமத்தை நீர் சோதித்துப் பார்த்ததில்லை; உம்மிடத்திலிருந்து அவன் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதினாலேயே நீதிமானாக நடந்து கொள்கிறான்." சாத்தானின் கூற்றுப்படி, யோபு சுத்தமான நோக்கத்துடன் தேவனைப் பின்பற்றவில்லை, தேவனுக்கும் அவனுக்கும் இடையில் காணப்படும் உறவு வெறும் வியாபார ரீதியானது என்பதே. சாத்தான் எப்படி ஒரு கூட்டத் தேவதூதர்களைக் கலகம் செய்யும்படி தன் பக்கமாகத் திருப்பிக் கொண்டானோ, அப்படியே தேவனுக்கு விரோதமாக யோபுவையும் திருப்பிவிட முடியும் என்பது சாத்தானின் எண்ணம்.

யோபுவிற்குப் பாடுகளைக் கொண்டுவந்தால், "தேவன் தன்னைப் பாதுகாக்கிறவர்" என்ற அவனது விசுவாசத்தை நொறுக்கிப் போட்டுவிடலாம் எனச் சாத்தான் கணக்கிட்டான். தேவன் சாத்தானைச் சோதிக்க அனுமதித்தார், ஆனால் அதில் சாத்தான் தோற்றுப்போனான். தேவனிடத்தில் கொண்டிருக்கும் விசுவாசம் மெய்யானதாக இருக்குமானால், அதனை எதனாலும் அசைக்க முடியாது. யோபுவின் மனைவி கூட, "இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்" எனக் கூறினாள் (2:9). ஆனால் யோபு அதை மறுதலித்துவிட்டான். இதனையே சாத்தான் பேதுருவினிடத்திலும் செய்யும்படிப் பிரயாசப்பட்டான் (லூக்கா 22:31-34), ஆனால் பேதுருவின் விசுவாசத்தைத் தகர்ப்பதிலும் தோற்றுப்போனான் (யோவான் 21:15-19). ஒரு விசுவாசி எவ்வளவு பாடுகளை அனுபவித்தாலும், அல்லது அப்பாடுகள் புரிந்துகொள்ள முடியாததாகவும் தகுதியற்றதாகவும் இருந்தாலும், மெய்யான விசுவாசத்தை அழித்துவிட முடியாது என்பதைத் தேவன் முடிவில் சாத்தானுக்கு நிரூபித்தார்.

இரண்டாவது கருப்பொருள், தேவன் தன் குணாதிசயத்தை மனுஷர்களுக்கு வெளிப்படுத்துவதாகும். யோபு சோதிக்கப்பட்டதால், தேவன் யோபுவினிடத்தில் காட்டிய மனதுருக்கம் மற்றும் இரக்கம் குறைவுபட்டது என்று சொல்ல முடியுமா? இல்லை. யாக்கோபு 5:11-ல், "கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுள்ளவராயிருக்கிறாரே" என எழுதுகிறார். யோபு 42:10-ல் தேவன் யோபுவின் முன்னிலைமையைவிடப் பின்னிலைமையை ஆசீர்வதித்தார். யோபுவே, "தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?" (2:10) எனக் கூறுகிறார்.

ஆளுகை செய்யும் மற்றும் பூரண ஞானமுள்ள தேவனுக்கு, பக்தி நிறைந்த ஆராதனை ஏறெடுக்கும் இதயத்துடனும் தாழ்மையுடனும் (42:5, 6) யோபு தன் துயரங்களைச் சந்திக்கிறார். சாத்தானுடன் தனக்கு ஏற்பட்ட எதிர்ப்பிலிருந்து யோபு இதனைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தேவன் விரும்பினார்.

குற்றமற்றவர்களும் ஏன் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்ற புரியாத இரகசியம் வெளிப்படுவதே இப்புத்தகத்தின் மிகப்பெரிய சத்தியம். தேவன் தம்முடைய பிள்ளைகள் துக்கத்திலும் வேதனையிலும் நடக்கும்படிச் சில வேளைகளில் அனுமதிக்கிறார்:

  • அவர்களது பாவத்தினால் இருக்கலாம் (எண். 12:10-12),

  • அவர்களைச் சிட்சிக்கும்படி இருக்கலாம் (எபி. 12:5-12),

  • அவர்களைப் பெலப்படுத்த இருக்கலாம் (2 கொரி. 12:7-10; 1 பேதுரு 5:10),

  • அவரது ஆறுதல் மற்றும் கிருபையை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கவும் இருக்கலாம் (2 கொரி. 1:3-7).

ஆனால், பரிசுத்தவான்களின் பாடுகளுக்குப் பின் மறைந்துள்ள அடிப்படைக் காரணத்தை அவர்களால் முழுமையாக அறியமுடியாததற்குக் காரணம், அது பரலோக நோக்கத்தைக் கொண்டது. யோபுவும் அவனது சிநேகிதர்களும் பாடுகளுக்கான காரணங்களையும், அதின் தீர்வுகளையும் கண்டறிய ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தெரிந்த வரையறுக்கப்பட்ட இறையியல் கருத்துக்களைக் கொண்டு தவறான முடிவுகளுக்கே வருகின்றனர். இறுதியில், தேவன் அவர்களைக் கண்டிப்பதைப் பார்க்கிறோம் (42:7).

இந்தக் காவியத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் சத்தியங்கள்:

  1. பூலோகத்தில் விசுவாசிகளின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் சில விஷயங்கள், பரலோகத்தில் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே நடக்கும் விவாதங்களின் விளைவாக இருக்கலாம்.

  2. நமக்கு நேரிடும் பிரச்சனைகளுக்கு நாமே விளக்கம் அளிக்க முயற்சிப்பது எப்போதும் பயனளிக்காது.

  3. தேவனுடைய ஜனங்களும் பாடுகளை அனுபவிக்கின்றனர். நல்ல மனிதர்களுக்குக் கெட்ட விஷயங்கள் சம்பவிக்கலாம். எனவே, பாடுகளைக் கொண்டு ஒருவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையை எடைபோட முடியாது.

  4. தேவன் தூரத்தில் இருப்பது போல் தோன்றினாலும், விசுவாசத்தில் உறுதியாக இருப்பது உன்னத பண்பாகும்.

  5. விசுவாசி பாடுகளின் மத்தியில் தேவனை விட்டு விலகாமல், அவரிடம் இன்னும் நெருங்கிச் சேர வேண்டும்.

  6. பாடுகள் கடினமானதாக இருந்தாலும், நீதிமானுக்கு அவை இறுதியில் முடிவுக்கு வரும்; தேவன் பரிபூரணமாக ஆசீர்வதிப்பார்.

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

யோபுவின் பாடுகளுக்கான காரணம் வாசகர்களாகிய நமக்கு (தேவன் சாத்தானுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்பது) தெரிந்திருந்த போதிலும், யோபுவிற்கு இறுதிவரை இது வெளிப்படுத்தப்படவில்லை. இது யோபுவின் புரிந்துகொள்ளும் திறனை மிஞ்சியதாக இருந்தது. சர்வ ஞானமும், சர்வ வல்லமையும் நிறைந்த சிருஷ்டிகரைக் கேள்வி கேட்க அல்லது குற்றம் சொல்லப் படைப்புகளுக்கு உரிமை இல்லை.

யோபுவின் சிநேகிதர்கள், "யோபு பாவம் செய்யவில்லையா?" என்ற கேள்வியை எழுப்பினார்கள். யோபு தான் பாவம் செய்ததாகச் சில இடங்களில் ஒப்புக்கொண்டாலும் (7:21; 13:26), தான் படும் பாடுகளின் அளவுக்குத் தான் பாவம் செய்யவில்லை என்று வாதிட்டார். இறுதியில், தேவன் யோபுவை நிரபராதி என்று கூறி, "என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை" (42:7) என்று சிநேகிதர்களைக் கண்டித்தார்.

தேவன் யோபுவிற்குத் தனது செயல்களுக்கான காரணத்தை விளக்கவில்லை; மாறாக, சிருஷ்டிகரின் மீது ஆழமான நம்பிக்கை வைக்கும்படி அழைப்பு விடுத்தார். பாவத்தால் குழம்பிப்போயிருக்கும் உலகினை, தேவன் ஞானம் மற்றும் இரக்கத்தினால் வழிநடத்தி, வல்லமையுடன் ஆளுகை செய்கிறார் என்பதை இதிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

யோபு புத்தகத்தின் சுருக்கம் (Outline)

I. ஆரம்பம்: சோதனை (1:1 - 2:13) அ. யோபுவின் அறிமுகம் (1:1-5) ஆ. சாத்தானுடன் உண்டான தெய்வீக விவாதங்கள் (1:6 - 2:10) இ. சிநேகிதர்களின் வருகை (2:11-13)

II. விவாதங்கள் (3:1 – 37:24)

அ. முதல் சுற்று (3:1 - 14:22) 1. யோபுவின் விரக்தியை வெளிப்படுத்தும் முதல் பேச்சு (3:1-26). 2. எலிப்பாஸின் பேச்சு: இது அன்பான எதிர்ப்பாக இருந்தாலும், யோபுவை மனந்திரும்ப அழைக்கிறது (4:1 - 5:27). 3. யோபுவின் பதில்: தனது வேதனையை விளக்கி, அனுதாபம் தேடுகிறார் (6:1 - 7:21). 4. பில்தாத் பேச்சு: "நீ தேவனைத் தூண்டிவிட்டாய்" எனக் குற்றம் சாட்டுகிறார் (8:1-22). 5. யோபுவின் பதில்: பில்தாத்தின் குற்றச்சாட்டில் நியாயமில்லை என மறுக்கிறார் (9:1 - 10:22). 6. சோபார் பேச்சு: "நீ தேவனுடன் உறவைச் சரிசெய்து கொள்" என வலியுறுத்துகிறார் (11:1-20). 7. யோபுவின் பதில்: சிநேகிதர்கள் தவறு செய்வதாகக் கூறி, தேவன் தன்னிடம் பேசுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் (12:1 - 14:22).

ஆ. இரண்டாம் சுற்று (15:1 - 21:34) 1. எலிப்பாஸ்: யோபு மூதாதையரின் ஞானத்தை மதிக்கவில்லை எனக் கூறுகிறார் (15:1-35). 2. யோபுவின் பதில்: தன்னை நியாயமில்லாமல் குற்றம் சாட்டுபவர்களிடமிருந்து தேவனிடம் மேல்முறையீடு செய்கிறார் (16:1 – 17:16). 3. பில்தாத்: யோபு அனுபவிக்க வேண்டியதைத் தான் அனுபவிக்கிறார் என்கிறார் (18:1-21). 4. யோபுவின் பதில்: தேவனிடத்தில் இரக்கத்திற்காக மன்றாடுகிறார் (19:1-29). 5. சோபார்: தேவனுடைய நீதியைக் குறித்து யோபு கேட்டது தவறு என்கிறார் (20:1-29). 6. யோபுவின் பதில்: தான் மெய்யானவற்றுடன் தொடர்பில் உள்ளதாகக் கூறுகிறார் (21:1-34).

இ. மூன்றாம் சுற்று (22:1 - 26:14) 1. எலிப்பாஸ்: யோபு தேவனின் நியாயத்தீர்ப்பை விமர்சித்ததைக் கண்டிக்கிறார் (22:1-30). 2. யோபுவின் பதில்: தேவன் எல்லாவற்றையும் அறிவார் என்றும், தான் குற்றமற்றவன் என்றும் கூறுகிறார் (23:1 - 24:25). 3. பில்தாத்: தேவனிடம் நேரடியாக யோபு முறையிட்டதைப் பரிகாசம் செய்கிறார் (25:1-6). 4. யோபுவின் பதில்: தேவன் அவர்கள் நினைப்பது போல் எளிமையானவர் அல்ல, அவர் பூரண ஞானமுள்ளவர் என்கிறார் (26:1-14).

ஈ. யோபுவின் இறுதி வாதம் (27:1 - 31:40) 1. யோபு தனது நீதியை உறுதிசெய்து, மனிதனால் தேவனுடைய ஞானத்தைக் கண்டறிய முடியாது என்கிறார் (27:1 – 28:28). 2. யோபு தனது கடந்த கால செழிப்பையும், தற்போதைய நிலைமையையும் ஒப்பிட்டுப் பேசி, தேவனிடம் பாதுகாப்பு கோருகிறார் (29:1 - 31:40).

உ. எலிகூவின் பேச்சுக்கள் (32:1 - 37:24) 1. விவாதத்தில் எலிகூவின் நுழைவு (32:1-22). 2. பாடுகளின் ஊடாகச் செல்ல அனுமதிப்பதிலும் தேவன் அன்பான நோக்கத்தை வைத்திருப்பார் (33:1-33). 3. யோபு தேவனுடைய உத்தமத்தைக் குறை கூறியதைக் கண்டிக்கிறார் (34:1-37). 4. கர்த்தருக்கென்று பொறுமையாகக் காத்திருத்தல் அவசியம் (35:1-16). 5. தேவன் யோபுவிற்குப் பாடுகளின் மூலம் போதிக்கிறார் (36:1-21). 6. தேவனின் மகத்துவத்தை மனிதரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது (36:22 - 37:24).

III. விடுதலை மற்றும் முடிவு (38:1 - 42:17)

அ. தேவன் யோபுவிடம் பேசுதல் (38:1 – 41:34) 1. தேவன் யோபுவிற்கு அளித்த முதல் பதில் (38:1 - 40:2). 2. யோபு தேவனுக்குத் தந்த பதில் (40:3-5). 3. தேவன் யோபுவிற்கு அளித்த இரண்டாம் பதில் (40:6 - 41:34).

ஆ. யோபுவின் ஏற்பும், தேவனின் ஆசீர்வாதமும் (42:1-17) 1. யோபு மனந்திரும்புதல் (42:1-6). 2. யோபு, எலிப்பாஸ், பில்தாத் மற்றும் சோபாரைக் கண்டிக்கிறார்; அவர்களுக்காக யோபு ஜெபிக்கிறார் (42:7-9). 3. தேவன் யோபுவின் சிறையிருப்பைக் மாற்றி, இரட்டிப்பான ஆசீர்வாதங்களைத் தந்து அவன் வாழ்க்கையை மீட்டெடுக்கிறார் (42:10-17).

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.